Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 2

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 2

தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு

கவிதைப்பேழை: பாஞ்சை வளம்

நுழையும்முன்

தமிழ்நாட்டில் பல வகையான நாட்டுப்புற இலக்கியங்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் கதைப்பாடல் என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும். அது சமூகக்கதைப் பாடல், வரலாற்றுக்கதைப் பாடல், புராணக்கதைப் பாடல் எனப் பலவகைப்படும். வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைக் கூறும் கதைப்பாடலின் ஒரு பகுதியை அறிவோம்.

சுத்தவீர சூரன் கட்ட பொம்முதுரை 

துலங்கும் பாஞ்சை வளங்கள் சொல்வேன்

நாட்டு வளங்களைச் சொல்லுகிறேன்பாஞ்சைக்

கோட்டை வளங்களைக் கேளுமையா 

கோட்டைகளாம் சுத்துக் கோட்டைகளாம்மதில் 

கோட்டைகள்தான் கெட்டி வேலைகளாம்

வீட்டிலுயர் மணிமேடைகளாம்மெத்தை

வீடுகளா மதிலோடை களாம் 

பூட்டுங்கதவுகள் நேர்த்திகளாம்பணப் 

பொக்கிஷ வீடும்பார் சாஸ்திகளாம்

ஆசார வாசல் அலங்காரம்துரை

ராசன் கட்டபொம்மு சிங்காரம் 

ராசாதி ராசன் அரண்மனையில்பாஞ்சை

நாட்டரசன் கொலுவீற்றிருந்தான்

விந்தையாகத் தெருவீதிகளும்வெகு

விஸ்தாரமாய்க் கடை வாசல்களும் 

நந்தவனங்களும் சந்தனச் சோலையும்அங்கே

நதியும் செந்நெல் கமுகுகளும், 

வாரணச் சாலை ஒருபுறமாம்பரி

வளரும் சாலை ஒருபுறமாம் 

தோரண மேடை ஒருபுறமாம்தெருச் 

சொக்கட்டான் சாரியல்ஓர் புறமாம்

சோலையில் மாங்குயில் கூப்பிடுமாம்வளம்

சொல்லி மயில் விளையாடிடுமாம் 

அன்பு வளர்ந்தேறும் பாஞ்சாலநாட்டில்சில 

அதிசயம் சொல்கிறேன் கேளுமையா

முயலும் நாயை விரட்டிடுமாம்நல்ல

முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே 

பசுவும் புலியும் ஒரு துறையில்வந்து 

பால்குடிக்குந் தண்ணீர் தான் குடிக்கும்.

கறந்த பாலையுங் காகங் குடியாதுஎங்கள்

கட்டபொம்மு துரை பேரு சொன்னால் 

வரந்தருவாளே சக்க தேவிதிரு 

வாக்கருள் செய்வாளே சக்க தேவி

சொல்லும் பொருளும் 

சூரன் –   வீரன் 

பொக்கிஷம் –   செல்வம் 

சாஸ்தி –   மிகுதி 

விஸ்தாரம் –   பெரும்பரப்பு

வாரணம் –  யானை 

பரி –   குதிரை

சிங்காரம் –   அழகு

கமுகு –   பாக்கு

பாடலின் பொருள்

குறையில்லாத வீரனாகிய கட்டபொம்மன் இருந்து ஆட்சி செய்யும் பாஞ்சாலங்குறிச்சியின் வளங்களைக் கூறுகின்றேன்.

அந்நாட்டின் வளத்தையும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வளத்தையும் கேளுங்கள். அந்நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.

வீடுகள் தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும். வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடிவீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும்.

அரண்மனை வாயில் முறைப்படி அழகுபடுத்தப்பட்டு இருக்கும். அழகு மிகுந்த அரசனாகிய கட்டபொம்மன் அரசவையில் வீற்றிருப்பான்.

புதுமையான தெருவீதிகளும் பெரும்பரப்பில் அமைந்த கடைகளும் இருக்கும். பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும்.

யானைக் கூடமும் குதிரைக் கொட்டிலும் ஒருபுறம் இருக்கும். தோரணங்கள் கட்டப்பட்ட மேடையும் தாயம் ஆடுவதற்கான இடமும் ஒருபுறம் இருக்கும்.

சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும். அன்பு வளரும் நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் நிகழும் சில விந்தைகளைச் சொல்கிறேன்.

வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும். பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.

மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது.

சக்கமாதேவி பாஞ்சாலங்குறிச்சிக்குத் திருவாக்கு அருள்வாள்.

நூல் வெளி 

கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன. அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நம் பாடப்பகுதி நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. ஊர்வலத்தின் முன்னால் ——  அசைந்து வந்தது.

அ) தோரணம் 

ஆ) வானரம் 

இ) வாரணம் 

ஈ) சந்தனம் 

[விடை : இ. வாரணம்]

2. பாஞ்சாலங்குறிச்சியில்  ——– நாயை விரட்டிடும்.

அ) முயல் 

ஆ) நரி 

இ) பரி

ஈ) புலி

[விடை : அ. முயல் ]

3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ________

அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு 

ஆ) படுக்கையறை உள்ள வீடு 

இ) மேட்டுப்பகுதியில் உள்ள வீடு 

ஈ) மாடிவீடு

[விடை : ஈ. மாடிவீடு] 

4. ‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

அ) பூட்டு + கதவுகள்

ஆ) பூட்டும் + கதவுகள் 

இ) பூட்டின் + கதவுகள்

ஈ) பூட்டிய + கதவுகள்

 [விடை : ஆ. பூட்டும் + கதவுகள்] 

5. “தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ 

அ) தோரணம் + மேடை

ஆ) தோரண + மேடை 

இ) தோரணம் + ஒடை

ஈ) தோரணம் + ஓடை

[விடை : அ. தோரணம் + மேடை] 

6. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

அ) வாசல்அவங்காரம்

ஆ) வாசலங்காரம் 

இ) வாசலலங்காரம்

ஈ) வாசலிங்காரம்

[விடை : இ. வாசலலங்காரம்] 

பொருத்துக. 

வினா :

பொக்கிஷம்  – அழகு

சாஸ்தி – செல்வம்

விஸ்தாரம் – மிகுதி

சிங்காரம் – பெரும்பரப்பு 

விடை : 

பொக்கிஷம் – செல்வம் 

சாஸ்தி – மிகுதி 

விஸ்தாரம் – பெரும்பரப்பு 

சிங்காரம் – அழகு 

குறுவினா 

1. பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.

❖ பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும்.

❖ அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாக இருக்கும். 

2. பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?

பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும். 

சிறுவினா 

1. பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்? 

❖ பாஞ்சாலங்குறிச்சியில் ஒவ்வொரு வீடுகளிலும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும். 

❖ வீடுகளெல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும். 

❖ வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்ததாகவும் இருக்கும். 

2. பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக. 

❖ வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் – வேட்டை நாயை எதிர்த்து விரட்டும்.

❖ பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீரைக் குடிக்கும். 

❖ மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது. 

சிந்தனை வினா

நாட்டுப்புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் என்ன? 

❖ மாவீரன் கட்டபொம்மன் வீரம் நிறைந்தவர். 

❖ அஞ்சா நெஞ்சினர். 

❖ ஆங்கிலேய உயர் அதிகாரிகளை நேருக்கு நேராகவே தன் நாட்டு உரிமைக்காக எதிர்த்தவர். ஆகிய காரணத்தினாலும், மக்கள் மனதில் வீரம் நிறைந்தவராக இடம் பிடித்திருப்பதாலும் நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படுகின்றார்.

கற்பவை கற்றபின்

உங்கள் வீட்டில் உள்ள பெரியோரிடம் நாட்டுப்புறக்கதைப் பாடல்களைக் கேட்டு வந்து வகுப்பறையில் பகிர்க.

முடுகு 

எட்டுத் திசையும் பதினாறு கோணமும் 

கட்டியே காத்தவன் கட்டபொம்மன்

ஆத்துரு வாழும் அண்ணா சாய்பு

அண்ணனும் தம்பியும் வல்லவனாம்

குளத்தூர் வாழும் சுப்பையா

கொள்ளை யடிப்பதில் வல்லவனாம் 

கிழக்கே எல்லையாம் கீழக்கரை 

மேக்க எல்லையாம் சூலக்கரை 

ஆயிரம் கண்ணுள்ள மாரியம்மா 

ஆதரிக்க வேணும் இந்த நேரம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *