தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு
செய்யுள் : திருக்குறள் – பண்புடைமை
இயல் இரண்டு
செய்யுள்
நாகரிகம் / பண்பாடு
கற்றல் நோக்கங்கள்
❖ திருக்குறளின் மேன்மையை அறிந்துகொள்ளுதல்
❖ தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்துகொள்ளுதல்
❖ தமிழர்கள் வீரக்கலைகளுக்கு அளித்த முதன்மையைப் புரிந்துகொள்ளுதல்
❖ தமிழர் கட்டடக்கலை, சிற்பக்கலை குறித்துத் தெரிந்துகொள்ளுதல்
❖ உரையாடல்களிலும் தொடர்களிலும் இணைப்புச்சொற்களைப் பயன்படுத்துதல்
திருக்குறள்
பண்புடைமை
1. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
பொருள் : அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழ்வதற்கு உரிய நல்ல வழியாகும்.
சொல்பொருள் : ஆன்ற – உயர்ந்த
2. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு
பொருள் : நேர்மையையும் நன்மையையும் விரும்பி, பிறருக்குப் பயன்படும்படி வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
சொல்பொருள் : நயன் – நேர்மை; நன்றி – நன்மை
3. பண்புஉடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
பொருள் : நற்பண்பு உடையவர் செய்யும் நல்ல செயல்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது. இல்லையெனில், அது மண்ணோடு மண்ணாகி அழிந்துவிடும்.
சொல்பொருள் : புக்கு – புகுந்து; மாய்வது – அழிவது
4. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
பொருள் : அரத்தைப்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், மரத்தைப் போன்றவரே ஆவர்.
சொல்பொருள் : அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி; போல்வர் – போன்றவர்
5. பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் தற்று
பொருள் : பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமானது, தூய்மையற்ற பாத்திரத்தின் தன்மையால் நல்ல பால் திரிவது போன்றதாகும்.
சொல்பொருள் : பெருஞ்செல்வம் – மிகுந்த செல்வம்; நன்பால் – நல்ல பால்
நூல்குறிப்பு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று, திருக்குறள். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளை உடையது. இதில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன. உலகிலுள்ள அனைவரும் பின்பற்றத்தக்க சிறந்த அறநெறிக் கருத்துகள் இந்நூலில் உள்ளதால், இது உலகப்பொதுமறை எனப் போற்றப்பெறுகிறது. இந்நூலை இயற்றியவர், திருவள்ளுவர்.
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. ‘ஆன்ற‘ – இச்சொல்லின் பொருள்
அ) உயர்ந்த
ஆ) பொலிந்த
இ) அணிந்த
ஈ) அயர்ந்த
[விடை : அ) உயர்ந்த]
2. பெருஞ்செல்வம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பெருஞ் செல்வம்
ஆ) பெரும் + செல்வம்
இ) பெருமை + செல்வம்
ஈ) பெரு + செல்வம்
[விடை : இ) பெருமை + செல்வம்]
3. பண்புடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) பண் + புடைமை
ஆ) பண்பு + புடைமை
இ) பண்பு + உடைமை
ஈ) பண் + உடைமை
[விடை : இ) பண்பு + உடைமை]
4. அது + இன்றேல் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) அது இன்றேல்
ஆ) அதுயின்றேல்
இ) அதுவின்றேல்
ஈ) அதுவன்றேல்
[விடை : இ) அதுவின்றேல்]
5. பாடலில், நேர்மை என்னும் பொருள் தரும் சொல்
அ) நயன்
ஆ) நன்றி
இ) பயன்
ஈ) பண்பு
[விடை : அ) நயன்]
ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) இவ்விரண்டும் – இ + இரண்டும்
ஆ) மக்கட்பண்பு – மக்கள் + பண்பு
இ. உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக.
அன்புடைமை ஆசிரியர் இகழ்தல் ஈகை
உதவி ஊன்றுகோல் எய்யாமை ஏகன்
ஐம்பால் ஒற்றுமை ஓங்காரம் ஔவியம்
ஈ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
பண்புடையார் நயனொடு அரம்போலும்
மண்புக்கு பயனுடையார் மரம்போல்வர்
உ. அன்புடைமை, பண்புடைமை போல் ஈற்றில் ‘மை’ என முடியும்படி நான்கு சொற்கள் எழுதுக.
விடை
அசைவின்மை அறியாமை அளவின்மை அழியாமை
ஆசையின்மை நேர்மை ஏழ்மை கல்லாமை
ஊ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. பண்புடையவராக வாழ்வதற்குரிய நல்ல செயல்கள் யாவை?
விடை
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழ்வதற்குரிய நல்ல செயலாகும்.
2. ‘மரம் போன்றவர்‘ எனத் திருக்குறள் யாரைக் குறிப்பிடுகிறது?
விடை
அரத்தைப்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், மரத்தைப் போன்றவர் எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது.
3. பண்பில்லாதவன் பெற்ற செல்வம் எவ்வாறு பயனிலாது போகும்?
விடை
பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமானது, தூய்மையற்ற பாத்திரத்தின் தன்மையால் நல்ல பால் திரிவது போன்று பயனில்லாமல் போகும்.
