சமூக அறிவியல் : பருவம் 2 அலகு 1 : பண்டைய அகழ்வாராய்ச்சி
அலகு 1
பண்டைய அகழ்வாராய்ச்சி
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,
❖ அகழ்வாராய்ச்சி பற்றி அறிந்து கொள்வர்.
❖ தொல்பொருள் ஆய்வாளர்கள் பற்றித் தெரிந்து கொள்வர்.
❖ அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற சில இடங்கள் பற்றித் தெரிந்து கொள்வர்.
ரேகா: இன்று மிகவும் வெப்பமாக உள்ளது. நான் வெளியில் விளையாடச் செல்ல வேண்டாம் என்று எண்ணுகிறேன்.
பாட்டி: ஆம். உண்மைதான். ஆனால், நான் சிறு வயதில் எப்பொழுதும் வெளியில்தான் விளையாடுவேன்.
ரேகா: வெப்பமாக இருந்த பொழுது உங்களால் எப்படி விளையாட முடிந்தது?
பாட்டி: நான் மரநிழலில்தான் விளையாடுவேன். ஏனெனில் என் சிறு வயதில் நமது சுற்றுப்புறம் அதிக மரங்கள் நிறைந்ததாக இருந்தன.
ரேகா: அப்படியா? அன்று மக்கள் எவ்விதமாக வாழ்ந்திருப்பார்கள் என்பதனை எண்ணி வியக்கின்றேன்.
பாட்டி: உனக்குத் தெரியுமா? அக்கால மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஒரு வழி உள்ளது.
ரேகா: அது எப்படி சாத்தியம்? அதனைப் பற்றி விரிவாகக் கூறுங்கள்.
பாட்டி: நீ கடற்கரையில் மணலைத் தோண்டும் பொழுது, சிப்பியை எப்பொழுதாவது கண்டெடுத்தது உண்டா?
ரேகா: ஆம்.
பாட்டி: அதேபோலத் தான் மக்கள் முன்பு பயன்படுத்திய பொருள்களைக் கண்டுபிடிக்க பூமியைப் பல்வேறு இடங்களில் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்பவர்களும் உள்ளனர். அவர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (Archaeologist) என்று அழைக்கப்படுகிறார்கள். பூமியைத் தோண்டுவதற்கான செயல்முறை அகழ்வாராய்ச்சி (Excavation) என்று அழைக்கப்படுகிறது.
நாம் இப்பொழுது அகழ்வாராய்ச்சி பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
அகழ்வாராய்ச்சி
அகழ்வாராய்ச்சி என்பது பூமியின் மேற்பரப்பின்கீழ் என்ன இருக்கிறது என்பதைப்பற்றி ஆராய்வதாகும். இந்த ஆய்வு, வரையறைக்குட்பட்டு நிகழ்த்தப்படுகிறது. அனைத்து வகையான தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் நடைபெறுவதற்கு சிறந்த திறன், கவனத்துடன் திட்டமிடல் ஆகியனத் தேவை. அகழ்வாராய்ச்சிகள் முறையாகத் திட்டமிடல், தற்செயல் மற்றும் மீட்புப் பணி ஆகியநோக்கங்களின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். பெரும்பாலான அகழ்வாராய்ச்சிகள் முன்னரே திட்டமிட்டு தாம் நடைபெறுகின்றன. அவற்றின் முக்கிய நோக்கமே, புதைந்து கிடக்கும் ஆதாரங்களைக் கண்டெடுப்பது ஆகும்.
நாம் அறிந்து கொள்வோம்.
அகழ்வாராய்ச்சியின் பொழுது கண்டெடுக்கப்படும் பொருள்கள் தொல்கைவினைப் பொருள்கள் என அழைக்கப்படுகின்றன. தொல்பொருள் ஆய்வாளர்கள் அக்காலத்தில் மக்கள் எவ்விதம் வாழ்ந்தனர் என்பதனை அவர்களின் வீடுகள், உடைகள், எலும்புகள் மற்றும் பிற பொருள்களைக் கொண்டு கூறுகின்றனர்.
செயல்பாடு
நாம் செய்வோம்.
வகுப்பை மூன்று குழுக்களாகப் பிரித்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடுமாறு மாணவர்களிடம் கூறுக. அவர்கள் மண்ணைத் தோண்டி, மரக்கன்றை நடுவார்கள்.
நான் எனது வீட்டின் அருகில், மண்ணைத் தோண்டினால் எனக்கும் தொல்கைவினைப் பொருள்கள் கிடைக்குமா?
தொல்பொருள் ஆய்வாளர் என்பவர் யார்?
