தமிழ் : பருவம் 3 இயல் 8 : அறிவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள்
8. அறிவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள்
ஒருநாள் மாலைப்பொழுது. இளவரசி, பூங்குழலி இருவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பினர். அப்பொழுது திடீரென்று வானில் ஒலி கேட்டது. மேலே பார்த்ததும் விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து பேரொலியுடன் இடி இடிக்கத் தொடங்கியது. அச்சமயம் பெய்த மழைத் தூறல், இளவரசியையும் பூங்குழலியையும் நனைத்தது.
இளவரசி : நாம் வீட்டிற்குச் செல்வதற்குள் முழுவதுமாக நனைந்து விடுவோம்போல் இருக்கிறதே! அதோ, அந்தக் கடையில் சிறிதுநேரம் நின்றுவிட்டு, மழைவிட்டதும் செல்வோமா?
பூங்குழலி : சரி. நாமாவது மழையில் நனையாமலிருக்க இங்கே ஒதுங்கி விடுகிறோம். ஆனால், வானில் பறக்கின்றதே விமானங்கள். அவற்றின் பாதையை இந்தக் கருமேகங்கள் மறைக்காதா?
இளவரசி : அதனால்தான் விமானம், கருமேகங்களைத் தாண்டி உயரத்தில் பறக்கிறது.
பூங்குழலி : அது எப்படி உனக்குத் தெரியும்?
இளவரசி : நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதைப் பார்த்தேன். அதில் விமானம் பறப்பது பற்றி விரிவாகக் கூறினார்கள்.
பூங்குழலி : அப்படியா? தொலைக்காட்சியில் இது பற்றியெல்லாம் சொல்கிறார்களா?
இளவரசி : ஆம். பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. விமானம் உயரத்தில் பறக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. புயல், மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் அதன் பயணம் பாதிக்கப்படுவதில்லை என்பதைக் குறும்படம் மூலம் விளக்கினார்கள்.
பூங்குழலி : கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதே! வேறு என்னென்ன நிகழ்ச்சிகளைத் நீ தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறாய்? மழை, தூறலாகத்தான் இருக்கிறது. பேசிக்கொண்டே செல்வோமா?
இளவரசி : கொஞ்சம் பொறு, பூங்குழலி. மழை இன்னும் விடவில்லை. சற்றுநேரம் கழித்துச் செல்வோம். இடிச்சத்தம் காதைப் பிளக்கிறது.
பூங்குழலி : இடிதானே இடிக்கிறது. மழை, பெரிதாகப் பெய்யவில்லையே, மழை வந்தால் மரத்தடியில் ஒதுங்கி நின்று விடலாமே!
இளவரசி : இல்லை பூங்குழலி. மரத்தடியில் நின்றால், இடிதாக்கி உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதைத் தொலைக்காட்சிச் செய்தியில் பார்த்திருக்கிறேன்.
பூங்குழலி : ஓ! சரி, சரி… வேறு என்னவெல்லாம் நீ தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறாய்?
இளவரச : பொம்மைப் படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், செய்து பார்ப்போம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளைக்கூடப் பார்த்திருக்கிறேன்.
பூங்குழலி : தொலைக்காட்சி என்றாலே பொழுது போக்கும் ஒரு கருவியென நான் நினைத்திருந்தேன். அதனால்தான் திரைப்படம், திரைப்பாடல்கள், நாடகத் தொடர்கள் போன்றவற்றையே அடிக்கடி பார்க்க நேரிட்டது. ஆனால், நீ கூறியதுபோல் புதிய செய்திகளை அறிந்துகொள்ளவும், அறிவை விரிவு செய்யவும் தொலைக்காட்சி உதவும் என்பதை இப்போது புரிந்துகொண்டேன். இனி, நானும் இவை போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பயனடைவேன்.
இளவரசி : மகிழ்ச்சி. இனி, நாள்தோறும் புதுப் புதுச் செய்திகளைத் தோழிகளுக்கு நாம் இருவருமே சொல்லலாம். சரி, இப்போது மழை நின்றுவிட்டது வா, வீட்டுக்குப் போகலாம்.
பயிற்சி
வாங்க பேசலாம்
தொலைக்காட்சி, நம் கண்ணுக்கும் காதுக்கும் மட்டுமல்ல, அறிவுக்கும் விருந்தளிக்கும் என்பதைப் பிறருக்கு நீங்கள் எப்படி உணர்த்துவீர்கள்?
* தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான திரைப்படம், திரையிசைப் பாடல்கள், தொடர் நாடகங்கள், விளம்பரங்கள் போன்றவற்றை மட்டும் நாம் காண்பதில்லை.
* நம் அறிவை வளர்க்கக்கூடிய கல்வி, வேளாண்மை, விளையாட்டு, மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமையல் போன்றவற்றைப் பற்றிய அறிவையும் தொலைக்காட்சியின் மூலம் நாம் பெறலாம்.
* வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்வுகளையும் செய்திகள் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொலைக்காட்சிகள் பெரிதும் உதவுகின்றது.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. விமானம் பறப்பது பற்றிய செய்தியை __________ வாயிலாக இளவரசி அறிந்து கொண்டாள்.
அ) கணினி
ஆ) தொலைக்காட்சி
இ) வானொலி
ஈ) அலைபேசி
விடை : ஆ) தொலைக்காட்சி
2. ஆர்வம் – இச்சொல்லின் பொருள் _____________.
அ) வெறுப்பு
ஆ) மறுப்பு
இ) மகிழ்ச்சி
ஈ) விருப்பம்
விடை : ஈ) விருப்பம்
3. உயரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் ______________.
அ) குட்டை
ஆ) நீளம்
இ) நெட்டை
ஈ) நீண்ட
விடை : அ) குட்டை
4. தொலைக்காட்சி – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
அ) தொலை + காட்சி
ஆ) தொல்லை + காட்சி
இ) தொலைக் + காட்சி
ஈ) தொல் + காட்சி
விடை : அ) தொலை + காட்சி
5. குறுமை + படம் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________.
அ) குறுபடம்
ஆ) குறுமை + படம்
இ) குறும்படம்
ஈ) குறுகியபடம்
விடை : இ) குறும்படம்
வினாக்களுக்கு விடையளிக்க.
1. பூங்குழலியும் இளவரசியும் வானத்தில் எதைக் கண்டனர்?
பூங்குழலியும், இளவரசியும் வானத்தில் விமானத்தைக் கண்டனர்.
2. வானில் பறக்கும் விமானம் எதனால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்?
வானில் பறக்கும் விமானம் புயல், மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்.
3. இளவரசி தொலைக்காட்சியில் என்னவெல்லாம் பார்த்ததாகக் கூறினாள்?
இளவரசி தொலைக்காட்சியில் பொம்மைப் படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் செய்து பார்ப்போம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை இளவரசி பார்த்ததாகக் கூறினாள்.
பறவைகளின் ஒலிகளை அறிந்து கோடிட்ட இடங்களை நிரப்புவோம்.
கரையும் அகவும் பேசும் அலறும் கூவும்
1) காகம் கரையும்
2) மயில் அகவும்
3) கிளி பேசும்
4) ஆந்தை அலறும்
5) சேவல் கூவும்
பொருத்தமான சொல்லால் நிரப்புவோம்.
ஒளிர்மதி தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டு இருந்தாள்.
கதையைப் படித்து கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க.
தவளை ஒன்று மிகவும் உடல்நலம் குன்றியிருந்தது. அதன் குட்டித் தவளை தன் தாயைக் காப்பாற்ற நினைத்தது. மாலைநேரம் முடிவதற்குள் மலைமேல் ஏறி, மூலிகை கொண்டு வர நினைத்தது. அந்த மலையில் ஏராளமான பாம்புகள் வாழ்ந்து வந்தன. பாம்புகளால் தனக்குத் தீங்கு நேரிடும் என்று நினைத்தது குட்டித் தவளை. தன் அறிவைப் பயன்படுத்திச் சென்றால்தான் மாலைக்குள் திரும்ப முடியும் என்று நினைத்தது. மலையில் ஏறத் தொடங்கியதும், அந்தக் குட்டித் தவளை பேசத் தொடங்கியது. “முன்னே செல்லும் பருந்தாரே! பின்னே பெரிய கீரியார் மெள்ள வருகிறார், சற்றுப் பொறுத்தே செல்லுங்கள்” என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே சென்றது. பாம்புகள் குட்டித்தவளை கூறுவதைக் கேட்டு ஓடி ஒளிந்துகொண்டன. குட்டித்தவளை, தன் கூர் சிந்தனைத்திறனால் காலம் கடத்தாமல் விரைந்து சென்று, மூலிகை கொண்டு வந்து தன் தாயைக் காப்பாற்றியது.
1. உடல்நலம் குன்றிய நிலையில் எது இருந்தது?
தவளை ஒன்று உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தது.
