தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை
துணைப்பாடம் : காணாமல் போன பணப்பை
இயல் இரண்டு
துணைப்பாடம்
காணமல் போன பணப்பை
ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். ஒரு நாள் அவன் தன்னிடமிருந்த ஆடுகளை விற்று, ஒரு பை நிறைய பணத்துடன் தன் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.
திரும்பும்போது, அளவுக்குமிஞ்சிய கனவில் மிதந்துகொண்டே நடந்தான். “இந்தப் பணத்தைக் கொண்டு, மேலும் ஆடுகள் வாங்கி விற்றால், நிறைய லாபம் கிடைக்கும். நான் பெரும் பணக்காரன் ஆவேன்’ எனக் கற்பனை செய்தான். அப்போது அவனையும் அறியாமல் தான் வைத்திருந்த பணப்பையை நழுவவிட்டான்.
வீட்டுக்கு வந்த பிறகுதான் பணப்பை காணாமல் போனதை உணர்ந்தான். அதை எண்ணி எண்ணி அவனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலாகிவிட்டது.
மறுநாள் அவன் தன் நாட்டுச் சிற்றரசனிடம் சென்று முறையிட்டான். ‘அரசே! என் பணப்பையை வரும் வழியில் தொலைத்து விட்டேன். அதை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுத்தால் நாற்பது பணம் சன்மானமாகக் கொடுத்து விடுகிறேன். அருள் கூர்ந்து இதை ஊர் மக்களுக்கு அறிவிக்க வேண்டுகிறேன்” எனக் கேட்டுக் கொண்டான்.
அரசனும் அவ்வாறே முரசு அறைந்து நாட்டு மக்களுக்கு அறிவித்தான்.
மூன்று நாள் கழித்து, வயதான மூதாட்டி ஒருவர், தான் கண்டெடுத்த பணப்பையை சிற்றரசனிடம் ஒப்படைத்தாள். சிற்றரசன் அவளுடைய நேர்மையையும், நாணயத்தையும் கண்டு மெச்சி அவளுக்குத் தக்க வெகுமதி அளிக்கும்படி வியாபாரிக்கு ஆணையிட்டான்.
அதற்குள் அந்த வியாபாரி பணப்பையைப் பெற்றுக் கொண்டு, பணம் சரியாக இருக்கிறதா என எண்ணிப் பார்த்துக் கொண்டான். எல்லாம் சரியாக இருந்தது. பணப்பையைத் திருப்பிக் கொடுப்பவருக்குச் சன்மானம் அளிப்பதாக முன்பு கூறியிருந்தான். ஆனால், இப்போது அவன் மனம் சட்டென மாறியது. தான் சொன்ன சொல்லை அவன் நிறைவேற்ற விரும்பவில்லை.
எனவே, அவன் பையில் அதிகப் பணம் இருந்ததாகவும், இப்போது பணம் குறைகிறது என்றும் பொய் சொன்னான்.
இதை அறிந்துகொண்ட அரசன், சொன்னபடி வெகுமதி கொடுக்காததைக் கண்டு வெகுண்டான். அந்த வணிகனுக்கு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான், “வணிகனே, உன்பையில் இப்போது இருப்பதைக்காட்டிலும் அதிகமாகப் பணம் இருந்தது இல்லையா? எனவே, இது உன் பை இல்லை; வேறு யாருடையதோ தெரியவில்லை. பணத்திற்குச் சொந்தக்காரன் வந்து கேட்கும்வரை என்னிடமே இருக்கட்டும். நீ இவ்விடத்தைவிட்டுப் போகலாம்” என ஆணையிட்டான்.
அவன் சென்றபின், “பணத்தை வைத்திருப்பவன் மட்டுமே பணக்காரன் அல்லன்; சொன்ன சொல்லை மறவாது மற்றவர்க்குப் பெருந்தன்மையுடன் கொடுக்கும் உள்ளம் படைத்தவனே பணக்காரன்” என்று கூறிய அரசன், மூதாட்டியின் நேர்மையைப் பாராட்டிப் பணப்பையை அவருக்கே பரிசாகவும் கொடுத்துவிட்டான்.
