தமிழ் : பருவம் 1 இயல் 4 : கல்யாணமாம் கல்யாணம்!
4. கல்யாணமாம் கல்யாணம்!
பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
பூலோகமெல்லாம் கொண்டாட்டமாம்
யானை மேலே ஊர்கோலமாம்
ஒட்டகச்சிவிங்கி நாட்டியமாம்
கொர்கொர் குரங்கு பின்பாட்டாம்
தடபுடலான சாப்பாடாம்
தாலிகட்டும் வேளையிலே
மாப்பிள்ளை பூனையக் காணோமாம்
சந்தடி புந்தடி செய்யாமல்
சமையல்கட்டில் நுழைந்தாராம்
வாங்கிவச்சப் பாலையெல்லாம்
ஒரே மூச்சில் குடித்தாராம்
பார்த்துவிட்ட பெண்ணின் தாயும்
பலத்த சத்தம் போட்டாராம்
திருட்டு மாப்பிள்ளைக்கு என் பெண்ணை
திருமணம் செய்ய முடியாது
வேண்டாம் இந்த சம்பந்தம்
வெட்கக்கேடு போய் வாரோம்
– நாட்டுப்புறப் பாடல்
சிந்திக்கலாமா?
இப்பாடலில் வரும் பூனைக்கும் பூனைக்கும் பதிலாக யானைக்கும் பூனைக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்திருந்தால் எவ்வாறு இருக்கும்? வகுப்பறையில் கலந்துரையாடுக.
பயிற்சி
வாங்க பேசலாம்
1. இப்பாடலை ஓசை நயத்துடன் பாடி மகிழ்க.
2. உனது பகுதியில் வழங்கும் உனக்குப் பிடித்த நாட்டுப்புறப் பாடல்களை அறிந்து வகுப்பறையில் பாடுக.
களத்துக்குள்ளே காலை வைத்து – ஏலங்கிடி லேலோ
கிழட்டுமாடும் மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ!
கிழக்கத்திமா டெல்லாங்குடி – ஏலங்கிடி லேலோ!
கீழே பார்த்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ!
வடக்கத்திமா டெல்லாங்குடி – ஏலங்கிடி லேலோ!
வாரிவாரி மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ!
எல்லா மாடும் சேர்ந்து தானும் – ஏலங்கிடி லேலோ!
ஏகமாத்தான் மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ!
கால்படவும் கதிருபூரா – ஏலங்கிடி லேலோ!
கழலுதையா மணிமணியா – ஏலங்கிடி லேலோ!
மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்கு இலசா
இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயை நம்பி ஏலேலோ பழமிருக்க ஐலசா
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்
பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
கல்யாணமாம்
கொண்டாட்டமாம்
ஊர்கோலமாம்
நாட்டியமாம்
பின்பாட்டாம்
சாப்பாடாம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. பூலோகமெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
அ) பூலோக + மெல்லாம்
ஆ) பூலோகம் + மெல்லாம்
இ) பூலோகம் + எல்லாம்
ஈ) பூலோக + எல்லாம்
விடை : இ) பூலோகம் + எல்லாம்
2. கல்யாணத்தில் நாட்டியமாடுபவர் ____________.
அ) பூனை
ஆ) ஒட்டகச்சிவிங்கி
இ) யானை
ஈ) குரங்கு
விடை : ஆ) ஒட்டகச்சிவிங்கி
3. பாலை + எல்லாம் இதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பாலையெல்லாம்
ஆ) பாலை எல்லாம்
இ) பாலைல்லாம்
ஈ) பாலெல்லாம்
விடை : அ) பாலையெல்லாம்
இணைந்து செய்வோம்
கோப்பைகளை அவற்றின் சரியான தட்டுகளோடு பொருத்துக.
சிந்திக்கலாமா?
இப்பாடலில் வரும் பூனைக்கும் பூனைக்கும் பதிலாக யானைக்கும் பூனைக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்திருந்தால் எவ்வாறு இருக்கும்? வகுப்பறையில் கலந்துரையாடுக.
கலையும் கைவண்ணமும்
வண்ணமிட்டு மகிழ்க
செயல் திட்டம்
உமது பகுதியில் வழங்கும் நாட்டுப்புறக் கதைகள் இரண்டினை அறிந்து வருக.
நாட்டுப்புறக் கதைகள்
1. இடிக்கும் அர்ச்சுனனுக்கும் என்ன தொடர்பு?
வனவாசத்தின் போது அர்ச்சுனன் காளபைரவ காட்டில் தவம் செய்யத் தொடங்கினான். எழுபதடிக்கம்பம் ஒன்றை நட்டு அதன்மேல் இளநீர் ஏழுவைத்து அவற்றின் மேல் ஏழு விளம்பழங்களை வைத்தான். விளாம்பழங்களுக்கு மேல் ஏழு எலுமிச்சைகளை வைத்து அவற்றின் மேல் ஏழு கொட்டைப்பாக்குகளையும் அதற்கு மேல் ஏழு குன்றிமணிகளையும் வைத்தான். குன்றிமணிகளுக்கு மேல் ஏழு கடுகுகளையும் கடுகுகளுக்கு மேல் ஏழு செப்பூசிகளையும் வைத்தான். செப்பூசிகளின் மீது எறி நின்று செய்த தவத்தின் கோரத்தால் வெப்பம் தகித்தது. தேவர்கள் அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்க நினைத்தனர். ஆனால் மேகராசன் மின்னலை அர்ச்சுனனுக்கு மணமுடித்துக் கொடுத்து இடி அஸ்திரமும் கொடுத்தான்.
2. சோம்பேறி மனிதன்
ஒரு ஊரில் சோம்பேறி மனிதன் இருந்தானாம். எந்த வேலையும் செய்யாமல் தின்பதும், தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட வியாதிகள். வைத்தியர் வீட்டுக்குக் கூட போக முடியாமல் வைத்தியரை வீட்டுக்கு வரவழைத்தானாம்.
வைத்தியர் ஒரு பாட்டில் நிறைய சூரணம் கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்போதெல்லாம் சாப்பிடு. சூரணம் தீர்ந்ததும் வியாதியும் பறந்துடும்னு சொன்னாராம். சோம்பேறி வீட்டுக்கு வந்து காத்திருந்தானாம். எதற்கு? எப்போது வேர்க்குமென்று.
அப்போது அவன் மனைவி சொன்னாளாம். நீங்கள் ஏதாச்சும் வேலை செஞ்சாதான் வேர்க்கும் என்று. சோம்பேறியும் தன் துணியைத் துவைப்பது, தோட்ட வேலை செய்வது, கடைக்குப் போவது. நிலத்தில் வேலை செய்வது என்று உழைக்க ஆரம்பித்தான்.
ஒவ்வொரு முறை வியர்க்கும் போதும் சூரணம் சாப்பிடவும் மறக்கவில்லை. கொஞ்ச நாளிலேயே வியாதி குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான். ஆனால் சூரணம் பாதிதான் தீர்ந்திருந்தது. மீதியை வைத்தியரிடம் கொடுத்து விட்டு கேட்டானாம். “எப்படி பாதி மருந்திலேயே எனக்குக் குணமானது?” என்று.
அதற்கு அவர் உன் வியாதி மருந்தால் தீரவில்லை. சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம் போய் குணமடைந்து விட்டாய். நான் கொடுத்து மருந்தே இல்லை. வெறும் துளசி, வெல்லம் மட்டுமே கலந்தது என்றார்.