2. குட்டித்தவளை, தனக்கு யாரால் தீங்கு ஏற்படும் என நினைத்தது?
பாம்புகளால் தனக்கு தீங்கு நேரிடும் என்று குட்டித்தவளை நினைத்தது.
3. குட்டித்தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எந்தெந்தப் பெயர்களைக் கூறியது?
குட்டித்தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கீரி, பருந்து போன்ற பெயர்களைக் கூறியது.
4. குறித்த நேரத்திற்குள் ஒரு செயலைச் செய்து முடிப்பது எதைக் குறிக்கும்?
அ) பணிவு
ஆ) காலந் தவிர்க்காமை
இ) நேர்மை
விடை : ஆ) காலந் தவிர்க்காமை.
தொலைக்காட்சியைக் கண்டறிந்தவர் ஜான் லெகி பெயர்டு
விமானத்தைக் கண்டறிந்தவர்கள் ஆல்பர்ட் ரைட், வில்பர்ட் ரைட்
வானொலியைக் கண்டறிந்தவர் மார்க்கோனி
உன்னை அறிந்துகொள்.
1. தொலைக்காட்சியைக் கண்டறிந்தவர் யார்?
தொலைக்காட்சியைக் கண்டறிந்தவர் ஜான் லோக் போர்டு.
2. விமானத்தைக் கண்டறிந்தவர்கள் யார்?
விமானத்தைக் கண்டறிந்தவர்கள் ஆல்பர்ட்ரைட், வில்பர்ட்ரைட் சகோதரர்கள் (ரைட் சகோதரர்கள்).
3. வானொலியைக் கண்டறிந்தவர் யார்?
வானொலியைக் கண்டறிந்தவர் மார்க்கோனி.
கீழ்வரும் சொற்றொடர்களை சரியா? தவறா? எனக்கண்டறிந்து சரி என்றால் பச்சை தவறு என்றால் சிவப்பு வண்ணமிட்டுக் காட்டுக.
1. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அருகே அமர்ந்து பார்க்கலாம்.
விடை : தவறு
2. வெண்மேகங்களால் மழை பொழியும்.
விடை : தவறு
3. இடிமின்னலின் போது மரத்தடியில் நிற்கக்கூடாது.
விடை : சரி
4. புயல் அடிக்கும் போது மீனவர்கள் கடலுக்குள் செல்லலாம்.
விடை : தவறு
சிந்திக்கலாமா?
பாவழகி அவளுடைய எழுதுகோலைக் கையிலேயே வைத்திருப்பதால் தவறித் தொலைத்து விடுவாள்…பாத்திமா தன் எழுதுகோலைப் பெட்டியில் வைத்துப் புத்தகப் பைக்குள் வைத்திருப்பாள் எனவே, அது பாதுகாப்பாக இருக்கிறது உன் பொருள்களை நீ எவ்வாறு பாதுகாப்பாய்?
நீ எவ்வாறு உன் பொருள்களைப் பாதுகாப்பாய்?
நான் என் பொருள்களைப் பெட்டியில் வைத்து புத்தகப் பைக்குள் வைத்திருப்பேன்; தேவையான நேரத்தில் எடுத்துப் பயன்படுத்திவிட்டு மீண்டும் பத்திரமாக பைக்குள் வைத்துவிடுவேன்.
கலையும் கைவண்ணமும்
மின்அட்டையில் வாழ்த்து அட்டை உருவாக்குதல்
தேவையான பொருள்கள்
மின் அட்டை
பசை
வண்ண நூல்கள்
❖ மின் அட்டையின் ஓரங்களில் வண்ண நூல்களை ஒட்டி அலங்காரம் செய்யவேண்டும்.
❖ நாம் விரும்பும் படம் வரைந்து அதன் மேல் வண்ண நூல்களை ஒட்ட வேண்டும்.
❖ தேவையான வாழ்த்துச்செய்தியை அட்டையின் நடுப்பகுதியில் எழுதி, வாழ்த்து அட்டையை உருவாக்கவேண்டும்.
சொந்த நடையில் கூறுக.
தொலைக்காட்சியின் நன்மைகளைப் பற்றி உம் சொந்த நடையில் கூறுக.
* சொற்பொழிவு, இசை, நாடகம் போன்றவற்றை நேரில் கண்டுகளிக்கலாம்.
* வீட்டில் இருந்து கொண்டே பல வேலைகளின் நுணுக்கங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
* பல நாடுகளின் இயற்கைக் காட்சிகள், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றை நேரில் பார்ப்பது போன்று கண்டு மகிழலாம்.