எ. சிந்தனை வினா
ஒருவரின் பண்புகளைக்கொண்டே, இந்த உலகம் அவரை மதிக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
விடை
ஒருவரின் பண்புகளைக் கொண்டே, இந்த உலகம் அவரை மதிக்கிறது.
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று புறநானூறு கூறும்.
ஒருவர் நற்செயல்களைச் செய்து, அன்புடன் பேசுதல், பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக எண்ணுதல், இன்சொல் பேசுதல் ஆகிய நற்பண்புகளுடன் செயல்புரிந்தால் அவரை இவ்வுலகம் மதிக்கும் என்பதில் ஐயமில்லை
கற்பவை கற்றபின்
● பாடலைச் சரியான ஒலிப்புடன் படித்து மகிழ்க.
● நம்மிடம் இருக்கவேண்டிய நற்பண்புகளைப் பட்டியலிடுக.
விடை
இரக்கம்
ஈகை
நடுவுநிலை
கருணை
சான்றாண்மை (நெறி பிறழாமல் வாழ்வது)
● பண்பா, பணமா எதற்கு முதன்மையளிக்க வேண்டும்? பட்டிமன்றத்திற்கு உரை தயாரித்துப் பேசுக.
விடை
தலைப்பு : பண்பா, பணமா எதற்கு முதன்மையளிக்க வேண்டும்?
நடுவர் : தமிழாசிரியர் – திரு. கமலநாதன்
பண்பு : கண்ணன்
பணம் : நிரஞ்சனா
நடுவர் – கமலநாதன் :
நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு பண்பா, பணமா எதற்கு முதன்மையளிக்க வேண்டும்? ஒரு மனிதன் தொழிலில் சிறப்படைய வேண்டும்; குடும்பத்துக்கு நல்ல தலைவனாக இருக்க வேண்டும்; சமுதாயத்தில் சிறந்த மதிப்போடு வாழ வேண்டும். இம்மூன்றும் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவன் சிறந்த வாழ்க்கையை வாழ்வதாக அர்த்தம். இவ்வுலகத்தில் குறையே இல்லாத மனிதன் யாருமே கிடையாது. அனைவரிடத்திலும் ஏதோ ஒரு குறை இருந்தே தீரும். இப்போது பண்பே என்ற தலைப்பில் பேச கண்ணனை அழைக்கிறேன்.
பண்பே – கண்ணன் :
பண்பு எல்லா உயிருக்கும் ஆன்மாவிற்கும் இன்றியமையாத ஒன்று. பிறர் மனம் நோகாமல் சொற்களை கையாள்வது ஒரு பண்பு! செயல்படுவது ஒரு பண்பு. அறிமுகம் ஆனவர்களுக்கு உதவும்போது, மனிதன் ஆகிறான். அதுவே, அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவும்போது இறைவன் ஆகிறான். பணிவு நல்ல நட்பை தருகிறது, எளிதில் வேலை கிடைக்க உதவுகிறது.
பணி உயர்வுக்கு பிறரிடமிருந்து சிபாரிசு பெற்றுத்தருகிறது. போட்டிகள், பொறாமைகள், எதிர்ப்புகள், தடைகள் எதுவும் இருக்காது. இனிமையாக பேசுதலும் பிறர் நலனில் அக்கறை காட்டுதலும் எப்போதும் நமக்கு பல மடங்காகத் திரும்பிக் கிடைக்கும். நேர்மையையும் நன்மையையும் விரும்பி, பிறருக்குப் பயன்படும்படி வாழும் பெரியாரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர். ஆகவே பண்பிற்கே முதன்மையளிக்க வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன்.
பணமே – நிரஞ்சனா :
வள்ளுவர் கூறும் அறம், பொருள், இன்பம் என்கின்ற மூன்றில் பொருளை மட்டும் பெற்றுவிட்டால் அறமும், இன்பமும் தானே வந்துவிடும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை ,பணம் பத்தும் செய்யும், பணம் இல்லாதவன் பிணம், பணம் பந்தியிலே- என்பன பணத்தின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்கும் பழமொழிகள். இந்தக் கலியுகக் காலத்தில் பணம் இல்லாதவன் பிணமாகக் கருதப்படுவான்.
பணம் என்றால் என்ன? உங்கள் இமைக் கதவுகளை மூடி சிந்தனை என்னும் சன்னலைத் திறந்து பார்த்தால் பதில் கிட்டும். பணம் என்றால் ஒரு மதிப்புள்ள நாணயம் என்று பொருள்படும். பணம் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள் முதல் இடத்தை வகிக்கிறது. ஆகவே பணத்திற்கே முதன்மையளிக்க வேண்டும் என்று கூறி விடை பெறுகிறேன்.
நடுவர் – கமலநாதன் :
கடவுளின் படைப்பில் திசைகள் எட்டு, ஸ்வரங்கள் ஏழு, சுவைகள் ஆறு, நிலங்கள் ஐந்து, காற்று நான்கு, மொழி மூன்று (இயல், இசை, நாடகம்), வாழ்க்கை இரண்டு (அகம், புறம்) என்று படைத்த இறைவன், ஒழுக்கத்தை ஒன்றாக மட்டுமே படைத்துள்ளான். நேர்மை, ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், அவன் மனதை பிறர் படிப்பார்கள். அங்கே பண்பு ஓங்கும். எனவே, பண்பு கொண்டவனே சிறந்த மனிதனாகிறான்.