கஞ்சத்தனமுடைய வணிகன் பணத்தை இழந்ததுடன் மற்றவர்களுடைய இகழ்ச்சிக்கும், கேலிப்பேச்சுக்கும் ஆளானான்.
நீதி : ‘நேர்மை நன்மை தரும்‘
மதிப்பீடு
வினாக்களுக்கு விடையளிக்க.
1. பணப்பையைப் பெற்றுக் கொண்ட வணிகன் என்ன கூறினான்?
விடை
வணிகன், பணப்பையைப் பெற்றுக் கொண்டு “என் பையில் அதிகப் பணம் இருந்தது. இப்போது பணம் குறைகிறது” என்று பொய் சொன்னான்.
2. இக்கதையின் மூலம் நீ அறியும் நீதி என்ன?
விடை
இக்கதையின் மூலம் நான் அறியும் நீதி – ‘நேர்மை நன்மை தரும்.’
3. இக்கதையில் நீ விரும்பிய கதைமாந்தர் யார்? அவரைப் பற்றி ஐந்து வரிகளில் எழுதுக.
விடை
● இக்கதையில் நான் விரும்பிய கதைமாந்தர் மூதாட்டி.
● மூதாட்டி நினைத்திருந்தால் அப்பணப்பையை அவளே எடுத்துக் கொண்டிருக்கலாம்.
● ஆனால் நேர்மையாக சிற்றரசரிடம் ஒப்படைத்துள்ளார்.
● அம்மூதாட்டியின் நேர்மைக்குக் கிடைத்த பரிசுதான் அப்பணப்பை.
● இச்செயலால் எனக்கு இம்மூதாட்டியைப் பிடிக்கும்.
சிந்தனை வினா
நீங்கள் அரசராக இருந்தால், இந்தச் சிக்கலுக்கு என்ன முடிவெடுப்பீர்கள்?
விடை
நான் அரசராக இருந்தால் அவர் செய்தபடியே அப்பணத்தை மூதாட்டியிடம் ஒப்படைத்து விடுவேன். மேலும், அவ்வணிகரை ஒரு மாதத்திற்கு அரண்மனையிலும் அரசாங்க நிலத்திலும் ஊதியமின்றிப் பணி செய்ய வேண்டும் என கட்டளையிடுவேன்.
கற்பவை கற்றபின்
● நேர்மையால் ஒருவர் உயர்வதாக ஒரு பக்க அளவில் கதை எழுதுக.
விடை
மன்னன் ஒருவன் தன் நாட்டு மக்கள் நேர்மையாக வாழ்கின்றனரா என்று அறிய விரும்பினான். அதனால் அரசுப் பணியாளரிடம் இரண்டு ரொட்டித் துண்டுகளைக் கொடுத்து இரண்டு பேரிடம் கொடுக்கச் சொன்னார். ஒரு ரொட்டியில் வைரக்கற்களை உள்ளே வைத்தும் ஒரு ரொட்டித் துண்டில் ஒன்றும் வைக்காமலும் கொடுத்து விட்டார்.
அரசுப் பணியாளர் அரண்மனையை விட்டு வெளியே சென்று வைரக்கற்கள் உள்ள ரொட்டியைச் சாது ஒருவரிடமும் சாதாரண ரொட்டியைப் பிச்சைக்காரரிடமும் கொடுத்தான்.
மன்னர் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். சாது ரொட்டியை வாங்கிப் பார்த்தார். பெரியதாகவும் கரடுமுரடாகவும் இருந்தால் அது வேகவில்லை என எண்ணி அதனைப் பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டுப் பிச்சைக்காரரிடம் இருந்த ரொட்டியை அவர் வாங்கிக் கொண்டும் சென்று விட்டார்.
சாது வீட்டுக்குச் சென்றார். தாடியை அகற்றி விட்டு ரொட்டியைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் தாடியைப் பொருத்திக் கொண்டார். வெளியே சென்றுவிட்டார். பிச்சைக்காரர் வீட்டிற்குச் சென்றார். தன் மனைவியுடன் ரொட்டியைப் பகிர்ந்து உண்பதற்காக எடுத்தார்.
