சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 1 : நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள்
அலகு 1
நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள்
நீங்கள் கற்க இருப்பவை
* இயற்கை மூலங்கள், இயற்கை மூலத்திலிருந்து பெறப்பட்ட பொருள்கள், மனிதனால் தயாரிக்கப்பட்ட பொருள்கள்
* பருப்பொருள் – வரையறை, பண்புகள்
நாங்கள் ஆரஞ்சு பழங்கள். நாங்கள் ஆரஞ்சு மரத்தில் காய்க்கிறோம்.
நான் ஒரு கூடை. நான் மரக்கட்டையால் செய்யப்பட்டிருக்கிறேன். மரக்கட்டை மரங்களிலிருந்து பெறப்படுகிறது.
நமது வாழ்வில் பலவகையான பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம். அவை அனைத்திற்கும் இயற்கையே மூலம் ஆகும். (எ.கா. மரம்). இயற்கை மூலப்பொருள்களிலிருந்து நாம் பல பொருள்களை உருவாக்குகிறோம். (எ.கா. மரப்பலகைகள்). இவை, மேலும் பல பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன.
(எ.கா. மரக்கூடை).
இயற்கைப் பொருள்களின் மூலங்கள்
தாவரங்கள், விலங்குகள், பாறைகள் மற்றும் மண் போன்றவை இயற்கைப் பொருள்களின் மூலங்கள் ஆகும்.
தாவரங்களிலிருந்து….
விலங்குகளிலிருந்து…
பாறை மற்றும் மண்ணிலிருந்து…
மண் மற்றும் பாறைகளிலிருந்து உலோகத் தாதுக்களைப் பெறுகிறோம்.
சிந்திக்க…….
நீங்கள் இன்றைய தேவைக்காக என்னை வெட்டுகிறீர்கள், அதனால் நாளைய தேவைக்காக, என்னைப்போன்ற பல மரங்களை நட்டு வளருங்கள்.
விலங்கு மூலங்களுக்கு ‘வி’ எனவும் தாவர மூலங்களுக்கு ‘தா’ எனவும் உலோக மூலங்களுக்கு ‘உ’ எனவும் எழுதுக.
மரக்கட்டை
கலந்துரையாடுவோமா!
கதவுகள், சன்னல்கள், அலமாரிகள் ஆகியவற்றை நாம் ஏன் மரத்தில் செய்கிறோம்?
* மரக்கட்டை உறுதியான பொருள். எனவே மரச்சாமான்களை மரத்தில் இருந்து தயாரிக்கிறோம்.
* இவை பல்லாண்டு நீடித்து உழைக்கும்.
* மரக்கட்டையைப் பல துண்டுகளாக வெட்டி வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கலாம்.
* மரப்பலகைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு பல பயனுள்ள பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
இயற்கை மூலம் → இயற்கை மூலத்திலிருந்து பெறப்பட்ட பொருள்கள் → மனிதனால் தயாரிக்கப்பட்ட பொருள்கள்
இயற்கை மூலம்
இயற்கை மூலத்திலிருந்து பெறப்பட்ட பொருள்கள்
சில கருவிகளைக் கொண்டு மரங்கள் வெட்டப்பட்டு மரக்கட்டை, மரப்பலகை போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
மனிதனால் தயாரிக்கப்பட்ட பொருள்கள்
உங்களுக்குத் தெரியுமா?
மரக்கூழிலிருந்து தாள் தயாரிக்கப்படுகிறது.
இரப்பர்
நீங்கள் பயன்படுத்தும் அழிப்பான் (இரப்பர்) எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா?
இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற பொருளைக் கொண்டு இரப்பர் தயாரிக்கப்படுகிறது.
* இரப்பர் மீள் தன்மை உடையது. இதைக் கொண்டு இரப்பர் வளையங்கள் தயாரிக்கப்படுகின்றன.
* மேலும் இது நீர் புகா அல்லது நீர் காப்புத் தன்மை கொண்ட பொருள் என்பதால் கையுறைகள் தயாரிப்பில் பயன்படுகின்றன.
* மீள் தன்மை: இழுத்த பின்பு மீண்டும் அதன் பழைய நிலைக்கே திரும்புதல்
* நீர் புகா அல்லது நீர் காப்புத் தன்மை: நீரை ஊடுருவ அனுமதிக்காத தன்மை
பின்வரும் பொருள்களும் இரப்பரால் ஆனவையே.
படங்களை உற்றுநோக்கி கோடிட்ட இடங்களை நிரப்புக.
அ. மரத்திலிருந்து மனிதரால் தயாரிக்கப்பட்ட பொருள்களின் பெயர்களை எழுதுக.
1. அலமாரி 2. தேக்கரண்டி 3. நாற்காலி
ஆ. இரப்பரிலிருந்து மனிதரால் தயாரிக்கப்பட்ட பொருள்களின் பெயர்களை எழுதுக.
1. இரப்பர் வளையங்கள் 2. மிதியடி 3. சைக்கிள் டியூப்
இழை / நார்
துணி, கயிறு போன்றவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?
நார் / இழையானது தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் ஒரு பொருள். பருத்தி மற்றும் சணல் தாவரங்களிடமிருந்தும் கம்பளி மற்றும் பட்டு விலங்குகளிடமிருந்தும் பெறப்படும் இழைகளாகும்.
தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இழை, தேங்காய் நார் அல்லது தென்னை நார் எனப்படும். தேங்காய் நாரிலிருந்து பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
பட்டு இழை உறுதியாக இருப்பதால் பாராசூட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
சணல் நாரானது நீண்ட, பளபளப்பான, உறுதியான இழையாகும். பட்டு வலிமையான இயற்கை இழையாகும். நாம் இவற்றிலிருந்து பைகள், சேலைகள் போன்றவற்றைத் தயாரிக்கின்றோம்.
கம்பளி நம் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ளும். எனவே, இது கம்பளிச்சட்டை, தொப்பி மற்றும் காலுறைகள் தயாரிப்பில் பயன்படுகிறது.
தோல் நெகிழ்வுத்தன்மை உடையது; இடுப்புப்பட்டை (பெல்ட்), கைக்கடிகாரப் பட்டை, பை போன்றவை தோலிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
சரியான இணைகளுக்கு (✓) குறியும் தவறான இணைகளுக்கு (x) குறியும் இடுக.
களிமண்
உங்களுக்குக் களிமண்ணைக்கொண்டு விளையாடப் பிடிக்குமா?
* களிமண் ஓர் இயற்கையான பொருள். இது மண்ணின் ஒரு வகையாகும். இது தண்ணீருடன் கலக்கும் போது மென்மையாகி, காய்ந்தவுடன் கடினமாகிறது. எனவே இதைப் பயன்படுத்தி பானைகள் மற்றும் பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
* மண்பாண்டம் செய்பவர் சக்கரத்தைப் பயன்படுத்தி மண் பானைகள் மற்றும் பல பொருள்களை செய்கிறார்.
நான் மின்சாரமின்றி நீரைக் குளிர்விக்கிறேன்.
உலோகங்கள்
உங்கள் வீட்டுச் சமையல் அறையில் பல்வேறு வகையான பாத்திரங்களைப் பார்த்திருக்கிறீர்களா?
உலோகங்கள் உலோகத் தாதுவிலிருந்து கிடைக்கின்றன. எ.கா. தங்கம், வெள்ளி , இரும்பு, தாமிரம்.
* உலோகங்கள் மிகவும் உறுதியாகவும் கடினமாகவும் இருப்பதால் வாகனங்கள், கதவுகள், சமையல் பாத்திரங்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.
* உலோகங்கள் பளபளப்பானவை.
* உலோகங்களை வெப்பப்படுத்துவதன் மூலம் அவற்றை எந்த வடிவத்திலும் மாற்றலாம் – சிறிய பிடிப்பு ஊக்குகள் / மிகப்பெரிய விமானம்.
பருப்பொருள்
இடத்தை அடைத்துக் கொள்ளக்கூடிய, இயற்கையானதாகவோ அல்லது மனிதரால் உருவாக்கப்பட்டதாகவோ இருக்கும் ஒரு பொருள் பருப்பொருள் எனப்படும்.
