Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 2

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 2

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்

கவிதைப்பேழை: தன்னை அறிதல்

நுழையும்முன்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்தன்மையும் தனித்திறமையும் இருக்கும். அதை அறியாத வரையில் எதிர்காலம் அச்சமூட்டும். நாம் யார், நம் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும். இக்கருத்தினை விளக்கும் கவிதை ஒன்றினை அறிவோம்.

அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு 

அது குயில் குஞ்சு என்று தெரிந்தது 

தெரிந்த பிறகு 

இனிமேல் நாம் சேர்ந்து வாழ முடியாது

போய்விடு என்றது

பாவம் குயில் குஞ்சு

அது எங்குப் போகும்? 

அதுக்கு என்ன தெரியும்? 

அது எப்படி வாழும்?

குயில் குஞ்சும் 

எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தது 

அம்மா காக்கா கேட்கவில்லை 

கிளம்பிப் போகச் சொல்லிவிட்டது

குயில் குஞ்சால் அம்மா காக்கையைப் 

பிரியமுடியவில்லை 

அதுவும் அந்த மரத்திலேயே 

வாழ ஆரம்பித்தது

அம்மா காக்கையைப் போல காஎன்று 

அழைக்க முயற்சி செய்தது 

ஆனால் அதற்குச் சரியாக வரவில்லை

அதற்குக் கூடு கட்டத் தெரியாது 

பாவம் சிறிய பறவைதானே

கூடு கட்ட அதற்கு யாரும் 

சொல்லித் தரவும் இல்லை 

அம்மா அப்பா இல்லை 

தோழர்களும் இல்லை

குளிரில் நடுங்கியது 

மழையில் ஒடுங்கியது 

வெயிலில் காய்ந்தது 

அதற்குப் பசித்தது 

தானே இரை தேடத் தொடங்கியது

வாழ்க்கை எப்படியும் 

அதை வாழப் பழக்கிவிட்டது

ஒரு விடியலில் குயில் குஞ்சு 

கூ என்று கூவியது 

அன்று தானொரு 

குயில் என்று கண்டு கொண்டது.

சே.பிருந்தா

கவிதையின் உட்பொருள்

குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த குயில்குஞ்சு தன்னைக் காக்கைக் குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது. தனியே சென்று வாழ அஞ்சுகிறது. தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது. நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பது இக்கவிதையின் உட்பொருள் ஆகும்.

நூல் வெளி 

சே.பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர். மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

இக்கவிதை மகளுக்குச் சொன்ன கதை என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. கூடுகட்டத் தெரியாத பறவை ———- 

அ) காக்கை

ஆ) குயில் 

இ) சிட்டுக்குருவி

ஈ) தூக்கணாங்குருவி

[விடை : ஆ. குயில்] 

2. ‘தானொரு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ———-

அ) தா + ஒரு 

ஆ) தான் + னொரு 

இ) தான் + ஒரு 

ஈ) தானே + ஒரு 

[விடை : இ. தான் + ஒரு] 

குறுவினா 

1. காக்கை ஏன் குயில் குஞ்சைப் போகச்சொன்னது?

காக்கைக்குக் கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல, குயில் குஞ்சு தான் என்று ஒருநாள் தெரியவந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது. 

2. குயில் குஞ்சு தன்னை எப்போது ‘குயில்’ என உணர்ந்தது?

ஒரு விடியலில் குயில் குஞ்சு “கூ” என்று கூவியது. அன்று தான் ஒரு ‘குயில்’ என உணர்ந்தது. 

சிறுவினா

குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக. 

• காக்கைக்குக் கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல, குயில் குஞ்சு தான் என்று ஒருநாள் தெரியவந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது. 

• அதனால் தாய் காக்கையைவிட்டுச் செல்ல முடியவில்லை. அந்த மரத்திலேயே வாழ ஆரம்பித்தது. ‘கா’ என்று கத்த முயற்சித்தது, அதனால் முடியவில்லை.

• அதற்குக் கூடுகட்டத் தெரியாது. அம்மா, அப்பா, தோழர் யாரும் இல்லை .குளிர், மழை, வெயில் ஆகியவற்றைக் கடந்தது. தானே இரை தேடத் தொடங்கியது. 

• வாழ்கையை வாழப் பழகிவிட்டது. ஒரு விடியலில் குயில் குஞ்சு “கூ” என்று கூவியது, அன்று தான் ஒரு ‘குயில்’ என உணர்ந்தது.

சிந்தனை வினா

உங்களிடம் உள்ள தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவன யாவை?

• அனைவரிடமும் அன்பாகப் பழகுவது, 

• உண்மை பேசுவது, 

• தன்னம்பிக்கையுடன் இருப்பது, 

• மனம் தளராமை 

– ஆகியவை என்னிடம் உள்ள தனித்தன்மைகள் ஆகும்.

கற்பவை கற்றபின்

பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கு உரிய தனிச்சிறப்புகளைப் பட்டியலிடுக. 

1. நாய், பூனை – மோப்ப சக்தி 

2. காக்கை – கூடி உண்ணும், துக்கத்தை கூடி அனுசரிக்கும். 

3. கிளி – பேசும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *