சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 2 : எனது அருமைத் தாய்நாடு
அலகு 2
எனது அருமைத் தாய்நாடு
நீங்கள் கற்க இருப்பவை
* தேசிய நாள்கள்
* தேசத் தலைவர்கள்
* தேசிய, மாநிலச் சின்னங்கள்
* பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தல்
தேசிய நாள்கள் மற்றும் தேசத் தலைவர்கள்
ஆகஸ்ட் 15
நம் இந்திய நாடு பல ஆண்டுகளாக ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டு வந்தது. அவர்களது கட்டுப்பாட்டிலிருந்து ஆகஸ்ட் 15, 1947 இல் விடுதலை பெற்றது. நாம் இந்நாளையே ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்.
ஜனவரி 26
நாம் நமக்கான சட்டங்களை (இந்திய அரசியலமைப்புச் சட்டம்) உருவாக்கி நடைமுறைப்படுத்திய நாள் ஜனவரி 26, 1950. இந்நாளையே நாம் குடியரசு நாளாகக் கொண்டாடுகிறோம். டாக்டர். இராஜேந்திரபிரசாத் அவர்கள் நம் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் ஆவார்.
நம் நாட்டின் விடுதலைக்காக தலைவர்கள் பலர் அரும்பாடுபட்டனர். அவர்களுள் இரு முக்கியத் தலைவர்கள் மகாத்மா காந்தியும் பண்டித ஜவஹர்லால் நேருவும் ஆவர்.
அக்டோபர் 2
மகாத்மா காந்தி நம் அனைவரின் மனதிலும் என்றும் நிலைத்து நிற்பவர். மக்கள் அவரை அன்பாக ‘பாபு’ அல்லது ‘தேசத்தந்தை’ என்று அழைப்பர். இவர் அகிம்சை வழியைப் பின்பற்றினார். இவர் எப்பொழுதும் உண்மையைப் பேசி, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். இவரது பிறந்த நாளான அக்டோபர்-2 ஆம் நாளை காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடுகிறோம்.
நவம்பர் 14
பண்டித ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் குழந்தைகளின் மீது அதிக அன்பு கொண்டவர். இவரை அன்பாக ‘நேரு மாமா’ என அழைப்பர். இவரது பிறந்த நாளான நவம்பர்-14 குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
படத்தில் காணப்படும் தலைவர்களை ‘அ’ மற்றும் ‘ஆ’ வரிசையுடன் இணைக்க.
தேசியக்கொடி – மூவர்ணக்கொடி
நமது தேசியக்கொடி செவ்வக வடிவிலான மூவர்ணக்கொடி. இது மூன்று சம அளவு பட்டைகளைக் கொண்டிருக்கும்.
வெள்ளைப்பட்டையில் காணப்படும் நீலநிறச் சக்கரம் அசோகச் சக்கரம் எனப்படும். இது 24 ஆரங்களைக் கொண்டது. இவை நாட்டின் முன்னேற்றத்தையும் விழுமியங்களையும் குறிக்கின்றன.
நமது தேசியக்கொடியை நாம் மதித்தல் வேண்டும்
தேசிய, மாநிலச் சின்னங்கள்
இந்தியாவின் தேசியச் சின்னங்கள்
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு – கங்கை நதியில் வாழும் டால்ஃபின்.
மாநிலச் சின்னங்கள் – தமிழ்நாடு
படத்தில் உள்ள சிறிய கட்டத்தில் தேசியச் சின்னங்களுக்கு ‘தே’ எனவும், மாநிலச் சின்னங்களுக்கு ‘மா’ எனவும் எழுதி படங்களுக்குப் பெயரிடுக.
(வரையாடு, தாமரை, ஆலமரம், மாம்பழம், கங்கை, மரகதப்புறா)
விடை : தாமரை, கங்கை, மரகதப்புறா, ஆலமரம், வரையாடு, மாம்பழம்
நமது கடமைகள்
பொது இடங்களான / பொதுச் சொத்துகளான பொதுக் கழிப்பறைகள், சாலைகள், தெருக் குழாய்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் போன்றவற்றை நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். இவைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்.
சுவரில் கிறுக்காதே.
பொது இடங்களில் குப்பைகளைப் போடாதீர்.
வரிசையைப் பின்பற்றவும்.
பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். சாலையோரங்கள், திறந்த வெளிகளைப் பயன்படுத்தக்கூடாது.
பொது நூலகத்தில் அமைதியைப் பின்பற்றவும். புத்தகங்களில் கிறுக்கவோ அல்லது அதைக் கிழிக்கவோ கூடாது.
சிந்தித்துக் கலந்துரையாடுவோமா!
நாம் ஏன் கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டும்?
செய்யக்கூடாத செயல்களுக்குச் சிவப்பு நிறமும், செய்ய வேண்டிய செயல்களுக்குப் பச்சை நிறமும் வட்டங்களில் தீட்டுக.
மதிப்பீடு
1. கொடுக்கப்பட்ட தேதிகளுக்கு உரிய தேசிய நாள்களின் பெயர்களை எழுதுக.(சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குழந்தைகள் தினம், குடியரசு தினம்)
விடை :
ஆகஸ்ட் 15 : சுதந்திர தினம்
நவம்பர் 14 : குழந்தைகள் தினம்
ஜனவரி 26 : குடியரசு தினம்
அக்டோபர் 2 : காந்தி ஜெயந்தி
2. பொருந்தாததை வட்டமிடுக.
அ. மாம்பழம் வங்காளப் புலி ஆலமரம் பலாப்பழம்
ஆ. பனைமரம் வரையாடு தாமரை மரகதப்புறா
3. கொடுக்கப்பட்ட படத்திற்குரிய சரியான பெயரை வட்டமிடுக.
4. சின்னங்களை அதன் பெயருடன் கோடிட்டு இணைக்க.
5. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(டாக்டர். இராஜேந்திர பிரசாத், பண்டித ஜவஹர்லால் நேரு, மாநிலப் பழம், மகாத்மா காந்தி, வரையாடு )
அ. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு.
ஆ. இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர். இராஜேந்திர பிரசாத்.
இ. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி.
ஈ. தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு.
உ. பலாப்பழம் நம் மாநிலப் பழம்.
6. சரியான செயலுக்கு (✓) குறியும், தவறான செயலுக்கு (X) குறியும் இடுக.
தன் மதிப்பீடு
* என்னால் சில தேசிய நாள்கள், தேசத் தலைவர்களின் பெயர்களைக் கூற முடியும்.
* என்னால் தேசிய மற்றும் மாநிலச் சின்னங்களை அடையாளம் காண முடியும்.
* நான் பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பேன்.