தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு
கவிதைப்பேழை: புலி தங்கிய குகை
நுழையும்முன்
தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினர். நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர். கல்வியறிவும் கவிபாடும் திறனும் பெற்ற சங்ககாலத் தாய் ஒருவர் தம் மகனின் வீரத்தைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறும் செய்தியை அறிவோம்.
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்
யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே*
–காவற்பெண்டு
கவிநடை உரை
எம் சிறுகுடிலின் அழகிய தூணைப் பற்றி நின்று
என் மகன் எங்கே என்று வினவும் பெண்ணே!
அவனிருக்கும் இடம் யானறியேன்;
புலி தங்கிச் சென்ற குகை போல
அவனைப் பெற்ற வயிறு இங்குள்ளது;
ஒருவேளை அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும்!
சொல்லும் பொருளும்
சிற்றில் – சிறு வீடு
கல் அளை – கற்குகை
யாண்டு – எங்கே
ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
பாடலின் பொருள்
(சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று, ‘அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?’ என்று கேட்டாள்.)
‘சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக்கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே?” என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என்று புலவர் பதிலளித்தார்.
நூல் வெளி
காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார். இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது. இந்நூலில் 86-ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ‘யாண்டு’ என்ற சொல்லின் பொருள் ———-
அ) எனது
ஆ) எங்கு
இ) எவ்வளவு
ஈ) எது
[விடை : ஆ. எங்கு]
2. ‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது —–
அ) யாண்டு + உளனோ?
ஆ) யாண் + உளனோ ?
இ) யா + உளனோ ?
ஈ) யாண்டு + உனோ?
[விடை : அ. யாண்டு + உளனோ?]
3. ‘கல் + அளை’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) கல்லளை
ஆ) கல்அளை
இ) கலலளை
ஈ) கல்லுளை
[விடை : அ. கல்லளை]
குறு வினா
தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?
தம் வயிற்றுக்குத் தாய் ‘புலி தங்கிய குகை’யை உவமையாகக் கூறுகிறார்.
சிறு வினா
தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
❖ சிறிய என் வீட்டிலுள்ள தூணைப் பற்றிக் கொண்டு, எதுவும் தெரியாதவள் போல நீ ‘உன் மகன் எங்கே?’ என்று என்னைக் கேட்கின்றாய்.
❖ அவன் எங்கு இருக்கின்றான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ‘புலி தங்கிய குகை’ போன்று அவனைப் பெற்ற வயிறு என்னிடம் உள்ளது.
❖ அவன் இங்கு இல்லை ஆனால் போர்க்களத்தில் இருக்கலாம். போய்க் காண்பாயாக! – என்று தன் மகன் குறித்துத் தாய் கூறினாள்.
சிந்தனை வினா
தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச்சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?
❖ புலி மிகுந்த வலிமையானது, சுறுசுறுப்பானது, தன்னம்பிக்கை மிக்கது, வீரம் மிகுந்தது.
❖ அதைப் போல வீரம் மிக்கவன் மகன்.
❖ இருள் நிறைந்த குகையில் புலி இருப்பது போல், இருள் நிறைந்த வீரம் மிக்க கருவறையில் தன் மகன் உறங்கி வளர்ந்தான்.
❖ புலி குகையை விட்டு வேட்டைக்குச் செல்வது போல பகைவர்களை வேட்டையாடுவதற்கு மகன் போர்க்களம் சென்று இருக்கின்றான்.
❖ அதனால் தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுகிறார்.
கற்பவை கற்றபின்
1. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
1. அஞ்சி அத்தை மகள் நாகையார்
2. அஞ்சில் அஞ்சியார்
3. அள்ளூர் நன்முல்லையார்
4. ஆதி மந்தியார்
5. ஊன் பித்தை
6. ஒக்கூர் மாசாத்தியார்
7. கச்சிப்பேட்டு நன்னாகையார்
8. கழார்கீரன் எயிற்றியார்
9. காக்கைப் பாடினியார்
10. காமக்கண்ணிப் பசலையார்
11. காவற்பெண்டு
12. ஞமிழிஞாலளார்
13. குளம்பாதாயனார்
14. குறமகள் இளவெயினி
15. குறமகள் குறியெயினி
16. குன்றியனார்
17. தாயங்கண்ணியார்
18. நக்கண்ணியார்
19. நல்வெல்லியார்
20. நன்னாகையார்
21. நெடும்பல்லியத்தை
22. பாரிமகளிர்
23. பூங்கண் உத்திரையார்
24. பெருங்கோப்பெண்டு
25. நக்கண்ணையார்
26. பேய்மகள் இளவெயினி
27. பொன்மணியார்
28. பொன்முடியார்
29. வெண்ணிக்குயத்தியார்
30. வெள்ளிவீதியார்
2. பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றைப் படம் வரைந்து அவற்றின் பெயர்களை எழுதுக.
காவற்பெண்டு :
• சங்ககாலப் பெண்பாற் புலவர்.
• கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய்.
• படைப்பு : புறநானூற்றில் ஒரு பாடல்.
சொல்லும் பொருளும்
சிற்றில் – சிறு வீடு
கல் அளை – கற்குகை
யாண்டு – எங்கே
ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
குடில் – வீடு