சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 1 : குடும்பம்
அலகு 1
குடும்பம்
கற்றல் நோக்கங்கள்
* குடும்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளல்
* குடும்ப உறுப்பினர்களின் உறவுமுறைப் பற்றி புரிந்து கொள்ளல்
* குடும்பங்களின் வகைகள் பற்றி தெரிந்து கொள்ளல்
* உறவு மற்றும் சமுதாயம் இவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள் பற்றி புரிந்து கொள்ளல்
* குடும்பம் பாதுகாப்பு அளிக்கிறது என்பதனைப் புரிந்து கொள்ளல்
உரையாடல்
(மதியும், கபீரும் நண்பர்கள். இருவரும் அங்காடியில் சந்திக்கின்றனர்.)
மதி : கபீர், நாம் சந்தித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன? நீ எப்படி இருக்கிறாய்?
கபீர் : நன்றி, நான் நலமாக உள்ளேன். உன்னை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது.
மதி : நான் என் மாமாவுடன் நீலகிரி காட்டிற்கு (மசினாங்குடி) சுற்றுலா சென்றது உனக்குத் தெரியுமா?
கபீர் : அப்படியா! தெரியாதே! அதைப்பற்றிக் கூறு.
மதி : சுற்றுலா செல்வதற்கு அது மிகவும் அருமையான இடம். நான் பறவைகளும், விலங்குகளும் காட்டில் வாழ்வதைப் பார்த்தேன்.
கபீர் : அப்படியா!
மதி : ஆமாம்! அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் அங்கு விலங்குகள் குடும்பமாக வாழ்வதைக் கண்டேன்.
கபீர் : உண்மையாகவா! மனிதர்கள் மட்டும் தான் குடும்பமாக வாழ்கின்றனர் என்று நான் நினைத்தேன்.
மதி : உனக்கு வாய்ப்பு கிடைத்தால் நீயும் ஒரு முறை அங்கு சென்று பார்த்து விட்டு வா!
கபீர் : நிச்சயமாக, இந்த விடுமுறையில் என் தந்தையிடம் கூறி அழைத்துச்செல்ல சொல்கிறேன்.
மதி : மிகவும் நல்லது! இப்பொழுது நாம் ஒரு சொல் விளையாட்டை விளையாடுவோமா? நான் கேள்விகள் கேட்கிறேன். நீ பதில் சொல்ல வேண்டும், சரியா?
கபீர் : நான் எப்பொழுதும் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கேள்விகளைக் கேள்!
மதி : சிங்கங்கள் எங்கு வாழ்கின்றன?
கபீர் : சிங்கங்கள் காடுகளில் வாழ்கின்றன.
மதி : ஆம். சிங்கங்கள் காடுகளில் உள்ள குகைகளில் குடும்பமாக வாழ்கின்றன.
கபீர் : சரி… சரி அடுத்த கேள்வியைக் கேள்.
மதி : பறவைகள் எங்கு வாழ்கின்றன?
கபீர் : பறவைகள் மரங்களிலும் உயரமான இடங்களிலும் கூடுகளில் வாழ்கின்றன.
மதி : மிகவும் சரி, யானைகள் கூட்டமாக வாழ்வதை நாம் எவ்வாறு அழைப்போம்?
கபீர் : யானைக்கூட்டம்.
மதி : ஆம். நீ கூறுவது சரி.
கபீர் : நன்று நாம் விலங்குகள் கூடிவாழ்வதைப் பற்றித் தெரிந்துகொண்டோம்.
மதி : ஆம். உண்மைதான். உன்னுடன் எனது கருத்துகளை பகிர்துகொண்டது மகிழ்ச்சியாகவுள்ளது.
கபீர் : நாமும் நமது வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது.
மதி : ஆமாம். நாமும் நமது குடும்பத்துடன் இணைவோம்.
வாருங்கள் நண்பர்களே நமது குடும்பங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
நமது குடும்பம்
தாய், தந்தை, குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் வாழ்வதை குடும்பம் என்கிறோம்.
உன் தெருவில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன?
தனி நபர்கள் சேர்ந்து குடும்பத்தை உருவாக்குகின்றனர். பல குடும்பங்கள் சேர்ந்து சமுதாயத்தை உருவாக்குகின்றன.
மக்கள் பன்முகத்தன்மையுடன் வெவ்வேறு மொழி, பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களுடன் உலகத்தில் குடும்பங்களாக வாழ்கின்றனர்.
இந்தியக் குடும்பம்
மெக்சிகன் குடும்பம்
சீனக் குடும்பம்
ஆப்பிரிக்கக் குடும்பம்
ஸ்காட்டிஸ் குடும்பம்
ரஷ்யக் குடும்பம்
ஜப்பானியக் குடும்பம்
அரேபியக் குடும்பம்
உன் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தைக் கீழ்க்கண்ட குடும்ப மரத்தில் ஒட்டவும்.
நீ யாருடன் வசிக்கிறாய்?
உறவுகள்
தாய்வழி உறவு முறை
மக்கள், தாய்வழி மூலம் உறவினர்களாக மாறுவது தாய்வழி உறவுமுறை என்கிறோம்.
தந்தைவழி உறவுமுறை
மக்கள், தந்தைவழி மூலம் உறவினர்களாக மாறுவது தந்தை வழி உறவுமுறை என்கிறோம்.
செயல்பாடு
நாம் எழுதுவோம்
உனது குடும்பத்தில் உள்ள தாய்வழி உறவுமுறை, தந்தைவழி உறவுமுறை உறவினர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
தாய்வழி உறவினர்கள்
தாத்தா
பாட்டி(ஆச்சி)
மாமா
அத்தை
தந்தைவழி உறவினர்கள்
தாத்தா (பாட்டையா)
பாட்டி (அப்பத்தா)
சித்தப்பா
சித்தி
குடும்ப வகைகள்
குடும்பங்கள்
1. சிறிய குடும்பம்
2. பெரிய குடும்பம்
3. கூட்டுக்குடும்பம்
மேலே உள்ள படங்களில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?
1) முதலாவது படத்தில் தாய் தந்தை மற்றும் குழந்தைகளைக் காண்கிறோம். இவ்வகை குடும்பத்தைச் சிறிய குடும்பம் என அழைக்கின்றோம்.
2) இரண்டாவது படத்தில் தாய், தந்தை, குழந்தைகள் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களை காண்கிறோம். இவ்வகை குடும்பத்தைப் பெரிய குடும்பம் என அழைக்கின்றோம்.
3) மூன்றாவது படத்தில் உள்ள குடும்பம் பெரியதாக உள்ளது. இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் ஒன்றாக சேர்ந்திருப்பதைக் காண்கிறோம். இவ்வகை குடும்பத்தைக் கூட்டுக்குடும்பம் என அழைக்கின்றோம்.
சிந்தனை செய்
இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுடன் வசிக்கும் குடும்பங்களை நீ பார்த்ததுண்டா?
பதில் : இல்லை. இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுடன் வசிக்கும் குடும்பங்களை நான் கண்டதில்லை.
குடும்பத்தின் சிறப்பு அம்சங்கள் (மதிப்புகள்- Values)
* குடும்பம் நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் இருப்பிடத்தை அளிக்கின்றது
* குடும்பம் என்பது உடல் ரீதியான, மன ரீதியான வழக்க ரீதியான வளர்ச்சியை அளிக்கும் ஒரு தொடக்கப்பள்ளியாக செயல்படுகிறது.
* குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு வகையான பண்புகளுடன் இணைந்து வாழ்கின்றனர்
சில பண்புகள் (மதிப்புகள் – Values)
1. அன்பு
2. மரியாதை
3. பாதுகாப்பு
4. பகிர்ந்து கொள்ளல்
செயல்பாடு
நாம் எழுதுவோம்
உனது குடும்பத்தில் உன் உறவினர்களிடையே காணப்படும் சில மதிப்புகளைப் பட்டியலிடுக.
சகிப்புத்தன்மை
மனிப்பு
இரக்கம்
உதவி
குடும்பத்தின் ஒற்றுமை
நாம் தனியாக வேலை செய்யவதை விட சேர்ந்து வேலை செய்வது நல்லது. இது வேலையின் சுமையைக் குறைக்கிறது. உறவுமுறையை வலுப்படுத்துகிறது. குடும்பத்தின் ஒற்றுமை ஓங்குகிறது.