அதற்குள் விலையுயர்ந்த வைரக் கற்களைப் பார்த்ததும் அதனை அரசுப் பணியாளரிடம் கொடுக்க 5 முன் வந்தார். மனைவியோ தானே வைத்துக் கொள்ளலாம் என்று கூறினாள். அவர் அவளுடைய பேச்சைக் கேட்காமல் அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.
மன்னரிடம் நடந்தவற்றைக் கூறினான். மன்னன் அவனுடைய நேர்மையைப் பாராட்டி அவர் கொண்டு வந்த வைரத்தை அவனுக்கே திருப்பிக் கொடுத்தார். பிச்சைக்காரரும் – தனது நேர்மைக்குக் கிடைத்த பரிசாக எண்ணி வாங்கிக் கொண்டார். கொஞ்சம் வைரத்தை : விற்றுப் புதிய தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேறினார்.
நீதி : நேர்மைக்கு கிடைத்த பரிசு
● ‘காணாமல் போன பணப்பை‘ இக்கதையை நாடகமாக நடித்துக்காட்டுக.
● ‘காணாமல் போன பணப்பை‘ கதையை உரையாடல் வடிவில் எழுதுக.
விடை
காணாமல் போன பணப்பை
(வணிகன் ஒருவன் தன்னிடமிருந்த ஆடுகளை விற்று, பணத்துடன் தன் ஊருக்குத் திரும்பினான். “இப்பணத்தில் ஆடுகள் வாங்கி விற்றால் லாபம் கிடைக்கும். நான் பெரும் பணக்காரன் ஆவேன்” எனக் கற்பனை செய்தவாறு தன் கையில் இருந்து பணப்பையை நழுவ விட்டான். மறுநாள் சிற்றரசனிடம் சென்று முறையிட்டான்.)
வணிகன் : அரசே! என் பணப்பையை வரும் வழியில் தொலைத்து விட்டேன். அதை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுத்தால் நாற்பது பணம் சன்மானமாகக் கொடுத்து விடுகிறேன். அருள் கூர்ந்து இதை ஊர் மக்களுக்கு அறிவிக்க வேண்டுகிறேன்.
அரசன் : அவ்வாறே ஆகட்டும்!
முரசு அறைந்து நாட்டு மக்களுக்கு அறிவித்தான்.)
(மூன்று நாட்களுக்குப் பிறகு)
மூதாட்டி : அரசே! இப்பணப்பையை நான் சென்ற வழியில் பார்த்தேன். இதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
சிற்றரசன் : உங்கள் நேர்மையையும், நாணயத்தையும் கண்டு மெச்சுகிறேன்.
சிற்றரசன் : (வணிகரிடம்) மூதாட்டிக்கு தக்க வெகுமதியை கொடுத்துவிடு.
வணிகன் : (பணத்தை எண்ணிப் பார்த்தான். சன்மானம் அளிக்க மனமில்லை இப்பையில் அதிகப் பணம் இருந்தது. இப்போது பணம் குறைகிறது.
சிற்றரசன் : (வணிகருக்கு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்) “வணிகனே! உன்பையில் இப்போது இருப்பதைக் காட்டிலும் அதிகமாகப் பணம் இருந்தது இல்லையா? எனவே, இது உன் பை இல்லை, வேறு யாருடையதோ தெரியவில்லை. பணத்திற்குச் சொந்தக்காரன் வந்து கேட்கும்வரை என்னிடமே இருக்கட்டும். நீ இவ்விடத்தைவிட்டுப் போகலாம்.
சிற்றரசன் : பணத்தை வைத்திருப்பவன் மட்டுமே பணக்காரன் அல்லன்; சொன்ன சொல்லை மறவாது மற்றவர்க்குப் பெருந்தன்மையுடன் கொடுக்கும் உள்ளம் படைத்தவனே பணக்காரன்.
(மூதாட்டியின் நேர்மையைப் பாராட்டிப் பணப்பையை அவருக்கே பரிசாகக் கொடுத்துவிட்டார்.)
(வணிகன் பணத்தையும் இழந்தான். மற்றவர்களின் கேலிப்பேச்சுக்கு ஆளானான்.)