தொல்பொருள் ஆய்வாளர்கள்: மனிதர்கள் மற்றும் இடங்களின் வரலாற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆய்வு செய்கின்றனர். மேலும் அவர்கள் தொல்கைவினைப் பொருள்களையும் பகுப்பாய்வு செய்வார்கள். அகழ்வாராய்ச்சி நமக்குப் பழங்காலத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை அளிக்கிறது.
உலக அளவில் ஆர்வத்தை ஏற்படுத்திய சில அகழ்வாராய்ச்சிகள்
எகிப்தில் உள்ள பிரமிடு: பிரமிடுகள் பற்றிய அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டபோது அரசிக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிலான பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகச் சிறப்பான வடிவமைப்பினைக் கொண்ட மிகப் பெரிய கல்லறைகள் அரச குடும்பத்திற்காகக் கட்டப்பட்டன என்பதனைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். பிரமிடுகளிலிருந்து கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகள், மக்களின் சராசரி உயரம் மற்றும் வயது பற்றிய தகவல்களைக் கொடுத்தன.
சிந்துவெளி நாகரிகம்: சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோண்டப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வு தளம் இதுவாகும். அங்கு சுட்ட செங்கற்கள் நிலத்தடியில் காணப்பட்டன. நகரமானது நன்கு திட்டமிட்டும், சரியான வடிகால் அமைப்புகளுடனும், கிணறுகளுடனும் கிணறுகளுடனும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மூடிய வடிகால்களுக்கு கழிவு நீரை அனுப்பும் வழி இருந்தது. மேம்படுத்தப்பட்ட தானியக் களஞ்சியங்கள், பெரிய குளம் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் இருந்தன. நகரமும் அதன் நாகரிகமும் அவர்களின் காலத்தை விட மிக உயர்ந்த நிலையில் இருந்தன என்பது கண்டறியப்பட்டது.
சிந்தனை செய்
தொல்பொருள் ஆய்வாளர்கள் தொல்கைவினைப் பொருள்கள்கள் உள்ள இடத்தை எவ்வாறு கண்டறிகிறார்கள்?
தமிழ்நாட்டில் நடைபெற்ற சில அகழ்வாராய்ச்சிகள்
தமிழ்நாட்டில் பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றன. அப்பொழுது பல வியக்கத்தக்க பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆதிச்சநல்லூர்
ஆதிச்சநல்லூர்-தூத்துக்குடி மாவட்டம்
• இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில், முதுமக்கள் தாழிகள், பல்வகைப்பட்ட மட்பாண்டங்கள் (கருப்பு, சிவப்பு) இரும்பாலான குத்துவாள், கத்திகள், ஈட்டிகள், அம்புகள், சில கல்மணிகள், சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன.
• வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, மான் போன்றவற்றின் வெண்கலத்தாலான உருவங்கள் கிடைத்துள்ளன.
• மட்பாண்டங்கள் செய்தல், கல் மற்றும் மரங்களைப் பயன்படுத்திப் பொருள்கள் செய்தல் போன்ற திறன்களை மக்கள் பெற்றிருந்தனர்.
நாம அறிந்து கொள்வோம்
மனித இனத்தின் பழங்கால எச்சங்கள் எங்கெல்லாம் காணப்படுகிறதோ அவ்விடத்தைத் தொல்பொருள் ஆய்வு இடம் என்று அழைக்கிறோம்.
செயல்பாடு நாம் செய்வோம்.
உங்களை ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராகக் கற்பனை செய்து பாருங்கள். அகழ்வாராய்ச்சியின் போது நீங்கள் சேகரிக்கும் பொருள்களைப் பட்டியலிடுங்கள்.
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்கைவினைப் பொருள்கள் எங்கே பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன?
அரிக்கமேடு
அரிக்கமேடு, புதுச்சேரி அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும். கடற்கரை கிராமமாக இருந்த அரிக்கமேடு, ரோம் நகருடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது என்பதனை அகழ்வாராய்ச்சி மூலம் அறிய முடிகிறது. அங்கு ரோமானிய விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், பலவகை கண்ணாடி மணிகள், விலை உயர்ந்த கற்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மதுக்குடுவைகள் போன்றவற்றை தொல்பொருள் ஆய்வாளர் கண்டறிந்தார். அவர், மேலும் அக்கிராமத்திலுள்ள மீனவர்களுக்கு அந்தத் தொல்கைவினைப் பொருள்கள் யாவும் புதியனவாக இருந்தன என்பதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரியலூரில் உள்ள செந்துறையில் சில டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கீழடி
கீழடி – சிவகங்கை மாவட்டம்
இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை(The Archaeological Survey of India-ASI), திருபுவனம் தாலுகாவிலுள்ள கீழடி கிராமத்தில் சங்ககாலத்தைச் சேர்ந்த பழைமையான நகரத்தை அகழ்ந்து ஆய்வு செய்துள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள், நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு போன்ற சான்றுகள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன. மேலும், தமிழ்-பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள், கண்ணாடியிலான மணிகள், செம்மணிகள், வெண்கல்படிகம், முத்துகள், தங்க ஆபரணங்கள், இரும்புப் பொருள்கள், சங்குவளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் ரோம் நாட்டைச் சேர்ந்த பழங்காலத் தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. இவை இந்தியாவிற்கும் ரோம்நாட்டிற்கும் இடையே நிலவிய வாணிகத்தொடர்பை உறுதி செய்கின்றன.
