சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நமது சமுதாயம்
அலகு 3
நமது சமுதாயம்
நீங்கள் கற்க இருப்பவை
* மத விழாக்கள்
* தேசிய விழாக்கள்
* நாட்டுப்புறக் கலைகள்
* நமது நண்பர்கள்
* அறிவியல் கண்காட்சி
விழாக்கள்
கலந்துரையாடுவோமா!
நீங்கள் என்னென்ன விழாக்களைக் கொண்டாடுகிறீர்கள்? அவ்விழாக் காலங்களில் நீங்கள் எவ்வகைச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள்?
விழாக்கள் என்பது மக்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியையும் பொருள்களையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளாகும். விழாக்கள் மத விழாக்களாகவோ தேசிய விழாக்களாகவோ இருக்கலாம்.
மத விழாக்கள்
தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளன்று மாலை வேளையில் தீபங்கள் — ஏற்றித் தீபத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது கார்த்திகை தீபம்.
ஒளி, இருளைப் போக்கும். இவ்விழா நமக்கு ஒளிமயமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொடுக்கிறது. இந்நாளில் வீடுகளில் வண்ணக் கோலமிட்டும் தீபங்கள் ஏற்றியும் அலங்கரிப்பர்.
ஈத்-உல்-அதா என்பது பொதுவாக பக்ரீத் என்றழைக்கப்படுகிறது. இது நன்றி செலுத்தும் விழாவாகவும் தியாகத்தைப் போற்றும் விழாவாகவும் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, இதனைத் “தியாகத் திருநாள்” என்றழைப்பர். இந்நாளில் சிறப்பு உணவு வகைகளான இறைச்சி, இனிப்புகளைத் தயாரித்து அனைவருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்வர்.
மார்ச் / ஏப்ரல் மாதத்தில் வரக்கூடிய புனித வெள்ளியைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இது 40 நாள்கள் உண்ணா வழிபாட்டுக்குப் பின்னர் கொண்டாடப்படும் திருநாளாகும். இது நம்பிக்கையின் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளையும் இனிப்புகளையும் பரிசுப் பொருள்களாகப் பரிமாறிக் கொள்வர்.
தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான், மகாவீரர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, ஓணம், குருநானக் ஜெயந்தி போன்றவை நம்மால் கொண்டாடப்படும் சில மத விழாக்களாகும்.
இவ்விழாக்களின் பொழுது மக்கள் இறைவழிபாடு செய்வதோடு, தங்களைச் சுற்றி வாழ்பவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் தங்கள் வீடுகளில் தயாரித்த சிறப்பு உணவு வகைகளைப் பரிமாறி மகிழ்வர்.
தேசிய விழாக்கள்
“நம்மிடையே ஒற்றுமை” எனும் உணர்வைத் தருவது தேசிய விழாக்கள். இவ்விழாக்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகின்றது. இவ்விழாக்களின்போது அனைத்து அரசு பொதுக் கட்டடங்களிலும் பள்ளிகளிலும் உரிய மரியாதையுடன் நாம் தேசியக் கொடியை ஏற்றுகின்றோம். நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
தேசிய விழாக்களுள் சில…
தேசிய விழாக்களுக்கு ‘தே’ எனவும் மத விழாக்களுக்கு ‘ம’ எனவும் எழுதுக.
ஆசிரியருக்கான குறிப்பு: பள்ளிகளில் நமது தேசியக் கொடியினை ஏற்றும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாணவர்களுக்கு விளக்குதல் வேண்டும். எ.கா. நேராக நிமிர்ந்து நின்று ( நேர் நில் ) வலது கையால் கொடிக்கு வணக்கம் செலுத்துதல்.
நாட்டுப்புறக் கலைகள்
கலந்துரையாடுவோமா!
நம்மில் பலருக்கு ஆடிப்பாடி மகிழ்வது பிடிக்கும். உங்களுக்கு? படத்தில் உள்ள ஆடல் கலைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றின் பெயரைக் கூற முடியுமா?
