தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்
கவிதைப்பேழை: மலைப்பொழிவு
நுழையும்முன்
உலக மக்கள் சாதி, மதம், மொழி முதலியவற்றால் பிரிந்துள்ளனர். இப்பிரிவினைகள் காரணமாக மக்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன. எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும். இவ்வுண்மைகளை இயேசு காவியம் வழி அறிவோம்.
சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத்
தத்துவமும் சொன்னார் – இந்தத்
தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது
தலைவர்கள் அவர்என்றார்!
மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது
சாந்தம் தான்என்றார் – அது
மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும்
மகத்துவம் பார்என்றார்!
சாதிகளாலும் பேதங்களாலும்
தள்ளாடும் உலகம் – அது
தர்மம் ஒன்றை நம்பிய பிறகே
அடங்கிவிடும் கலகம்!
ஓதும் பொருளாதாரம் தனிலும்
உன்னத அறம்வேண்டும் – புவி
உயர்வும் தாழ்வும் இல்லா தான
வாழ்வினைப் பெறவேண்டும்.
இரக்கம் உடையோர் பேறுபெற்றோர் என
இயேசுபிரான் சொன்னார் – அவர்
இரக்கம் காட்டி இரக்கத்தைப் பெறுவர்
இதுதான் பரிசுஎன்றார்
*வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
வாழ்க்கை பாலைவனம் – அவர்
தூய மனத்தில் வாழ நினைத்தால்
எல்லாம் சோலைவனம்!
தமையும் வாட்டிப் பிறரையும் வாட்டும்
சண்டை சச்சரவு – தினம்
தன்னாடு என்றும் பிறர்நாடு என்றும்
பேசும் பொய்யுறவு!
இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி
எத்தனை வீண்கனவு – தினம்
இவை இல்லாது அமைதிகள் செய்தால்
இதயம் மலையளவு!*
– கண்ணதாசன்
சொல்லும் பொருளும்
சாந்தம் – அமைதி
மகத்துவம் – சிறப்பு
பேதங்கள் – வேறுபாடுகள்
தாரணி – உலகம்
தத்துவம் – உண்மை
இரக்கம் – கருணை
பாடலின் பொருள்
(தம் சீடர்களுக்கு அறிவுரை கூற எண்ணிய இயேசுநாதர் ஒரு குன்றின் மீது ஏறி நின்று பேசத் தொடங்கினார்.)
சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.
இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது. அறம் என்கிற ஒன்றனை நம்பியபிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும். இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும்.
இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர். இதுதான் அவர்களுக்கான பரிசு. மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம்போல் பயனற்றதாகிவிடும். அவன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.
மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். மேலும் அவர்கள் தன்னாடு என்றும், பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள்தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.
நூல் வெளி
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார். காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.
இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும். இந்நூலில் உள்ள மலைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது ————
அ) பணம்
ஆ) பொறுமை
இ) புகழ்
ஈ) வீடு
[விடை : ஆ. பொறுமை]
2. சாந்த குணம் உடையவர்கள் ———— முழுவதையும் பெறுவர்.
அ) புத்தகம்
ஆ) செல்வம்
இ) உலகம்
ஈ) துன்பம்
[விடை : இ. உலகம்]
3. ‘மலையளவு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ———–
அ) மலை + யளவு
ஆ) மலை + அளவு
இ) மலையின் + அளவு
ஈ) மலையில் + அளவு
[விடை : ஆ. மலை + அளவு]
4. ‘தன்னாடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது –
அ) தன் + னாடு
ஆ) தன்மை + நாடு
இ) தன் + நாடு
ஈ) தன்மை + நாடு
[விடை : இ. தன் + நாடு]
5. இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது —-
அ) இவையில்லாது
ஆ) இவைஇல்லாது
இ) இவயில்லாது
ஈ) இவஇல்லாது
[விடை : அ. இவையில்லாது]
பொருத்துக.
வினா :
1. சாந்தம் – சிறப்பு
2. மகத்துவம் – உலகம்
3. தாரணி – கருணை
4. இரக்கம் – அமைதி
விடை :
1. சாந்தம் – அமைதி
2. மகத்துவம் – சிறப்பு
3. தாரணி – உலகம்
4. இரக்கம் – கருணை
குறு வினா
1. இந்த உலகம் யாருக்கு உரியது?
சாந்தம் என்ற அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது.
2. உலகம் நிலைதடுமாறக் காரணம் யாது?
சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறக் காரணம் ஆகும்.
3. வாழ்க்கை மலர்ச் சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கை மலர்ச் சோலையாக மாற நல்ல உள்ளத்தோடு வாழ வேண்டும்.
சிறுவினா
சாந்தம் பற்றி இயேசு காவியம் கூறுவன யாவை?
❖ சாந்தம் என்ற அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது. அவர்களே தலைவர்கள் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்.
❖ வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சிசெய்யும் பெருமை உடையது என்றார்.
❖ சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறுகின்றது.
❖அறத்தை நம்பினால் சண்டை இல்லாமல் உலகம் அமைதியாகிவிடும்.
❖ பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும்.
சிந்தனை வினா
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ மதம், சாதி, இனம், மொழி, ஏழை, பணக்காரன் ஆகியன ஒழிய வேண்டும். பொறாமை, வன்முறை, அறியாமை ஆகியன அழிந்து மனிதநேயம் மலர வேண்டும்.அனைவரும் ஒன்றெனக் கருத வேண்டும்.
கற்பவை கற்றபின்
இயேசுவின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு ஒன்றினை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
ஒரு நாள் பெரிய பிரசங்க கூட்டம் ஒன்று நடைபெற்று வந்தது. அங்கு ஒரு சிறுவன் இயேசுவைக் காண வந்தான். அங்கு சுமார் 5000 பேர் இருந்தனர். சிறுவன் 5 ரொட்டி, 2 மீன்கள் கொண்டு வந்தான். அதனை இயேசு ஆசிர்வதிக்க அவை பலவாகப் பெருகி 5000 பேருக்குக் கொடுக்கப்பட்டு மீதம் 12 கூடைகள் இருந்தன.