தமிழ் : பருவம் 1 இயல் 8 : நூலகம்
8. நூலகம்
மாமா!…..மாமா! என அழைத்தபடி தேனருவி வீட்டிற்குள் வந்தாள்.
மாமா: என்னம்மா! தேனருவி ஏன் இப்படி ஓடி வருகிறாய்?
தேனருவி: நான் வழக்கமாகப் பள்ளிக்கூடம் போகும் வழியில் உள்ள ஒரு கட்டடத்தைத் தோரணம் கட்டி அழகுபடுத்தியிருந்தார்கள். அதில் நூலகம் என்று எழுதியிருக்கு அப்படின்னா… என்ன மாமா….?
மாமா: அதுவா! நூல்களைச் சேமித்து வைத்திருக்கும் இடம்தான் நூலகம். அது ஒரு பொது இடம். அங்கு அனைவரும் வந்து புத்தகம் படிப்பாங்க! இன்று “நூலக தினம்” அதைக் கொண்டாடுவதற்காக நூலகத்தை அழகுபடுத்தியிருப்பார்கள்.
கேட்கும் செய்திகளைப் புரிந்துகொண்டு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துதல்
தேனருவி: அப்படியா? நாமும் சென்று நூலக தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வோமா?
மாமா: சரி தேனருவி! வா போகலாம்.
தேனருவி: நூலகத்தைப் பற்றி எனக்கு விளக்கமாகச் சொல்லுங்க… மாமா.
மாமா: சொல்கிறேன் கேள், ‘நூல் + அகம் = நூலகம்’. பல்வேறு துறை சார்ந்த நூல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடமே நூலகம் ஆகும். நூல் நிலையம், புத்தகச் சாலை என்பன நூலகத்தின் வேறு பெயர்களாகும்.
தேனருவி: மாமா இங்கு என்னென்ன நூல்கள் இருக்கும்?
மாமா: நூலகத்தில் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், தமிழ், ஆங்கிலம், மற்றும் வேறு பல மொழிகளைச் சார்ந்த இலக்கிய நூல்கள், அறிவியல் நூல்கள், தத்துவ நூல்கள், வரலாற்று நூல்கள், பூகோள நூல்கள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.
நூல்கள் மட்டுமின்றி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், பல்வேறு வேலைவாய்ப்புகளைப் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கும் இதழ்கள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.
தேனருவி: அடேங்கப்பா! நூலகத்தில் இவ்வளவு வகை நூல்களா? அது சரி மாமா நூலகத்தினால் நமக்கு என்ன பயன்?
மாமா: ம்………… என் செல்லக் குட்டி கேட்டால் சொல்லாமல் இருப்பேனா? இங்கு வந்து நமக்குத் தேவையான அல்லது பிடித்த நூல்களை எடுத்துப் படிக்கலாம். நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தால் நூல்களை வீட்டிற்கே கொண்டு சென்றும் படிக்கலாம் ஆனால் குறிப்பிட்ட நாளில் மீண்டும் புத்தகங்களைத் திருப்பி அளித்து விடவேண்டும். இதனால்,
❖ நம் அறிவு வளர்கிறது.
❖ நம்முடைய நேரம் பயனுள்ள முறையில் அமைகிறது.
❖ வேலைவாய்ப்புத் தொடர்பான நூல்களைப் படிப்பதால் நல்ல வேலையில் சேரவும் முடிகிறது.
❖ மூளை புத்துணர்ச்சி பெறுகிறது.
❖ தன்னம்பிக்கை ஏற்படுகிறது.
தேனருவி: மாமா! நூலகம் பற்றி நிறைய செய்திகளைத் தெரிந்து கொண்டேன்.
மாமா: தேனருவி குழந்தைகளுக்கான சிறப்பம்சம் நூலகத்தில் உள்ளது. அது என்ன தெரியுமா?
❖ இங்கே குழந்தைகளுக்கான பிரிவு தனியாகவே உள்ளது.
❖ நூலகத்தில் உள்ள “வாசகர் வட்டம்” மூலமாக “நூலக தினத்தன்று” குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நூலகங்களிலும் நடத்தப்படுகின்றன.