பருப்பொருளுக்குச் சுவை, மணம், அளவு மற்றும் வடிவம் உண்டு.
ஆரஞ்சு ஓர் இயற்கையான பொருள். இது இடத்தை அடைத்துக் கொள்ளும்.
மரக்கூடை மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள். இதுவும் இடத்தை அடைத்துக் கொள்ளும்.
இந்த மஞ்சள் நிற லட்டுகள் கிண்ணத்தில் உள்ள இடத்தை அடைத்துக் கொள்கின்றன.
இவை சிறிய, உருண்டை வடிவம் கொண்ட, இனிப்புச் சுவை உடையவை.
ஒரு பொருளைத் தயாரிக்க பல மூலப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. பின்வரும் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இரண்டு மூலப்பொருள்கள் எவை எனக் கண்டறிந்து எழுதுக.
1. மோட்டார் பைக்கில் காணப்படும் பொருள்கள் —————————.
அ. உலோகங்கள் மற்றும் களிமண்
ஆ. இரப்பர் மற்றும் களிமண்
இ. உலோகங்கள் மற்றும் இரப்பர்
விடை : இ. உலோகங்கள் மற்றும் இரப்பர்
2. இந்தப் பானைகளில் காணப்படுபவை ——————————–.
அ. களிமண் மற்றும் இரப்பர்
ஆ. உலோகங்கள் மற்றும் களிமண்
இ.. உலோகங்கள் மற்றும் இரப்பர்
விடை : ஆ. உலோகங்கள் மற்றும் களிமண்
3. இந்த இடுப்புப் பட்டை (பெல்ட்) ——————— ஆல் செய்யப்பட்டுள்ளது.
அ. இழை மற்றும் இரப்பர்
ஆ. உலோகங்கள் மற்றும் இரப்பர்
இ. உலோகங்கள் மற்றும் தோல்
விடை : இ. உலோகங்கள் மற்றும் தோல்
4. இந்த நாற்காலி —————– ஆல் செய்யப்பட்டுள்ளது.
அ. உலோகங்கள் மற்றும் மரக்கட்டை
ஆ. இழை மற்றும் இரப்பர்
இ. உலோகங்கள் மற்றும் களிமண்
விடை : அ. உலோகங்கள் மற்றும் மரக்கட்டை
மதிப்பீடு
1. இயற்கை மூலங்களுக்கு ‘1’ எனவும் அவற்றிலிருந்து மனிதரால் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு ‘2’ எனவும் எழுதுக.
2. சரி எனில் ‘ச’ எனவும் தவறு எனில் ‘த’ எனவும் எழுதுக.
அ. பெரும்பாலான உலோகங்கள் உறுதியானவை. ( ச )
ஆ. மரக்கட்டையை வெட்ட முடியாது. ( த )
இ. இரப்பர் மீள் தன்மை அற்றது. ( த )
ஈ. கம்பளி உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ளும். ( ச )
3. கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் எவ்வகை மூலப்பொருளால் ஆனவை என எழுதுக.
(தோல், இரப்பர், உலோகம், களிமண்)
விடை : களிமண், இரப்பர், தோல், உலோகம்
4. அட்டவணையில் உள்ள மூலப்பொருள்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருள்களில் ஒவ்வொன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் பெயரையும் அம்மூலப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்ட மற்றொரு பொருளின் பெயரையும் எழுதி அட்டவணையைப் பூர்த்தி செய்க.
அ. மரக்கட்டை : 1. மரப்பெட்டி 2. நாற்காலி
ஆ. இரப்பர் : 1. கையுறை 2. அழிப்பான்
இ. தோல் : 1. பணப்பை 2. வார்
ஈ. உலோகம் : 1. திறவுகோல் 2. சங்கிலி
தன் மதிப்பீடு
* இயற்கை மூலங்கள், இயற்கை மூலத்திலிருந்து பெறப்பட்ட பொருள்கள், மனிதனால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் ஆகியவற்றை என்னால் அடையாளம் காண முடியும்.
* எனக்கு பருப்பொருள்களின் சில பண்புகள் தெரியும்.