கலைச்சொற்கள்
Archaeologist : தொல்பொருள் ஆய்வாளர்
Excavation அகழ்வாராய்ச்சி
Unearthed : தோண்டி எடுக்கப்பட்டவை
மீள்பார்வை
• அகழ்வாராய்ச்சி என்பது பூமியைத் தோண்டி அக்கால மக்கள் பயன்படுத்திப் பொருள்களை கண்டறிய உதவும் ஒரு முறையாகும்.
• தொல்பொருள் ஆய்வாளர்கள், மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த இடங்கள் பற்றிய வரலாற்றினை அகழ்வாராய்ச்சியின் மூலம் ஆய்வு செய்வர்.
• பிரமிடுகள் மற்றும் சிந்துவெளி நாகரிகம் ஆகியவை உலகின் சில அகழ்வாராய்ச்சித் தளங்கள்.• ஆதிச்சநல்லூர், கீழடி மற்றும் அரிக்கமேடு ஆகியவை தமிழ்நாட்டின் முக்கியமான அகழ்வாராய்ச்சித் தளங்கள்.
வினா விடை
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
1) அகழ்வாராய்ச்சியின் மூலம் மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த இடங்கள் பற்றிய வரலாற்றினைப் படிப்பவர்கள் ——————–
அ) தொல்பொருள் ஆய்வாளர்
ஆ) அறிவியலாளர்
இ) அகழ்வாராய்ச்சியாளர்
விடை : இ) அகழ்வாராய்ச்சியாளர்
2) எகிப்தில் உள்ள சிறிய பிரமிடுகள் ——————— காக உருவாக்கப்பட்டன.
அ) இளவரசர்
ஆ) அரசர்
இ) அரசி
விடை : இ) அரசி
3) சிந்துவெளி நாகரிகம் —————- நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
அ) எகிப்து
ஆ) ஹரப்பா
இ) அமெரிக்கா
விடை :ஆ) ஹரப்பா
4) ஆதிச்சநல்லூர் —————— இல் உள்ளது
அ) தூத்துக்குடி
ஆ) சென்னை
இ) புதுச்சேரி
விடை : அ) தூத்துக்குடி
5) கீழடி ———————— காலம் என்பதனைத் தெரிவிக்கிறது.
அ) நவீன
ஆ) ஹரப்பா
இ) இடைக்
விடை :ஆ) ஹரப்பா
II. பொருத்துக
1 பிரமிடுகள் – ஆதிச்சநல்லூர்
2 சுட்ட செங்கற்கள் – கீழடி
3 மட்பாண்டம் – ரோமன் விளக்கு
4 சிவகங்கை – சிந்து நாகரிகம்
5 அரிக்கமேடு – எகிப்து
விடை :
1 பிரமிடுகள் – எகிப்து
2 சுட்ட செங்கற்கள் – சிந்து நாகரிகம்
3 மட்பாண்டம் – ஆதிச்சநல்லூர்
4 சிவகங்கை – கீழடி
5 அரிக்கமேடு – ரோமன் விளக்கு
III. சரியா தவறா?
1) அகழ்வாராய்ச்சியின்போது தொல்கைவினைப் பொருள்கள்கள் கண்டறியப்பட்டன. (விடை : சரி)
2) சிந்துவெளி நாகரிகம் ஹரப்பாவில் உள்ளது. (விடை : சரி)
3) ஆதிச்சநல்லூர் என்ற தொல்பொருள் ஆய்வு இடம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ளது. (விடை : தவறு)
4) கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சி, கீழடி ஒரு வளர்ச்சியடைந்த நகரம் என்பதனைத் தெரிவிக்கிறது. (விடை : சரி)
5) ரோமன் விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், விலை உயர்ந்த கற்கள் போன்றவை அரிக்கமேடு என்ற இடத்தில் கண்டறியப்பட்டன. (விடை : சரி)
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1) அகழ்வாராய்ச்சி என்றால் என்ன?