❖ போட்டிகளில் கலந்து கொள்வோருக்காகவும், போட்டித் தேர்வினை எழுதுவோருக்காகவும் தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
❖ ஒவ்வொரு குழந்தையும் அவரவர் வீட்டில் நூலகம் அமைக்க வேண்டும் அதில் நிறைய புத்தகங்களைச் சேமித்து வைத்து புத்தகம் படிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தேனருவி: நன்றி மாமா!………. நான் நம் வீட்டில் ஒரு “சிறிய நூலகத்தை ” அமைப்பேன்.
அதில் நிறைய நூல்களைச் சேமித்து வைத்துப் படிப்பேன்
அறிந்துகொள்வோம்
• படிப்புதான் ஒருவன் உயர வழி
– காமராசர்
• புத்தகங்கள் படிப்பதையே வழக்கமாக்குங்கள்.
-அப்துல்கலாம்
நிறுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்திப் படிப்போமா?
நூலகத்திற்கு நீ சென்றுள்ளாயா? அங்குப் பலவகையான நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறுகதைப் புத்தகங்கள், புதினங்கள், வரலாற்று நூல்கள், இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள் என வரிசைப்படுத்தி வைத்திருப்பர். சிறுவர் இதழ்கள் செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் போன்ற இதழ்களும் உண்டு. ஆஹா! அங்குச் சென்று படிக்கத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது. நூலகத்தின் பொறுப்பாளர் நூலகர் ஆவார். நூலகத்தில் அமைதி காத்திடல் வேண்டும்.
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள் பூமலர். விளையாடுவதற்காகத் தன் தோழி மாலதி வீட்டிற்குச் சென்றாள் வழியில் இரண்டு சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர். பூமலர் அவர்களிடம், ஓணானை அடிக்காதீர்கள், உங்களை அடித்தால் உங்களுக்கு வலிக்கும் அல்லவா? அது போல அதற்கும் வலிக்கும் எனவே உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்றாள். சிறிது யோசித்த அச்சிறுவர்கள் கற்களைக் கீழே போட்டுவிட்டுத் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
1. பூமலர் யார் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்?
பூமலர் தன் தோழி மாலதி வீட்டிற்கு விளையாடச் சென்றாள்.
2. சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?
சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர்.
3. உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறியவர் யார்?
வள்ளுவர், வள்ளலார், புத்தர்.
4. இப்பத்தியில் இருந்து நீ அறிந்து கொண்டது என்ன?
எவ்வுயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது.
பயிற்சி
வாங்க பேசலாம்
1. உன் பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களுள் நீ படித்த ஏதேனும் ஒரு நூல் / கதை பற்றி வகுப்பறையில் கலந்துரையாடு.
காளி : நான் நேற்று நூலகத்திற்கு என் தந்தையுடன் சென்று சிறுவர் நீதிக் கதைகள் என்னும் புத்தகம் படித்தேன்.
இசக்கி : புத்தகத்தில் படித்த கதையொன்றை சொல்லேன்.
காளி : ஓர் அழகிய கிராமம். அங்கு முத்து என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். முத்து தினமும் தன்னுடைய ஆடுகளை காட்டிற்கு கூட்டிச்சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவான். முத்து சில நாள்கள் தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. தன் மகனான ராமுவிடம் ஆடு மேய்க்கும் பொறுப்பை கொடுத்தான். பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் ராமுவும் ஆடுகளை ஓட்டிச் சென்றான்.
ராமு முதல் நாள் காலையில் பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஆடுகளை ஓட்டிச் சென்றான். காட்டை அடைந்ததும் ஆடுகள் புற்களை மேயத் தொடங்கின. ராமு ஒரு பாறை மேல் அமர்ந்தான். பொழுது போகவில்லை. தூரத்தில் ஒரு சிலர் வயல் வேலை செய்து கொண்டிருந்தனர். வேலை செய்பவர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணிய ராமு, திடீரென “புலி வருது, புலி வருது” என்று கூச்சிலிட்டான்.
ராமுவின் அலறலைக் கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் புலியை விரட்ட கைகளில் கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு ராமு இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தனர்.
