தமிழ் : பருவம் 2 இயல் 1 : உண்மையே உயர்வு
1. உண்மையே உயர்வு
கதைப்பாடல்
உப்பு மூட்டை சுமந்துதான்
கழுதை ஒன்று வந்தது
ஓடை கடக்கும் நேரத்தில்
நீரில் மூட்டை விழுந்தது
உப்பு நீரில் கரைந்தது
எடை குறைந்து போனது
நனைந்த மூட்டை அதனையே
கழுதை முதுகில் ஏற்றியே
உரிமையாளர் கழுதையை
வேகமாக ஓட்டினார்
உப்பு எடை குறைந்ததால்
கழுதை மகிழ்ந்து சென்றது.
நாள்தோறும் உப்பு மூட்டையை
கழுதை மீது ஏற்றினார்
ஓடைக் கரையில் வந்ததும்
அசைத்துக் கீழே தள்ளிடும்
எடையும் குறைந்து போய்விடும்
கழுதை மகிழ்ச்சி கொண்டிடும்
புரிந்துகொண்ட உரிமையாளர்
பாடம் புகட்ட எண்ணினார்
அடுத்த நாளும் வந்தது
பஞ்சு மூட்டை ஒன்றையே
கழுதை மீது ஏற்றினார்
ஓடைக்குள்ளே வந்ததும்
அசைத்துக் கீழே தள்ளியது
எடை குறையும் என்றுதான்
உப்பைப் போல நினைத்தது
நீரில் நனைந்த பஞ்சுகளால்
எடையும் அதிகம் ஆனது
உரிமையாளர் மூட்டையை
கழுதை முதுகில் ஏற்றினார்
கனத்த மூட்டை அழுத்தவே
கழுதை வருந்தி அழுதது
உண்மையான உழைப்புத்தான்
வாழ்வில் உயர்வைத் தந்திடும்
ஏய்த்துப் பிழைக்க எண்ணினால்
என்றுமில்லை வெற்றியே!
பாடல் பொருள்
உரிமையாளர், தம் கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஓடை வழியே சென்றார். ஓடையைக் கடந்து செல்லும்போது, கழுதையின் முதுகிலிருந்த மூட்டைகள் நீரில் விழுந்தன. அதனால், உப்பு கரைந்து எடை குறைந்தது. எடை குறைவதை அறிந்துகொண்ட கழுதை, நாள்தோறும் ஓடைநீரில் மூட்டைகளை அசைத்துத் தள்ளியது. கழுதையின் ஏமாற்று வேலையைப் புரிந்துகொண்ட உரிமையாளர், அதற்குப் பாடம் புகட்ட எண்ணினார். மற்றொரு நாள் உரிமையாளர், கழுதையின் முதுகில் பஞ்சுமூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஓடை வழியே சென்றார். அவரை ஏமாற்ற நினைத்த கழுதை, மூட்டைகளை அசைத்து நீரில் தள்ளியது. ஆனால், நீரில் நனைந்ததால் பஞ்சுமூட்டைகளின் எடை கூடின. உரிமையாளரை ஏமாற்ற நினைத்துத் தன்னைத்தானே கழுதை ஏமாற்றிக்கொண்டது. ஆகையால், உண்மையான உழைப்பே உயர்வு தரும். பிறரை ஏமாற்றி நாம் வாழ்தல் கூடாது.
மீண்டும் மீண்டும் சொல்லலாமா?
கூவுற கோழி கொக்கரக் கோழி
கொக்கரக் கோழி கொழு கொழு கோழி
கொழு கொழு கோழி கொத்தற கோழி
தோணி மேலே கோணி
கோணி மேலே அணில்
அணில் கையில் கனி
மொழியோடு விளையாடு
சொற்களைக் கூறுவோம் கைகளைத் தட்டுவோம்
மாணவர்களை வட்டமாக நிற்கச் செய்க. உப்பு, உடை, உண்டியல், போன்று ‘உ’ எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கூறினால் மாணவர்கள் ஒருமுறை கையைத் தட்டவேண்டும். கழுதை, கடை, கண் போன்ற ‘க’ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கூறினால் இருமுறை கையைத் தட்டவேண்டும். இவை அல்லாத சொற்களைக் கூறினால் கைகளைத் தட்டக்கூடாது. இவ்வாறு எழுத்துகளை மாற்றி விளையாடிப் பார்க்கலாம்.
பயிற்சி
வாங்க பேசலாம்
1. சுமப்பதற்கு எளிதானது பஞ்சுமூட்டையா? உப்பு மூட்டையா? குழுவில் கருத்தைப் பகிர்க.
• சுமப்பதற்கு எளிதானது பஞ்சு மூட்டை ஆகும். ஏனெனில் அதன் எடை குறைவு
• உப்பு மூட்டை சுமப்பதற்கு மிகவும் கடினம். ஏனெனில் அதன் எடை அதிகம்.