நாட்டுப்புறக் கலைகளுள் நாட்டுப்புறப்பாடல்கள், ஆடல்கள், கதைகள், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்றவை அடங்கும். கலைஞர்கள் இதுபோன்ற கலைகளை உருவாக்கிப் பல ஆண்டுகளாகப் பின்பற்றியும் வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பலவிதமான நடனங்கள் வழக்கத்தில் உள்ளன. நடனக் கலைஞர்களால் அணியப்படும் சிறப்பு ஆடை அணிகலன்கள் வண்ணமயமாக இருக்கும்.
கலைஞர்கள் தங்களது ஆடை ஆபரணங்களை உள்ளூரிலேயே கிடைக்கும் இயற்கைப் பொருள்களைக் கொண்டு தாங்களாகவே தயாரித்துக் கொள்கின்றனர்.
திருவிழாக்களிலும் அறுவடைக் காலங்களிலும் மக்கள் கும்மி கொட்டி ஆடுவர்.
ஒத்த ஓசையுடன் கைகளைத் தட்டி, பாடிக்கொண்டே ஆடுவது கும்மியாட்டம்.
இந்தத் தாலாட்டுப் பாடலை பாடி மகிழ்வோமா!
தாலே லோ தாலே லோ (2)
கண்மணியே கண்ணுறங்கு (2)
தாயினது தாலாட்டு
கேட்டு நீயும் கண்ணுறங்கு
முன்னும் பின்னும் அசைந்தாடும்
தொட்டிலிலே கண்ணுறங்கு
பயமின்றி நீயுமே
மகிழ்ச்சியாக கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு (2)
தாலே லோ தாலே லோ (2)
பொருத்துக.
நமது நண்பர்கள்
மலரின் தந்தை நம் நாட்டுக்காகப் பாடுபட்ட ஓர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் (படை வீரர்). அவள் குடும்பத்தினர் தாங்கள் குடியிருக்கப்போகும் வீட்டைப் பார்க்கப் பேருந்தில் பயணித்தனர்.
மலர் : என்ன ஒர் அழகான, இனிமையான பயணம்!
அப்பா : ஆமாம்! இந்தப் பாதுகாப்பான பயணத்திற்காக ஓட்டுநருக்கு நன்றி கூற வேண்டும்.
அம்மா : அதுமட்டுமல்ல… அனைவருக்கும் சிரித்த முகத்துடன் பயணச்சீட்டு வழங்கிய நடத்துநருக்கும் நாம் நன்றி கூற வேண்டும்.
மலரும் அவளது குடும்பமும் தங்களது வீட்டைச் சுற்றிப் பார்க்கின்றனர்.
அம்மா, வீடு பார்க்க மிகவும் அழகாக உள்ளது. அனைத்துக் குழாய்களும், மின்விசிறிகளும் நன்றாக வேலை செய்கின்றன.
மிக நன்று! கட்டடம் கட்டுபவரும், குழாய் செப்பனிடுபவரும், மின்வல்லுநரும் தங்களது வேலைகளைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
அம்மா , இந்த சாளரம் ( சன்னல் ) பழுதடைந்துள்ளது.
சரி, நாம் ஒரு தச்சரை (மரவேலை செய்பவர்) அழைத்து சரி செய்து விடலாம்.
அப்பா : அப்படியே ஒரு தையற்காரரை அழைத்துக் கதவுகளுக்கும் சன்னல்களுக்கும் திரைச்சீலைகளைத் தைக்கச் சொல்ல வேண்டும்.
மலர் : அம்மா, காய்கறிகளையும் பழங்களையும் நாம் எங்கே வாங்கலாம்?
அம்மா : இது ஒரு கிராமம். ஆகையால் காய்கறிகள், பழங்களை நாம் நேரடியாக தங்களது வயல்களிலேயே பயிரிடும் உழவர்களிடம் இருந்தே வாங்கலாம்.
