தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு
துணைப்பாடம்: இந்திய வனமகன் (நேர்காணல்)
நுழையும்முன்
மனித முயற்சியின்றி உருவாகிய வானளாவிய மரங்களும் அடர்ந்த செடி கொடிகளும் நிறைந்த இடமே காடாகும். ஆனால் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மணல் தீவில் அமைந்த இந்தக் காடு சற்று வேறுபட்டது. மணல் தீவுகளில் மூங்கில் மட்டுமே வளர வாய்ப்புண்டு என்பர். ஆனால் பல்வகை மரங்கள் நிறைந்த இந்தக் காட்டை ஒரு தனி மனிதர் உருவாக்கியுள்ளார். அவரைச் சந்திப்போம்.
ஓர் அடர்ந்த காடு. காட்டின் நடுவில் மூங்கிலால் அமைந்த ஒரு வீடு . வீட்டினுள் சிலர் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போது யானைகள் பிளிறும் ஓசை கேட்கிறது. வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த குடும்பத்தலைவர் வெளியில் வந்து பார்க்கின்றார். நள்ளிரவு நேரம் என்பதால் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் சில யானைகள் அவர் வீட்டை நோக்கி வருவதைத் தனது நுண்ணறிவால் தெரிந்து கொள்கிறார். உடனே வீட்டுக்குள் சென்று மற்றவர்களை எழுப்பி, வீட்டை விட்டு வெளியேற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். யானைகள் அவருடைய மூங்கில் வீட்டை அடித்து உடைக்கின்றன. தூரத்திலிருந்து இக்காட்சியைப் பார்த்த குடும்பத்தலைவர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றார். யானைகள் தனது வீட்டை அடித்து நொறுக்குவதைக் கண்ட ஒருவரால் மகிழ்ச்சி அடைய முடியுமா?
ஆம். அவ்வாறு மகிழ்ச்சி அடைந்தவர்தான் அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங். அவர் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மிகப்பெரிய தீவில் முப்பது ஆண்டுகள் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கியவர். அக்காட்டிலேயே தமது வாழ்வைக் கழித்துக் கொண்டிருப்பவர்; யானைகளின் வருகையைத் தமது உழைப்பிற்குக் கிடைத்த பரிசாகக் கருதியவர்; ‘இந்தியாவின் வனமகன்’ என்று அழைக்கப்படும் அவருடன் உரையாடுவோம்.
வணக்கம் ஐயா. உங்களுக்கு இந்தக் காட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?
பிரம்மபுத்திரா ஆற்றில் ஆண்டுதோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். 1979 ஆம் ஆண்டும் அது போன்று ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஏராளமான பாம்புகள், மரங்கள் இல்லாத இத்தீவில் கரை ஒதுங்கின. அவற்றுள் சில பாம்புகள் இறந்து கிடந்தன. பல பாம்புகள் வெப்பம் தாங்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இந்தக்காட்சி என்னை மிகவும் பாதித்தது. ஊருக்குள் சென்று பெரியவர்களிடம் இதைப் பற்றிப் பேசினேன். ‘தீவில் மரங்கள் இல்லை , அதனால்தான் பாம்புகள் மடிந்து போகின்றன. அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறி விட்டனர். ‘மரங்கள் இல்லாததால் தான் பாம்புகள் இறந்தன எனில், உலகில் உள்ள மரங்கள் முழுவதும் அழிந்து விட்டால் மனிதனும் இப்படித்தானே இறந்து போவான்’ என்று எண்ணிய எனக்கு உடல் நடுங்கியது. அப்பொழுதே இந்தத்தீவு முழுவதும் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் ஆழப்பதிந்து விட்டது.
உங்கள் எண்ணத்திற்கு ஊர் மக்கள் எப்படி உதவி செய்தார்கள்?
ஊர் மக்களிடம், ‘அத்தீவில் மரங்கள் வளர்க்கலாம்’ என்று நான் கூறிய பொழுது அதை யாரும் ஏற்கவில்லை. ‘அத்தீவில் மரங்களை வளர்க்கவே முடியாது. போய் உன் வேலையைப் பார்’ என்று கூறிவிட்டனர்.
பிறகு என்ன செய்தீர்கள் ஐயா?