நாம் அறிந்து கொள்வோம்.
குழந்தைகளாகிய நீங்கள், உங்கள் வேலையை நீங்களே செய்வது நல்லது.
உனது பொருள்களை அதற்குரிய இடத்தில் வைப்பது மிகவும் நல்லப் பழக்கம்.
இது உனது ஒழுக்கத்தை மட்டுமல்லாமல் பொருள்களைத் தேடுவதற்கான நேரத்தையும் குறைக்கிறது.
நீ உனது உடைமைகளை எவ்வாறு பராமரிக்கிறாய்? உனது நண்பர்களுடன் கலந்துரையாடு.?
நமது உறவினர்கள்
நமது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் தூரத்து உறவினர்கள் கூட நம் வீட்டிற்கு வருவார்கள். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் குடும்ப விழாவில் ஒன்று கூடுவர். அவர்கள் நம் வீட்டிற்கு வரும்பொழுது நாம் அவர்களை வரவேற்க வேண்டும். நாம் அவர்களுடன் உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்துகொள்ள வேண்டும். இது நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை ஆகும். விருந்தோம்பல் என்பது தமிழர்களின் சிறந்த பண்பு. இது நமது உறவுமுறையை வலுப்படுத்தும்.
உனது உறவினர்களை எவ்வாறு அழைப்பாய்?
1) அம்மாவின் அம்மா பாட்டி
2) அப்பாவின் அப்பா தாத்தா
3) தந்தையின் சகோதரி, அத்தை
4) தாயின் சகோதரன் மாமா
உன் உறவினர்கள் வரும்பொழுது நீ எவ்வாறு நடந்து கொள்வாய்?
செயல்பாடு
நாம் எழுதுவோம்?
யார் என்ன செய்வது.
சமையல் – அம்மா
துணி துவைத்தல் – அப்பா மற்றும் அம்மா
குடும்பத்திற்காகப் பொருளீட்டுதல் – அப்பா
கடைக்குச் செல்லல் – தம்பி
தரையைப் பெருக்குதல் – அக்கா
மின் விளக்குகளை அணைத்தல் – அனைவரும்
வெளியாட்கள்
நமது உறவினர்களைத் தவிர, வெளியாட்கள் கூட நமது வீட்டிற்கு வருவார்கள். பால்காரர், காய்கறி வியாபாரி, எரிவாயு உருளைத் தருபவர் போன்ற வெளியாட்கள் வருவார்கள்.
அவர்களிடமும் நாம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
அண்டை வீட்டுக்காரர்
நமது வீட்டருகே பல குடும்பத்தினர் வசிக்கின்றனர். நாம் அவர்களை அண்டை வீட்டுக்காரர்கள் என அழைக்கிறோம். நாம் அவர்களுடன் சுமூகமான உறவுமுறையுடன் பழக வேண்டும். தேவைப்படும் பொழுது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும். இது நமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
நாம் அறிந்து கொள்வோம்.
சிலர் செல்லப்பிராணிகளை தமது குடும்ப உறுப்பினர்கள் போல வளர்த்து வருகின்றனர்.
உனது வீட்டில் ஏதாவது செல்லப்பிராணி உள்ளதா?
ஆம், என்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்று உள்ளது.
சிந்தனை செய்
நீ ஒரு பொருளை வாங்குவதற்கு முன் இது நமக்கு தேவையா என்று யோசித்தது உண்டா?
ஆம், நான் எந்தப் பொருளையும் வாங்குவதற்கு முன் அது தேவையா எனப் பலமுறை யோசித்தது உண்டு.
குடும்பத்தின் வரவு செலவு திட்டம் (Budget of the family)
வரவும் செலவும் ஒரு குடும்பத்தின் முக்கிய அம்சங்கள். நாம் வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும். அடிப்படைத் தேவைகளை நாம் முதலில் நிறைவேற்ற வேண்டும். நாம் வரவு செலவு திட்டத்தின்படி (Budget) செலவு செய்ய வேண்டும். வரவுக்கு அதிகமாகச் செலவு செய்தால் பொருளாதார சிக்கல் ஏற்படும். எளிமையே நமது வாழ்வின் மிகச்சிறந்த கொள்கை.
உனது குடும்பத்தில் எத்தனை நபர்கள் பொருளீட்டுகின்றனர்?
என் அப்பா, அம்மா இருவரும் சம்பாதிக்கின்றனர்.
நீ பணத்தைச் சேமிக்கிறாயா? ஆம், நான் என் பெற்றோர் தரும் சிறு பணத்தை சேமிக்கிறேன்.
மீள்பார்வை
* குடும்பமே சமுதாயத்தின் அடிப்படை அலகு ஆகும்.
* அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் இருப்பிடத்தை குடும்பம் நமக்கு அளிக்கிறது.
* குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சார்ந்து வாழ்வது ஒற்றுமையை வளர்க்கிறது.
* குடும்பம் நமக்கு கட்டுப்பாடு, ஒழுக்கம், பகிர்ந்து கொள்ளல் போன்ற மதிப்புகளை அளிக்கிறது.
* ஒரு குடும்பம் அதன் வரவு-செலவுத்திட்டத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும்.
* குடும்பம் நமக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது.
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. சமுதாயத்தின் அடிப்படை அலகு __________ ஆகும்.
அ) கிராமம்
ஆ) நகரம்
இ) குடும்பம்
விடை: இ) குடும்பம்
2. நமது அடிப்படை தேவைகளின் ஒன்று.
அ) சோபா
ஆ) இருப்பிடம்
இ) கார்
விடை: ஆ) இருப்பிடம்
3. தாய், தந்தை மற்றும் குழந்தைகள் சேர்ந்து வசிப்பது __________.
அ) சிறிய குடும்பம்
ஆ) பெரிய குடும்பம்
இ) கூட்டுக்குடும்பம்
விடை: அ) சிறிய குடும்பம்
4. __________ தமிழர்களின் மிகச்சிறந்த பண்பு.
அ) விருந்தோம்பல்
ஆ) விழாக்கள் கொண்டாடுவது
இ) கோவிலுக்கு செல்லுவது
விடை: அ) விருந்தோம்பல்
5. குடும்பத்தை நடத்த __________ திட்டமிடுவது பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
அ) செல்வம்
ஆ) பணம்
இ) வரவு – செலவு
விடை: இ) வரவு – செலவு
II. பொருத்துக:
1. பண்பு – அ) ஒற்றுமையுடன் வாழ்வது
2. வேலையை பகிர்வது – ஆ) சகோதரன் மற்றும் சகோதரி
3. இரத்த உறவுமுறை – இ) காய்கறி வியாபாரி
4. வெளியாட்கள் – ஈ) உறவுமுறையை வலுப்படுத்துவது
5. அண்டை வீட்டுக்காரர் – உ) மரியாதை
விடைகள்
1. பண்பு – உ) மரியாதை
2. வேலையை பகிர்வது – அ) ஒற்றுமையுடன் வாழ்வது
3. இரத்த உறவுமுறை – ஆ) சகோதரன் மற்றும் சகோதரி
4. வெளியாட்கள் – இ) காய்கறி வியாபாரி
5. அண்டை வீட்டுக்காரர் – ஈ) உறவுமுறையை வலுப்படுத்துவது
III. சரியா / தவறா
1. ஒரு குடும்பமானது அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும். ( ✓ )
2. நமது அண்டை வீட்டுக்காரர்கள் நமது உறவினர்கள். ( x )
3. நமது வரவு – செலவைத் திட்டமிடுவதால் பொருளாதாரம் உயரும். ( ✓ )
4. நாம் நமது பொருள்களை எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ( x )
5. எளிமையே ஒவ்வொரு குடும்பத்தின் சிறந்த கொள்கையாகும். ( ✓ )
IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி:
1. குடும்பத்தின் வகைளை எழுதுக.
சிறிய குடும்பம், பெரிய குடும்பம், கூட்டுக்குடும்பம்.
2. கூட்டுக்குடும்பம் என்றால் என்ன?
இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் ஒன்றாக வாழ்வதே கூட்டுக் குடும்பம்.
3. நமது குடும்பத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பண்புகள் யாவை?
அன்பு, மரியாதை, பாதுகாப்பு, பகிர்ந்து கொள்ளல்.
4. அண்டை வீட்டுக்காரர்கள் என்பர் யார்?