வந்தவர்கள் அனைவரும் புலி எங்கே? புலி எங்கே? என்று ராமுவிடம் கேட்டனர். ராமுவோ புலியும் வரவில்லை கிளியும் வரவில்லை எனக்குப் பொழுது போகவில்லை. அதனால் பொய் கூறி உங்களை அழைத்தேன் என்றான்.
மறுநாள் ராமு ஆடுகளை மேய்க்க விட்டு அதே பாறையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் உண்மையாகவே ஒரு புலி வருவதைப் பார்த்தான். ஒரு பாறையின் பின்னால் ஒளிந்து கொண்டு “புலி, புலி” என்று அலறினான். ஆனால் உதவிக்கு யாரும் வரவில்லை. பாய்ந்து வந்த புலி ஓர் ஆட்டுக்குட்டியை தூக்கிக் கொண்டு காட்டிற்குள் சென்று விட்டது.
சேகர் : கதை அருமையாக இருந்தது.
சஞ்சய் : கதை உணர்த்தும் நீதி என்ன?
காளி : ஒருவன் வார்ததையில் உண்மை இல்லை என தெரிந்தால் அவன் எப்போது உண்மை சொன்னாலும் அதை யாரும் உண்மை என நம்ப மாட்டார்கள்.
பிரியா : நூலகத்தில் வேறு என்னென்ன பார்த்தாய்?
காளி : நூலகத்தில் இலக்கியம், கதைகள், வரலாறு, அறிவியல், கண்டுபிடிப்புகள், சுகாதாரம், சட்டம், சிறுவர் இலக்கியம் என பல தலைப்புகளின் கீழ் புத்தகங்களை அலமாரிகளில் அடுக்கி வைத்திருக்கின்றனர். நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் தனித்தனியாக அடுக்கப்பட்டு உள்ளன.
பிரபா : வேறு சிறப்புகள் ஏதாவது உண்டா ?
காளி : மின் நூலகம், போட்டித் தேர்வுகளுக்கு தயாரக்க உதவும் புத்தகங்கள் தனியாக இருந்தது. என் தந்தையார் பொன்னியின் செல்வன், கொற்கை போன்ற நூல்களை படிப்பதற்காக பதிவு செய்து எடுத்து வந்தார். அமைதியாக படிக்க நூலகத்தில் பல வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்_____________.
அ) புத்தகம்
ஆ) கட்டகம்
இ) ஒட்டகம்
ஈ) கோல்
விடை : அ) புத்தகம்
2. அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள் __________________.
அ) அறிவில் சிறந்தவர்
ஆ) கவிதை எழுதுபவர்
இ) பாடல் பாடுபவர்
ஈ) மருத்துவம் பார்ப்பவர்
விடை : அ) அறிவில் சிறந்தவர்
3. தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________.
அ) தேன் + அருவி
ஆ) தே + னருவி
இ) தே + அருவி
ஈ) தேனி + அருவி
விடை : அ) தேன் + அருவி
4. புத்துணர்ச்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.
அ) புதுமை + உணர்ச்சி
ஆ) புத்து + உணர்ச்சி
இ) புதிய + உணர்ச்சி
ஈ) புது + உணர்ச்சி
விடை : அ) புதுமை + உணர்ச்சி
5. அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல் ___________.
அ) உள்ளே
ஆ) தனியே
இ) புறம்
ஈ) சிறப்பு
விடை : இ) புறம்
6. தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.
அ) தேன் இருக்கும்
ஆ) தேனிருக்கும்
இ) தேனிறுக்கும்
ஈ) தேனி இருக்கும்
விடை : ஆ) தேனிருக்கும்
வினாக்களுக்கு விடையளி
1. நூலகத்தின் வேறு பெயர்கள் யாவை?
வாசக சாலை, படிப்பகம், புத்தகச்சாலை, சுவடிச்சாலை நூல்நிலையம், சுவடியகம்.
2. நூலகத்தின் பயன்கள் யாவை?
* நம் அறிவு வளர்கிறது.
* நம்முடைய நேரம் பயனுள்ள முறையில் அமைகிறது.
* வேலைவாய்ப்புத் தொடர்பான நூல்களைப் படிப்பதால் நல்ல வேலையில் சேரவும் முடிகிறது.
