சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நகராட்சி மற்றும் மாநகராட்சி
அலகு 3
நகராட்சி மற்றும் மாநகராட்சி
கற்றல் நோக்கங்கள்
❖ நகராட்சி மற்றும் நகராட்சியின் பணிகளைப் பற்றி அறிந்து கொள்ளல்
❖ உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றி புரிந்து கொள்ளல்
❖ மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் பணிகள் பற்றி அறிந்து கொள்ளல்
❖ நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் வருவாய் ஆதாரங்கள் பற்றி அறிதல்
கோடை விடுமுறையின்போது முகிலன் தன் மாமா வீட்டிற்குச் சென்றான். ஒரு நாள் அவன் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது நகராட்சிப் பணியாளர்கள், வீட்டிற்கான சொத்துவரி மற்றும் இதர வரிகள் பற்றி அறிவித்ததைக் கேட்டான். உடனே முகிலன் மாமாவிடம் ஓடி வந்தான்.
மாமா : ஏன் ஓடிவருகிறாய்? என்ன நடந்தது?
முகிலன் : மாமா! நகராட்சி என்றால் என்ன? நாம் ஏன் வரி கட்டவேண்டும்?
மாமா : முகிலா! நகராட்சி என்பது உள்ளாட்சியின் ஓர் அமைப்பு. இங்கு 50,000 முதல் 1,00,000 வரை மக்கள் வாழ்கின்றனர். இது பல நமது வீடு அமைந்துள்ளது. நமது நகராட்சியில் ஏறத்தாழ 30 வார்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் 152 நகராட்சிகள் உள்ளன.
முகிலன் : நகராட்சியின் தலைவர் யார்?
மாமா : முகிலா! நகராட்சியின் தலைவர் நகராட்சியின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். நகராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். நகராட்சி உறுப்பினர்களின் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். நகராட்சியின் உறுப்பினர்களில் ஒருவர் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
முகிலன் : மாமா! நகராட்சியின் பணிகள் யாவை?
மாமா :
• தெருவிளக்கு அமைத்தல்.
• நூலகம் அமைத்துப் பராமரித்தல்
• அங்காடியைப் (சந்தையை) பராமரித்தல்.
• குடிநீர் வசதிகளை வழங்குதல்.
• குப்பைகளை அகற்றுதல்.
முகிலன் : இப்பணிகளை மேற்கொள்ள நகராட்சிக்கு வருவாய் எப்படி கிடைக்கிறது?
மாமா : இத்தகைய பணிகளை நகராட்சி மேற்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குகின்றன. மேலும் மக்கள் செலுத்தும் வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர் வரி, கடை வரி, சாலைவரி மற்றும் கழிவுநீர் அகற்றல் வரி போன்ற வரிகளின் மூலமும் வருவாய் கிடைக்கிறது.
தெரிந்து கொள்ளலாமா?
உள்ளாட்சி அமைப்பின் தந்தை – ரிப்பன் பிரபு
மாமா : நகராட்சி தவிர கீழ்க்காண்பனவும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் வருகின்றன.
• டவுன்ஷிப் நகரியம்)- (எ.கா) நெய்வேலி
• கண்டோன்மென்ட் (இராணுவக் கட்டுப்பாட்டு வாரியங்கள்) (எ.கா) குன்னூர், பரங்கிமலை
• அறிவிக்கப்பட்ட பகுதிகள்.
மாமா : உதாரணமாக, நாம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மற்றும் சேலம் போன்றவற்றை மாநகராட்சிகள் என அழைக்கிறோம்.
தெரிந்து கொள்ளலாமா?
❖ 1957 ஆம் ஆண்டு ‘பல்வந்த்ரா ராய் மேத்தா குழு’ அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
❖ 1978 ஆம் ஆண்டு ‘அசோக் மேத்தா குழு’ அறிக்கையின்படி இந்தியாவில் இரண்டடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
முகிலன் : மாநகராட்சி என்றால் என்ன?
மாமா : தமிழ்நாடு அரசு, மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் சில நகராட்சிகளை தரம் உயர்த்தும். அவை மாநகராட்சி என்று அழைக்கப்படும்
முகிலன் : மாமா ! தமிழ்நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?
மாமா : தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் சென்னை மாநகராட்சி மிகவும் பழைமையானது
முகிலன் : மாமா! மாநகராட்சியின் தலைவரும், உறுப்பினர்களும் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
மாமா : மாநகராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். மாநகராட்சியின் தலைவர் ‘மேயர்’ எனப்படுகிறார். அவரை மாநகராட்சியின் தந்தை எனவும் அழைப்பர். மாநகராட்சி உறுப்பினர்களின் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்திய நிர்வாக அதிகாரிகள் மற்றும் இதற்கு இணையானவர்கள் அரசால் மாநகராட்சியில் பணியமர்த்தப்படுகிறார்கள். பல நகர்ப்புறங்கள் மாநகராட்சிகளைக் கொண்டுள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?.
