தமிழ் : பருவம் 3 இயல் 2 : சிறிய உருவம்! பெரிய உலகம்!
2. சிறிய உருவம்! பெரிய உலகம்!
“ஓ குட்டி எறும்பே! உன்னைவிடப் பெரிய அரிசியை எப்படித் தூக்கிச் செல்கிறாய்?
அடடே!பார்த்துக்கொண்டு இருக்கும்போதே உள்ளே சென்றுவிட்டாயே!
நானும் உன்னைப்போல் சிறியதாக இருந்தால் உன்னுடனேயே வந்திருப்பேனே, என்றாள் கண்மணி.
சட்டென்று அவளுடைய உடல் அதிர்ந்தது.
உருவம் சிறியதாகிவிட்டது.
சுற்றிலும் பார்த்தாள். எறும்பின் அளவுக்குத் தானும் சிறியதாகி இருப்பதைக்கண்டு வியப்படைந்தாள்.
எறும்பு நுழைந்த புற்றுக்குள் இறங்க முயற்சி செய்தாள். தடுமாறினாள். பொத்தென்று புற்றுக்குள் விழுந்தாள்.
“இந்தப் புற்றுக்குள் இத்தனை அறைகளா? எறும்புகளின் சேமிப்பைக் கண்டாள். எறும்புப் புற்றுக்குள் அங்கும் இங்கும் சென்று பார்த்தாள்.
வியப்பு குறையாமல் புற்றைவிட்டு வெளியே வந்தாள். அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தாள்.
மரத்தின் மேலே ஒரு தேன்கூடு இருந்தது,
“தேனீக்கள் எப்படி கூடுகட்டுகின்றன? தேனைச் சிந்தாமல் எப்படிச் சேமிக்கின்றன?
அதையும் பார்க்கவேண்டுமே” என்று நினைத்தாள்.
உடனே அவளுக்குச் சிறகுகள் முளைத்தன.
“ஊ ஊய்ய்” மகிழ்ச்சியில் கத்தினாள். பறந்து சென்று தேன்கூட்டுக்குள் புகுந்தாள்.
பலவகை தேனீக்களை ஆர்வமாகப் பார்த்தாள்.
இவ்வளவு சிறிய தேனீ, இத்தனை வேலைகள்
செய்கிறதா? வியப்பு தாளவில்லை.
தேன்கூட்டைவிட்டு வரவே மனமில்லை . தயங்கியபடியே
வெளியே வந்தாள்.
மரக்கிளையில் அமர்ந்தாள். கீழே அழகான நீரோடை. அதில் மீன்கள் நீந்துவதைப் பார்த்தாள்.
மீன்களைப் போல நீந்த வேண்டுமென்று ஆசை வந்தது.
அடுத்து என்ன நடந்திருக்கும்? கதையைத் தொடர்ந்து கூறுக.
வாய்மொழியாக விடை கூறு
1. கண்மணி எங்கெங்கே சென்றாள்? என்னவெல்லாம் பார்த்தாள்?
2. கண்மணிக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன?
3. கண்மணியைப் போல உனக்கு எங்கெல்லாம் சென்று பார்க்க ஆசை?
விடை எழுதுக
1. கண்மணி எங்கெங்கே சென்றாள்?
விடை:
கண்மணி முதலில் எறும்பு புற்றுக்குச் சென்றாள். பின்னர் தேன் கூட்டிற்கு சென்றாள்.