* மூளை புத்துணர்ச்சி பெறுகிறது.
* தன்னம்பிக்கை ஏற்படுகிறது.
3. நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன?
• குழந்தைகளுக்கான பிரிவு தனியாகவே உள்ளது.
• நூலகத்தில் உள்ள “வாசகர் வட்டம்” மூலமாக “நூலக தினத்தன்று” குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நூலகங்களிலும் நடத்தப் படுகின்றன.
• போட்டிகளில் கலந்து கொள்வோருக்காகவும், போட்டித் தேர்வினை எழுதுவோருக்காகவும் தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
• ஒவ்வொரு குழந்தையும் அவரவர் வீட்டில் நூலகம் அமைக்க வேண்டும் அதில் நிறைய புத்தகங்களைச் சேமித்து வைத்து புத்தகம் படிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. நீ நூலகத்திற்குச் சென்று வந்ததைப் பற்றி எழுதுக.
நான் எங்கள் ஊரில் உள்ள ஊர்ப்புற நூலகத்திற்குச் சென்றேன். அம்புலிமாமா, யானைச்சவாரி, சிறுவர்மலர், தங்கமலர் நூல்களைப் படித்தேன். சிறுவர் மலர், தங்கமலர் பழைய புத்தகங்களில் நூலகரிடம் கேட்டு வண்ணமிட்டு மகிழ்ந்தேன். மிகவும் அமைதியாக படிக்கச் சொன்னார்கள். தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், மரியாதை ராமன் கதைகளைப் படித்தேன். மகிழ்ச்சியாய் இருந்தது. என் நண்பர்களுக்கு கதைகள் கூறினேன்.
சொற்களை உருவாக்குவோமா?
எ.கா: வரிக்குதிரை – வரி, குதிரை, குதி, திரை, வரை.
1. திருநெல்வேலி – திரு, நெல், வேலி, வேதி, வேல், நெல்லி.
2. பனிப்புயல் – பனி, புயல், பல், புல்.
எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்குக
நிறுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்திப் படிப்போமா?
நூலகத்திற்கு நீ சென்றுள்ளாயா? அங்குப் பலவகையான நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறுகதைப் புத்தகங்கள், புதினங்கள், வரலாற்று நூல்கள், இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள் என வரிசைப்படுத்தி வைத்திருப்பர். சிறுவர் இதழ்கள் செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் போன்ற இதழ்களும் உண்டு. ஆஹா! அங்குச் சென்று படிக்கத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது. நூலகத்தின் பொறுப்பாளர் நூலகர் ஆவார். நூலகத்தில் அமைதி காத்திடல் வேண்டும்.
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள் பூமலர். விளையாடுவதற்காகத் தன் தோழி மாலதி வீட்டிற்குச் சென்றாள் வழியில் இரண்டு சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர். பூமலர் அவர்களிடம், ஓணானை அடிக்காதீர்கள், உங்களை அடித்தால் உங்களுக்கு வலிக்கும் அல்லவா? அது போல அதற்கும் வலிக்கும். எனவே உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்றாள். சிறிது யோசித்த அச்சிறுவர்கள் கற்களைக் கீழே போட்டுவிட்டுத் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
1. பூமலர் யார் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்?
பூமலர் தன் தோழி மாலதி வீட்டிற்கு விளையாடச் சென்றாள்.
2. சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?
சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர்.
3. உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறியவர் யார்?
வள்ளுவர், வள்ளலார், புத்தர்.
4. இப்பத்தியில் இருந்து நீ அறிந்து கொண்டது என்ன?
எவ்வுயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது.
பொருத்தமான சொல்லால் நிரப்புக
1. தீ இல்லாமல் சமைக்க முடியாது.
2. விதை இல்லாமல் செடி வளராது.
3. டயர் இல்லாமல் வண்டி ஓடாது.
செயல் திட்டம்
அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று உனக்கு விருப்பமான சிறுவர் இதழ்களைப் படித்து அதில் உனக்குப் பிடித்த இரண்டினை எழுதி வரவும்.
• சுட்டி விகடன்
• தங்க மலர்