மாநகராட்சி
1. சென்னை
2. மதுரை
3. கோயம்புத்தூர்
4. திருச்சிராப்பள்ளி
5 சேலம்
6. திருநெல்வேலி
7. திருப்பூர்
8. ஈரோடு
9. வேலூர்
10. தூத்துக்குடி
11. தஞ்சாவூர்
13. ஓசூர்
14. நாகர்கோவில்
15. ஆவடி
16. தாம்பரம்
17. காஞ்சிபுரம்
18. கரூர்
19 கும்பகோணம்
20.கடலூர்
21. சிவகாசி
முகிலன் : மாநகராட்சியின் பணிகள் என்ன?
மாமா : நகரச் சாலைகளை அமைத்தல் மற்றும் பராமரித்தல்.
குடிநீர் வசதிகளை அமைத்தல்.
குப்பைகளை அகற்றுதல்.
நூலகங்களை அமைத்துப் பராமரித்தல்.
பூங்காக்களை அமைத்துப் பராமரித்தல்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல்
முகிலன் : மாநகராட்சிக்கு வருவாய் எவ்வாறு கிடைக்கிறது?
மாமா : மாநகராட்சிக்கு வருவாயானது தொழில் வரி, சொத்துவரி, பொழுதுபோக்கு வரி, சுங்கவரி மற்றும் சாலை வரிகள் மூலம் வருவாய் கிடைக்கிறது.
முகிலன் : நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தவிர வேறு என்ன அமைப்புகள் உள்ளன?
மாநகராட்சி, நகராட்சிக்கு அடுத்து பேரூராட்சி என்ற ஒரு அமைப்பு உள்ளது. இதன் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும். நிர்வாக அதிகாரிகளால் பேரூராட்சி நிர்வகிக்கப்படுகிறது. பேரூராட்சி என்பது 5,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டதாகும்.
முகிலன் : மாமா! உங்களால் நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களைப் பற்றி தெரிந்துக் கொண்டேன். நன்றி மாமா!
மாமா : நன்று! வா, கை கழுவிக் கொண்டு நாம் மதிய உணவு சாப்பிடலாம்.
1. உனது வார்டில் உள்ள பூங்கா மற்றும் நூலகங்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பற்றி உனது வகுப்பில் கலந்துரையாடு.
2. உனக்கு அருகில் உள்ள மாநகராட்சிக்கு, உனது ஆசிரியருடன் சென்று அங்கு நடக்கும் சபைக் கூட்டத்தைக் கவனி.
3. உனது பெற்றோர் என்னென்ன வரிகளை செலுத்துகின்றனர்?
மதிப்பீடு
அ .கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. தமிழ்நாட்டின் மிகப்பழைமையான மாநகராட்சி சென்னை ஆகும்.
2. உள்ளாட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர். ரிப்பன் பிரபு
3. 1957 ஆம் ஆண்டு பல்வந்த்ரா ராய் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
4. நகராட்சியின் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
ஆ. பொருத்துக.
1. கிராமப்புற உள்ளாட்சி – குடவோலை
2. ரிப்பன் கட்டிடம் – நகரியம்.
3. நெய்வேலி – கிராம ஊராட்சி
4. பேரூராட்சி – மாநகராட்சி
5. மேயர் – ரிப்பன் பிரபு
விடை :
1. கிராமப்புற உள்ளாட்சி – கிராம ஊராட்சி
2. ரிப்பன் கட்டிடம் – ரிப்பன் பிரபு
3. நெய்வேலி – நகரியம்.
4. பேரூராட்சி – குடவோலை
5. மேயர் – மாநகராட்சி
இ. காலி இடங்களை நிரப்புக.
ஈ. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. மாநகராட்சியின் பணிகள் யாவை?
மாநகராட்சியின் பணிகளாவன:
• நகரச் சாலைகள் அமைத்து பராமரித்தல்.
• குடிநீர் வசதி செய்து கொடுத்தல்.
• குப்பைகளை அகற்றுதல்.
• நூலகங்களை அமைத்துப் பராமரித்தல்.
• பூங்காக்களை அமைத்துப் பராமரித்தல்.
• பிறப்பு மற்றும் இறப்புப் பதிவேடுகளைப் பராமரித்தல்
2. உள்ளாட்சியின் அமைப்பு பற்றி குறிப்பு வரைக?
3. நகராட்சியின் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
நகராட்சியின் தலைவரை மக்களே நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கின்றனர்
4. தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை யாது?
தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆகும்.
• சென்னை
• தூத்துக்குடி
• மதுரை
• திருப்பூர்
• கோயம்புத்தூர்
• ஈரோடு .
• திருச்சிராப்பள்ளி
• தஞ்சாவூர்
• சேலம்
• திண்டுக்கல்
• திருநெல்வேலி
• ஓசூர்
• வேலூர்
• நாகர்கோவில்
5. நகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் யாவை?
• மத்திய, மாநில அரசு வழங்கும் நிதி.
• வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர் வரி, கடை வரி, சாலை வரி மற்றும் கழிவுநீர்அகற்றல் வரி.