* வெகுதொலையில் நடக்கும் விளையாட்டுகளை வீட்டிலிருந்தே கண்டு மகிழலாம்.
* குடும்ப நலத்திட்டம், குழந்தை வளர்ப்பு, நோய் தடுப்பு முறைகள் ஆகியவற்றை நேரில் காட்டுவதால் மக்களுக்கு நன்றாக விளங்குகிறது.
செயல் திட்டம் தொலைக்காட்சியில் இடம்பெறும் கல்வி பற்றிய செய்திகளைத் தொகுத்து வருக
உம் சுற்றுப்புறத்திலுள்ள பொருள்களை வரைந்து அவற்றின் பெயர்களை எழுதி வருக.
அகரமுதலி
பட விளக்க அகரமுதலி
பனிக்கரடி
இது உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும். இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாட வல்லது. இதனைத் துருவக்கரடி எனவும் கூறுவர்.
பால்
சத்துமிக்க ஓர் உணவு. இதில் கால்சியம், பொட்டாசியம், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. உலகளவில் மிகுதியாகப் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.
பிண்ணாக்கு
தேங்காய், எள், கடலை போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுத்தபின் மிஞ்சும் சக்கை. இது விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
பீர்க்கங்காய்
நார்ச்சத்துமிக்க காய்களுள் ஒன்று. இதன் தோல், நோயைக் குணப்படுத்தும்.
புறா
முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவைகளுள் ஒன்று. இப்பறவைகள் குச்சிகள், குப்பைகள் கொண்டு கூடு கட்டுகின்றன. இவை, தானிய வகைகளை இரையாக உட்கொள்கின்றன.
பூண்டு
மருத்துவப் பயன்மிக்க ஓர் உணவுப் பொருள். இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கக் கூடியது .
பெங்குயின்
குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும். இது, பறவை இனத்தைச் சார்ந்து இருந்தாலும், பறக்க முடியாது. மனிதர் நடப்பதுபோல இதன் நடை அமைந்திருக்கும். நீரில் நன்றாக நீந்திச் செல்லும்.
பேரிச்சம்பழம்
இது, பனைவகையைச் சார்ந்தது. இது மருத்துவக் குணம் உடையது. இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகையை நீக்கும்.
பை
இது பொருள்களை எடுத்துச் செல்ல உதவுகிறது. துணி முதலான பொருள்களைக்கொண்டு உருவாக்கப்படுகின்றது. பல வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது.
பொங்கல் விழா
இவ்விழா, தைமாதம் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. உணவுப் பொருள்களை விளைவிக்க உதவுவது இயற்கை. அதற்கு நன்றி செலுத்தும் வகையில் இதனைக் கொண்டாடுகின்றனர்.
போர்வாள்
பண்டைக் காலத்தில், மன்னர்கள் பயன்படுத்திய படைக்கருவிகளுள் ஒன்று. போரிடும் காலங்களில், வீரர்கள் இக்கருவியைப் பயன்படுத்துவர்.
பௌவம்
கடலைக் குறிக்கும் ஒரு சொல், பௌவம். பூமியின் பெரும்பகுதி கடலாலேயே சூழப்பட்டுள்ளது. கடல் நீர் உப்புக் கரிக்கும். கடல் நமக்கு மீன், சிப்பி, நண்டு, முத்து, பவளம் முதலான வளங்களைத் தருகிறது.
அகரமுதலி
அகழாய்வு – நிலத்தைத் தோண்டி ஆராய்தல்
அசடு – பேதைமை
அடாத செயல் – தகாத செயல்
அடையாளம் – இனங்காணல்
அவசரம் – விரைவு
ஆதி – முதல்
ஆபரணம் – அணிகலன்
ஆர்வம் – விருப்பம்
இசைந்து – ஏற்றுக்கொண்டு
இல்லம் – வீடு
ஏராளமான – நிறைய
ஓங்குதல் – உயர்தல்
குற்றம் – மாசு / தவறு
கேளாமல் – கேட்காமல்
கேளிர் – உறவினர்
கோபம் – சினம்
செம்மை – சிறப்பு
தகவல் – செய்தி
தொன்மை – பழைமை
நஷ்டம் – வருமானம் இழப்பு
நல்கூர்ந்தார் – வறுமையுற்றவர்
பதில் – விடை
பயம் – அச்சம்
பாதிப்பு – விளைவு
புத்திசாலி – அறிவாளி
பொலிவு – அழகு
பொழியும் – பெய்யும்
மௌனம் – அமைதி