நான் கைகளில் கிடைத்த விதைகளை எடுத்துக் கொண்டு இந்தத்தீவிற்கு வந்தேன். இங்கு அவற்றை விதைத்துத் நாள்தோறும் தண்ணீர் ஊற்றி வந்தேன். ஆயினும் ஒரு விதைகூட முளைக்கவில்லை. பிறகு வனத்துறையினரை அணுகி என்ன செய்யலாம் என்று கேட்டபோது அவர்கள், ‘அத்தீவில் மூங்கில் மரம் மட்டுமே வளரும்’ என்று கூறினர். எனக்கு உடனே உற்சாகம் பிறந்துவிட்டது. மூங்கில்களைக் கொண்டு வந்து அவற்றை இங்கு நட்டு வளர்க்கத் தொடங்கினேன். அவை விரிந்து வளரத் தொடங்கின. இனிமேல் இத்தீவில் மரம் வளர்ப்பது ஒன்றே எனது வேலை என்று அப்போதே முடிவு செய்து விட்டேன்.
மூங்கில் மட்டுமே நட்டதாகக் கூறுகிறீர்கள். ஆனால் இந்தக் காடு முழுவதும் பல்வேறு மரங்கள் வளர்ந்துள்ளனவே! எப்படி ஐயா?
எங்கள் பகுதியில் அரசு சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தியது. அதில் என்னை நான் இணைத்துக் கொண்டேன். அவர்களுடன் இணைந்து இத்தீவு முழுவதும் பல்வேறு மரங்களை நடத் தொடங்கினேன். அந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளில் முடிந்துவிட்டது. நான் மட்டும் இங்கேயே தங்கி இருந்து அனைத்து மரக்கன்றுகளையும் பாதுகாத்து வந்தேன். ஆனால் மூங்கிலைத் தவிர வேறு எந்த மரமும் வளரவில்லை . அப்போதுதான் அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவர்களின் நினைவு எனக்கு வந்தது. சிறுவயதிலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். அவரிடம் சென்று என்னுடைய மரம் வளர்க்கும் திட்டம் பற்றிக் கூறினேன். உடனே அவர், ‘மணல் பரப்பில் மற்ற மரங்கள் வளர வேண்டும் எனில் மண்ணின் தன்மையை அதற்கு ஏற்ப மாற்ற வேண்டும். அதற்கு மண்புழுக்கள் மட்டுமன்றிச் சிவப்புக் கட்டெறும்புகளும் உதவும்’ என்று கூறினார்.
கட்டெறும்புகளா? அவை கடித்தால் உடம்பில் கடுமையான எரிச்சல் ஏற்படுமே?
ஆமாம். ஆனால் என்ன செய்வது? மண்ணின் தன்மையை மாற்ற வேண்டுமே அதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான எறும்புகளைக் கொண்டுவந்து இங்கு விட ஆரம்பித்தேன். கட்டெறும்புகள் ஊர்ந்து செல்லச் செல்ல மண்ணின் தன்மை சிறிது சிறிதாக மாறத்தொடங்கியது. காடுகளில் ஆங்காங்கே பச்சைப் பசும்புற்கள் தலைகாட்டத் தொடங்கின. அப்பொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன் பின்பு நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன.
இவ்வளவு மரங்களை வளர்ப்பதற்கு விதைகளும் உரமும் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?
கால்நடைகள் வளர்ப்பதுதான் என்னுடைய வேலை. அவற்றின் சாணத்தை ஒரு துளி கூட வீணாக்காமல் இயற்கை உரம் தயாரிக்கத் தொடங்கினேன். ஒரு பழம் சாப்பிட்டால் கூட அதன் கொட்டையை வீசி எறியாமல் விதையாகச் சேர்த்து வைப்பேன். பிறகு மழைக்காலம் தொடங்குவதற்கு முன் விதைகளை எடுத்து இத்தீவில் தூவத்தொடங்கி விடுவேன். இப்படி ஒவ்வோர் ஆண்டும் நான் தூவிய விதைகள்தாம் இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இக்காடு.
மழை இல்லாத காலங்களில் செடிக்கு எப்படித் தண்ணீர் ஊற்றினீர்கள்?
ஆற்றின் கரையோரம் இருந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதில் எனக்குச் சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் தொலைவில் இருந்த செடிகளுக்கு நீர் ஊற்றுவது சற்றுக் கடினமான செயலாக இருந்தது. அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். செடியைச் சுற்றி மூங்கில் குச்சிகளை நட்டுவைத்து அதில் ஒரு பானையைப் பொருத்தினேன். அதில் ஒரு சிறுதுளை இட்டு, நீர் சொட்டுச் சொட்டாக வடிவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். பிறகு அதில் நீர் நிரப்பினால் ஒரு வாரத்திற்குச் சிக்கல் இருக்காது. இப்படித்தான் மற்ற செடிகளை வளர்த்து வந்தேன்.
சரி, உங்கள் வீட்டிற்கு யானை வந்த கதையைக் கூறுங்களேன்!
நான் நட்ட செடிகள் முழுவதும் மரங்களாக வளரத் தொடங்கியபோது அவற்றில் பறவைகள் வந்து தங்கின. பறவைகளின் எச்சத்தால் பரவிய விதைகள் இந்தக் காடு வளர மேலும் துணைபுரிந்தன. பிறகு முயல், மான், காட்டு மாடுகள் என விலங்குகள் பலவும் வரத்தொடங்கின. அப்படித்தான் ஒருநாள் யானைக் கூட்டம் ஒன்று வந்தது. யானைகள் தங்கியிருக்கும் காடுதான் வளமான காடு என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். நான் வளர்த்த காட்டுக்கு யானைகள் வந்த நாள் என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. அதன் பிறகு இங்கு பாம்புகள், கழுகுகள், காண்டா மிருகங்கள் போன்ற காட்டு விலங்குகள் பலவும் வரத் தொடங்கின. நிறைவாகக் ‘காட்டின் வளம்’ என்று குறிக்கப்படும் புலிகளும் வந்து தங்கத் தொடங்கின.
தெரிந்து தெளிவோம்
• 2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு ‘இந்திய வனமகன் (Forest Man of India)’ என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.
• 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.
• கௌகாத்தி பல்கலைக்கழகம் ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கியுள்ளது.
புலிகளும் இந்தக் காட்டில் உள்ளனவா? உங்களுக்கு அச்சமாக இல்லையா?
இல்லை. புலிகள் வந்த பிறகுதான் இக்காட்டின் உணவுச்சங்கிலி நிறைவடைந்தது, நான் புலிகளுக்குத் தொல்லையில்லாமல் எனது பாதைகளை வகுத்துக்கொண்டு இக்காட்டைப் பாதுகாத்து வருகிறேன்.
இது மிகக் கடினமான பணி. மற்றவர்களுக்கு எப்படித் தெரிந்தது?
ஜிட்டுகலிட்டா என்னும் வனவிலங்கு ஆர்வலர் என்னுடைய காட்டைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு வந்தார். நான் இந்தக் காட்டை உருவாக்கிய முறையை அவரிடம் கூறினேன். என்னைப் பாராட்டிப் பேசிவிட்டு அவர் இங்கிருந்து சென்றுவிட்டார். பிறகு ஒருநாள் யானைக் கூட்டத்தை விரட்டிக் கொண்டு வந்த வனக்காவலர்கள் என்னுடைய இந்தக் காட்டைக் கண்டு வியந்தனர். அவர்களுடைய கணக்கெடுப்பு வரைபடத்தில் இல்லாத இந்தக் காட்டைக் கண்டு மகிழ்ந்தனர். அதன் பிறகு என்னுடைய காடு பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் செய்தி வெளிவந்தது.
மிக்க மகிழ்ச்சி ஐயா. அடுத்து உங்களுடைய பணி என்ன?
இந்தத்தீவின் மற்றொரு பகுதியில் இன்னொரு காட்டை உருவாக்கத் தொடங்கியிருக்கிறேன். எப்படியும் அதற்கு முப்பது ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதற்கு உதவ என்னுடைய மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். ஆதலால் அங்கு உறுதியாக ஒரு காட்டை உருவாக்குவேன்.
உங்களுடைய இந்தத் திட்டத்தைக் கேட்கும் பொழுது உங்களை மிகவும் பாராட்டத் தோன்றுகிறது ஐயா.
நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும் எனில் ஆளுக்கு இரண்டு மரக்கன்றுகளை நட்டு வளருங்கள். அதுவே எனக்குப் போதும்.
உறுதியாக ஐயா, உங்களோடு பேசிய பிறகு நானும் கட்டாயம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்குவேன். உங்கள் பணி மேலும் தொடரட்டும். இன்னும் சிறப்படைய வாழ்த்துகிறேன். நான் சென்று வருகிறேன் ஐயா! நன்றி.
ஜாதவ்பயேங் போன்று நாமும் ஒரு காட்டை உருவாக்க முயல்வோம்; அதற்கு அடையாளமாக நம் வீட்டைச் சுற்றி ஒருசில மரங்களை நட்டு வளர்ப்போம். அதற்கு நாம் அனைவரும் உறுதி ஏற்போம். மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! நாட்டின் வளம் காப்போம்!
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
ஜாதவ்பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்?
முன்னுரை:
அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஜாதவ்பயேங். இந்திய வனமகன்’ என்று இவர் அழைக்கப்படுகிறார். பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள மிகப்பெரிய தீவில் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கினார். அதனை எப்படி உருவாக்கினார்? என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
மரம் வளர்க்கும் எண்ணம்:
1979ல் பிரம்மபுத்திரா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. மரங்கள் இல்லாத தீவில் பாம்புகள் கரை ஒதுங்கின. சில பாம்புகள் இறந்தன. பல பாம்புகள் வெப்பம் தாங்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இக்காட்சி ஜாதவ்பயேங்கை மிகவும் பாதித்தது. ஊர்ப் பெரியவர்கள் ‘தீவில் மரங்கள் இல்லாததுதான் காரணம்’ என்றனர். அவரிடம் தீவு முழுவதும் மரம் வளர்க்கும் எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. ஊர் மக்களிடம் தீவில் மரம் வளர்க்கலாம் என்று அவர் கூறிய போது, அதனை யாரும் ஏற்கவில்லை.
விடா முயற்சி:
ஜாதவ்பயேங் தீவில் விதைகளை விதைக்கத் தொடங்கினார். நன்கு பராமரித்தார். ஆனால் அவைகள் முளைக்கவில்லை. வனத்துறை அறிவுறுத்தலால் மூங்கில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார். அவை நன்கு வளர ஆரம்பித்தது. அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.மூங்கிலைத் தவிர வேறு எந்த மரமும் இத்தீவில் வளரவில்லை. அசாம் வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவர்களின் அறிவுறுத்தலின்படி மண்புழுவுடன் சிவப்புக் கட்டெறும்பை அத்தீவு மண்ணில் விட்டார். சிறிது சிறிதாக மண்ணின் தன்மை மாறி பசும்புல்லும் மரங்களும் வளரத் தொடங்கின.
புதிய காடு உருவானது:
மரங்களில் விளைந்த பழங்களை உண்டு, அதன் கொட்டைகளை விதையாகச் சேமித்து வைத்து விதைத்தார். கால்நடைகளை வளர்த்து அதன் சாணங்களை மரங்களுக்கு உரமாக்கினார். மழை பெய்யாத காலங்களில் பானை பெரிய மூங்கில் துணை கொண்டு சொட்டு சொட்டாக நீரினை மரங்களுக்குவிட்டார். மரங்கள் பெருகி வளர்ந்து, அத் தீவு பெருங்காடானது.யானைகள், பாம்புகள், கழுகுகள், காண்டாமிருகங்கள், புலிகள் முதலிய காட்டு விலங்குகள் வரத்தொடங்கின.
முடிவுரை:
ஜாதவ்பயேங் போல நாமும் காட்டை உருவாக்க முயல்வோம். அதற்கு அடையாளமாக நம் வீட்டைச் சுற்றி மரங்களை நட்டு, அவை நன்கு வளரும் வரை காக்க வேண்டும். இந்திய வனமகன் வழியில் நாமும் செல்வோம்.
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!
காட்டினை உருவாக்குவோம்!
கற்பவை கற்றபின்
உங்கள் பள்ளி அல்லது நீங்கள் வாழும் பகுதியில் மரக்கன்று ஒன்றை நடுங்கள். அதனை நாள்தோறும் பாதுகாத்து வாருங்கள். அதன் விவரங்களைப் பதிவேட்டில் பதிவு செய்யுங்கள்.