நமது வீட்டருகே உள்ளவர்கள் அண்டை வீட்டுக்காரர்கள்.
5. குறிப்பு வரைக: வரவு – செலவுத் திட்டம்
வீட்டில் உள்ளவர்களால் கிடைக்கும் வருமானம் வரவு. நமது அன்றாட தேவைகளுக்கு செலவு செய்வது செலவு. வரவிற்குள் செலவு செய்வதே வரவு – செலவுத் திட்டம்.
செயல்பாடு நாம் எழுதுவோம்
உனது குடும்பத்தில் உள்ள தாய்வழி உறவுமுறை, தந்தைவழி உறவுமுறை உறவினர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
தாய்வழி உறவினர்கள்
மாமா, தாத்தா, பாட்டி (ஆச்சி), சித்தி, பெரியம்மா
தந்தை வழி உறவினர்கள்
அத்தை, தாத்தா (பாட்டையா), பாட்டி (அப்பத்தா), சித்தப்பா, பெரியப்பா
சிந்தனை செய்
இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுடன் வசிக்கும் குடும்பங்களை நீ கண்டதுண்டா?
இல்லை. இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுடன் வசிக்கும் குடும்பங்களை நான் கண்டதில்லை.
செயல்பாடு நாம் எழுதுவோம்
உனது குடும்பத்தில் உள்ள உறவினர்களிடையே காணப்படும் சில மதிப்புகளைப் பட்டியலிடுக.
சகிப்புத்தன்மை, அன்பு, இரக்கம், மன்னிப்பு, உதவி செய்தல்.
நீ உனது உடமைகளை எவ்வாறு பராமரிக்கிறாய்? உனது நண்பர்களுடன் விவாதி.
❖ எனக்குத் தேவையான நேரம் மட்டுமே என்னுடைய உடைமைகளைப் பயன்படுத்துவேன்.
❖ என்னுடைய உடைமைகளைக் கவனமுடன் பயன்படுத்துவேன்.
❖ என் தேவைக்கு நான் குறைந்த அளவு பொருள்களையே பயன்படுத்துவேன்.
உனது உறவினர்களை எவ்வாறு அழைப்பாய்?
1. அம்மாவின் அம்மா – பாட்டி
2. அப்பாவின் அப்பா – தாத்தா
3. தந்தையின் சகோதேரி – அத்தை
4. தாயின் சகோதரன் – மாமா
உன் உறவினர்கள் வரும்பொழுது நீ எவ்வாறு நடந்து கொள்வாய்?
❖ அன்பாக நடந்து கொள்வேன்.
❖ நீர் கொடுத்து வரவேற்பேன்.
❖ அவர்களோடு குசலம் விசாரிப்பேன்.
❖ அவர்களோடு அமர்ந்து உரையாடுவேன்.
செயல்பாடு நாம் எழுதுவோம்
உனது வீட்டில் ஏதாவது செல்லப்பிராணி உள்ளதா?
ஆம், என்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்று உள்ளது.
சிந்தனை செய்
நீ ஒரு பொருளை வாங்குவதற்கு முன் இது நமக்கு தேவையா என்று யோசித்தது உண்டா?
ஆம், நான் எந்தப் பொருளையும் வாங்குவதற்கு முன் அது தேவையா எனப் பலமுறை யோசித்தது உண்டு.
1. உனது குடும்பத்தில் எத்தனை நபர்கள் சம்பாதிக்கின்றனர்?
என் அப்பா, அம்மா இருவரும் சம்பாதிக்கின்றனர்.
2. நீ பணத்தை சேமிக்கிறாயா?
ஆம், நான் என் பெற்றோர் தரும் சிறு பணத்தை சேமிக்கிறேன்.
செயல்பாடு
செயல்திட்டம்
உனது குடும்ப வரவு-செலவு திட்டத்தை கீழ்க்கண்ட அட்டவணையின்படி தயாரிக்கவும். பின் சரியான இடத்தில் குறியிடவும்.
❖ வரவும் செலவும் சமமாக உள்ளது. ( )
❖ வரவு செலவைவிட அதிகமாக உள்ளது. ( ✓ )
❖ வரவு செலவை விட குறைவாக உள்ளது. ( )