❖ அகழ்வராய்ச்சி என்பது பூமியின் மேற்பரப்பின்கீழ் என்ன இருக்கிறது என்பதைப்பற்றி ஆராய்வதாகும்.
❖ இந்த ஆய்வு, வரையறைக்குட்பட்டு நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலான அகழ்வராய்ச்சிகள் முன்னரே திட்டமிட்டு தாம் நடைபெறுகின்றன.
2) தொல்பொருள் ஆய்வாளர் என்பவர் யார்?
தொல்பொருள் ஆய்வாளர்கள் அக்காலத்தில் மக்கள் எவ்விதம் வாழந்தனர் என்பதனை அவர்களின் வீடுகள், உடைகள், எலும்புகள் மற்றும் பிற பொருள்களைக் கொண்டு கூறுகின்றனர்.
3) பிரமிடுகள் பற்றிய சிறுகுறிப்பு வரைக
பிரமிடுகள் பற்றிய அகழ்வராய்ச்சி செய்யப்பட்டபோது அரசிக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிலான பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகச் சிறப்பான வடிவமைப்பினைக் கொண்ட மிகப்பெரிய கல்லறைகள் அரச குடும்பத்திறாகாகக் கட்டப்பட்டன என்பதனைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
4) ஆதிச்சநல்லூரில் கண்டறியப்பட்டத் பொருள்கள்கள் யாவை?
❖ ஆதிச்சநல்லூர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் முதுமக்கள் தாழிகள், பல்வகைப்பட்ட மட்பாண்டங்கள் (கருப்பு, சிவப்பு) இரும்பாலான குத்துவாள், கத்திகள், ஈட்டிகள், அம்புகள், சில கல்மணிகள், சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன.
❖ வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, மான் போன்றவற்றின் வெண்கலத்தாலான உருவங்கள் கிடைத்துள்ளன.
❖ மட்பாண்டங்கள் செய்தல், கல் மற்றும் மரங்களைப் பயன்படுத்திப் பொருள்கள் செய்தல் போன்ற திறன்களை மக்கள் பெற்றிருந்தனர்.
5) கீழடி எங்கு அமைந்துள்ளது?
கீழடி சிவகங்கை மாவட்டம், திருபுவனம் தாலுகாவிலுள் அமைந்துள்ளது.
V விரிவான விடையளிக்க.
1) சிந்துவெளி நாகரிகம் பற்றி விவரி.
❖ சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோண்டப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வு தளம் இதுவாகும். அங்கு சுட்ட செங்கற்கள் நிலத்தடியில் காணப்பட்டன.
❖ நகரமானது நன்கு திட்டமிட்டும், சரியான வடிகால் அமைப்புகளுடனும், கிணறுகளுடனும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
❖ மூடிய வடிகால்களுக்கு கழிவு நீரை அனுப்பும் வழி இருந்தது.
❖ மேம்படுத்தப்பட்ட தானியக் களஞ்சியங்கள், பெரியகுளம் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் இருந்தன.
❖ நகரமும் அதன் நாகரிகமும் அவர்களின் காலத்தை விட மிக உயர்ந்த நிலையில் இருந்தன.
2) கீழடி பற்றி விவரி.
❖ இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை திருபுவனம் தாலுகாவிலுள்ள கீழடி கிராமத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த பழமையான நகரத்தை அகழ்ந்து ❖ ஆய்வு செய்துள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டங்கள், நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு போன்ற சான்றுகள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன.
❖ மேலும், தமிழ் – பிராமி எழுத்துகள் – பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள், கண்ணாடியிலான மணிகள், செம்மணிகள், வெண்கல்படிகம், முத்துகள், தங்க ஆபரணங்கள், இரும்புப் பொருள்கள், சங்குவளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
3) அரிக்கமேடு பற்றி விரிவாக எழுதவும்.
❖ அரிக்கமேடு, புதுச்சேரி அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும். கடற்கரை கிராமமாக இருந்த அரிக்கமேடு, ரோம் நகருடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது என்பதனை அகழ்வாராய்ச்சி மூலம் அறிய முடிகிறது.
❖ அங்கு ரோமானிய விளக்குகள், கண்ணாடிப்பொருள்கள், பலவகை கண்ணாடி மணிகள், விலை உயர்ந்த கற்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மதுக்குடுவைகள் போன்றவற்றை தொல்பொருள் ஆய்வாளர் கண்டறிந்தார். அவர், மேலும் அக்கிராமத்திலுள்ள மீனவர்களுக்கு அந்தத் தொல்கைவினைப் பொருள்கள் யாவும் புதியனவாக இருந்தன என்பதனைக் குறிப்பிட்டுள்ளார்.