2. கதைப்பாடலில் உள்ள கருத்துகளை உம் சொந்த நடையில் கூறுக.
உரிமையாளர் ஒருவர் தம் கழுதையின் மீது தினமும் உப்பு மூட்டை ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பொழுது ஒருநாள் உப்பு மூட்டை அருகிலுள்ள ஓடையில் விழுந்தது. மீண்டும் அம்மூட்டையை கழுதையில் ஏற்றியபோது அதன் எடை குறைந்திருந்தது. அதனைக் கண்ட கழுதை மறுநாளும் அவ்வாறே உப்பு மூட்டையை ஓடையின் அருகில் வந்ததும் நீரில் தள்ளியது. கழுதையின் சூழ்ச்சியை அறிந்துகொண்ட அதன் உரிமையாளர் மறுநாள் பஞ்சுமூட்டையை கழுதையின்மேல் ஏற்றினார். அந்த ஓடையின் அருகில் வந்ததும் மூட்டையை கீழே தள்ளியது. மீண்டும் மூட்டையை கழுதையின் மேல் தூக்கி வைத்தபோது அதன் எடை அதிகமானது. உரிமையாளரை ஏமாற்ற நினைத்த கழுதை ஏமாந்து போனது.
நீதி : உழைப்பே உயர்வு தரும்.
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ‘சுமந்து’ – இச்சொல்லின் பொருள் _____________
(அ) தாங்கி
(ஆ) பிரிந்து
(இ) சேர்ந்து
(ஈ) விரைந்து
விடை: அ) தாங்கி
2. ‘வேண்டுமென்று’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
(அ) வேண்டு + மென்று
(ஆ) வேண்டும் + என்று
(இ) வேண் + டுமென்று
(ஈ) வேண்டி + என்று
விடை: ஆ) வேண்டும் + என்று
3. ‘நினைத்தது’ – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் _____________
(அ) மறந்தது
(ஆ) பேசியது
(இ) எண்ணியது
(ஈ) வளர்ந்தது
விடை: அ) மறந்தது
இப்பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?
வந்தது – விழுந்தது
போய்விடும் – கொண்டிடும்
எண்ணினார் – ஏற்றினார்
தள்ளிடும் – சென்றிடும்
சிறு வட்டத்தில் உள்ள எழுத்தில் முடியும்படி சொல் உருவாக்குக.
1. குடை
2. தடை
3. உடை
4. ஓடை
5. எடை
6. கடை
படக்குறியீடுகளைக் கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கலாமா?
1. புன்னகை
2. அழுகை
3. சினம்
4. கவலை
5. சிந்தனை
6. பயம்
மீண்டும் மீண்டும் சொல்லலாமா?
கூவுற கோழி கொக்கரக் கோழி
கொக்கரக் கோழி கொழு கொழு கோழி
கொழு கொழு கோழி கொத்தற கோழி
தோணி மேலே கோணி
கோணி மேலே அணில்
அணில் கையில் கனி
மொழியோடு விளையாடு
சொற்களைக் கூறுவோம் கைகளைத் தட்டுவோம்
மாணவர்களை வட்டமாக நிற்கச் செய்க. உப்பு, உடை, உண்டியல், போன்று ‘உ’ எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கூறினால் மாணவர்கள் ஒருமுறை கையைத் தட்டவேண்டும். கழுதை, கடை, கண் போன்ற ‘க’ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கூறினால் இருமுறை கையைத் தட்டவேண்டும். இவை அல்லாத சொற்களைக் கூறினால் கைகளைத் தட்டக்கூடாது. இவ்வாறு எழுத்துகளை மாற்றி விளையாடிப் பார்க்கலாம்.
செயல்திட்டம்
எளிய கதைப்பாடல்களைத் தேடிப் படித்து வந்து வகுப்பில் கூறுக.
ஆட்டு மந்தை ஒன்றிடம்
அருமை நண்பன் போலவே
காட்டு ஓநாய் வந்ததே
கனிந்த வார்த்தை உரைத்ததே
அன்பு மிக்க தோழரே
அடியேன் உங்களிடம் வேண்டுகிறேன்
என்றும் உங்கள் நண்பனாய்
இருக்கவே விரும்பி வந்தேனே!
என்னை உங்கள் காவல்நாய்
குரைத்து குரைத்து விரட்டுதே
உங்கள் காவல் நாயை விரட்டினாய்
கஷ்டங்கள் யாவும் தீர்ந்திடுமே
ஆவலோடு நாமெல்லாம் அருமை
நண்பர்கள் ஆகி விடலாமே
உண்மை என்று நம்பிய
ஆடுகள் எல்லாமே உண்மையாக
காவல் காத்த நாயை
ஓட ஓட விரட்டியதே
காவல் இல்லா ஆடுகளை
ஒவ்வொன்றாய் அடித்து தின்றதே!