இவ்வாறு நாம் வாழ்க்கையை இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ உதவி புரியும் கட்டடம் கட்டுபவர், ஓட்டுநர், நடத்துநர், குழாய் செப்பனிடுபவர், தச்சர், மின் வல்லுநர், இராணுவ வீரர், தையற்காரர், விவசாயி போன்ற அனைவரும் நமது நண்பர்களே.
புதிய வீடு கட்டுவதில் உதவி புரியும் தொழிலாளர்களுக்கு மட்டும் (✓) குறியிடுக.
அறிவியல் கண்காட்சி
ஆசிரியர் : “நாம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம். அந்நாளில் நம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெறுவது உங்களுக்குத் தெரியும் அல்லவா? அதற்காக நாம் தயார் செய்திருப்பதைப் பார்ப்போமா!”
“நீங்கள் அனைவரும் உங்களுடைய செயல்திட்டங்களை விளக்குகிறீர்களா?”
கொடுக்கப்பட்ட பொருள்கள் மூழ்குமா? அல்லது மிதக்குமா?
மதிப்பீடு
1. நாட்டுப்புறக் கலைகளின் பெயர்களை எழுதுக.
(சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம்)
விடை : கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை
2. விழாக்களை வகைப்படுத்துக.
(தீபாவளி, சுதந்திர தின விழா, ஓணம், மகாவீரர் ஜெயந்தி, குடியரசு தினம், பொங்கல், காந்தி ஜெயந்தி, பக்ரீத்)
விடை :
மத விழாக்கள்: தீபாவளி, ஓணம், பொங்கல், பக்ரீத்
தேசிய விழாக்கள்: சுதந்திர தினவிழா, மகாவீரர் ஜெயந்தி, குடியரசு தினம், காந்தி ஜெயந்தி
3. நான் யார்? (குழாய் செப்பனிடுபவர், இராணுவ வீரர், நடத்துநர், தச்சர், தையற்காரர்)
அ. மரக்கட்டைகளில் இருந்து பொருள்களைச் செய்பவர். தச்சர்
ஆ. ஒழுகும் குழாயைச் சரி செய்பவர். குழாய் செப்பனிடுபவர்
இ. உங்களுக்கான ஆடைகளைத் தைப்பவர். தையற்காரர்
ஈ. தேசத்தைக் காப்பவர். இராணுவ வீரர்
உ. பேருந்தில் பயணச்சீட்டு வழங்குபவர். நடத்துநர்
4. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ. நமது நண்பர்களைச் சந்திக்கவும் வாழ்த்தவும் விழாக்கள் உதவுகின்றன. (வாழ்த்தவும் / விடைபெறவும்)
ஆ. நாம் சிறப்பு உணவு வகைகளை உண்ணும்போது மகிழ்ச்சி அடைகிறோம். (வருத்தம் / மகிழ்ச்சி)
இ. நாம் தேசியக் கொடியினை தேசிய விழாக்களின்போது ஏற்றுவோம். (தேசிய / மத)
ஈ. ஈஸ்டர் கொண்டாடப்படும் நாள் ஞாயிறு. ( திங்கள் / ஞாயிறு )
உ. நாம் ஒரு நாணயத்தை நீருக்குள் போட்டால் அது மூழ்கும். (மூழ்கும் / மிதக்கும்)
ஊ. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் பிப்ரவரி 28. (பிப்ரவரி 24 / பிப்ரவரி 28)
தன் மதிப்பீடு
• மத, தேசிய விழாக்களுக்கு இடையேயான வேறுபாடுகளை நான் அறிவேன்.
• நமது நாட்டுப்புறக் கலைகளை நான் போற்றுவேன்.
• நமது சமுதாய நண்பர்களை நான் மதிக்கிறேன்.
• அறிவியல் நம் அன்றாட வாழ்வுடன் தொடர்புடையது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.