சமூக அறிவியல் : பருவம் 2 அலகு 2 : சரணாலயங்கள்
அலகு 2
சரணாலயங்கள்
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,
* இந்தியாவில் உள்ள பல்வேறு சரணாலயங்களின் பெயர்களையும் அவற்றின் அமைவிடத்தையும் அறிந்து கொள்வர்.
* சரணாலயங்கள் பற்றிக் கூறுவர்.
* படத்தைப்பார்த்து உயிர்க்கோளக் காப்பகங்களின் முக்கியத்துவத்தினை உணர்வர்.
அனு, தன் தாத்தாவுடன் வீட்டில் இருக்கிறாள். அனு ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டு இருக்கிறாள். அவளது தாத்தா செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருக்கிறார்.
அனு : ச-ர-ணா-ல-ய-ம் சரணாலயம் (Sanctuary) என்றால் என்ன?
தாத்தா: சரணாலயம் என்பது விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடுவதில் இருந்தும் மற்ற மனித செயல்பாடுகளிலிருந்தும் பாதுகாத்து வைக்கும் இடமாகும்.
அனு : விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்க சரணாலயங்கள் தவிர, வேறு இடங்கள் எவையேனும் உள்ளனவா?
தாத்தா: ஆமாம் அனு. தேசியப் பூங்காக்களில் காட்டு விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. உயிர்க்கோளக் காப்பகங்களில் விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
அனு : கேட்க ஆர்வமாக உள்ளதே!
தாத்தா: நான் உனக்கு இந்தியாவில் உள்ள சில புகழ்பெற்ற சரணாலயங்கள் மற்றும் உயிர்க்கோளக் காப்பகங்கள் பற்றி கூறுகிறேன்.
அனு : நிச்சயமாக. எனக்கும் அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள விருப்பமாக உள்ளது.
தாத்தா: உத்தரகாண்டில் உள்ள கார்பெட் தேசிய பூங்கா மிகவும் பழைமையான பூங்கா.
அனு : எவ்வகையான விலங்குகள் அங்கு பாதுகாக்கப்படுகின்றன?
தாத்தா : கம்பீரமான வங்காளப் புலிகள் அங்கு பாதுகாக்கப்படுகின்றன.
அனு : இவற்றைத் தவிர வங்காளப் புலிகளைப் பாதுகாக்க வேறு ஏதேனும் சரணாலயம் உள்ளதா?
‘தாத்தா: ஆமாம். சுந்தரவனம் தேசியப் பூங்கா மேற்குவங்காளத்தில் உள்ளது.
வங்காளப் புலிகள்
• புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் தொடர் பாதுகாப்பு முயற்சிகள் காரணமாக இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
செயல்பாடு
நாம் எழுதுவோம்
1. பின்வருவனவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
சரணாலயம்
விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாக்கப்படுகின்றன
தேசியப் பூங்கா
விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாக்கப்படுகின்றன
உயிர்க்கோள காப்பகம்
தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாக்கப்படுகின்றன
2. உனக்கு வங்காளப் புலிகளைப் பார்க்க வேண்டுமெனில் எந்த தேசியப் பூங்காவிற்குச் செல்வாய்? அப்பூங்காவின் பெயரையும் அதன் அமைவிடத்தையும் எழுதுக.
❖ கார்பெட் தேசியப் பூங்காவில் வங்காளப்புலிகளைப் பார்க்கலாம்.
❖ அது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது.
சிந்தனை செய்
உலகப் புலிகள் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
ஜூலை 29 – ஆம் தேதி உலகப் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது
அனு : தாத்தா எனக்கு யானைகள் மிகவும் பிடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? யானைகளைப் பாதுகாக்க ஏதேனும் சரணாலயம் உள்ளதா?
தாத்தா: ஆம். நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் யானைகள் மட்டுமல்லாமல் இந்தியச் சிறுத்தைப்புலி, கருஞ்சிறுத்தை மற்றும் வரையாடு போன்ற விலங்குகளும் பாதுகாக்கப்படுகின்றன.
அனு: தாத்தா உயிர்க்கோளக் காப்பகத்தில் தாவரங்களும் பாதுகாக்கப் படுகின்றன என நீங்கள் கூறினீர்கள். எவ்வகையான தாவரங்கள் அங்கு காணப்படுகின்றன?
தாத்தா: அங்கு பல்வேறு வகையான பூக்கும் தாவரங்களை நாம் காணலாம். குறிஞ்சிப் பூ அவற்றில் ஒன்று. இவ்வகை பூக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலர்கின்றன.
அனு : அப்படியானால் மிகவும் அழகாக இருக்குமே!
செயல்பாடு
நாம் எழுதுவோம்
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள மூன்று விலங்குகளின் படங்களை ஒட்டி அவற்றின் பெயர்களை எழுதுக.
* இந்திய புலி
* இந்திய யானை
* கருஞ்சிறுத்தை
அனு : பறவைகளைப் பற்றிக் கூறுங்கள், தாத்தா
தாத்தா: பல்வேறு வகையான பறவைகளைக் காண வேண்டுமெனில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு நாம் செல்ல வேண்டும்.
அனு : அது எங்கு உள்ளது?
தாத்தா: செங்கல்பட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அனு : அங்குத் தனித்துவம் பெற்ற பல வண்ணப் பறவைகளைக் காணலாம் என்று நான் எண்ணுகின்றேன்.
தாத்தா: ஆம் அனு. அங்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலவகையானப் பறவைகள் இடம்பெயர்ந்து வருவதை நாம் காணலாம். கூழைக்கடா (pelicans) இராக்கொக்கு (night herons) மற்றும் பலவகையானப் ‘பறவைகள் காணப்படுகின்றன.
இடம்பெயர்தல் : காலநிலை காரணமாக பறவைகள் அல்லது விலங்குகள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாறி வருவதை இடம்பெயர்தல் என்று கூறுகிறோம்.
அனு : அங்கு மயில்களைக் காண முடியுமா?
தாத்தா: இல்லை அனு. திருச்சியில் உள்ள விராலிமலையில் இருக்கும் இயற்கை வாழிடத்தில் நாம் மயில்களை காணலாம்.
அனு : எனக்கு அங்குச் சென்று மயில்களைப் பார்க்க வேண்டும் என்று விருப்பமாக உள்ளது.
சிந்தனை செய்
இடம்பெயரும் பறவைகளுக்கும், இடம் பெயராத பறவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி சிந்தித்துப் பார்.
இடம்பெயரும் பறவை
பருவ காலத்திற்கேற்ப இடம் பெயரும்.
நீண்டதூரம் இடம்பெயர்ந்து செல்லும்.
இடம்பெயராத பறவை (உள்நாட்டுப் பறவை)
குறிப்பிட்ட இடத்தில், எல்லாப் பருவங்களிலும் வாழும்.
நீண்ட தூரம் பறக்காது.
நாம் அறிந்து கொள்வோம்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் உள்ள பழைமையான நீர்ப்பறவைகள் சரணாலயமாகும்.
தாத்தா: நிச்சயமாக. நான் உனக்கு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் பற்றிக் கூறவா?
அனு : ஒற்றைக்கொம்பு காண்டா மிருகமா ?
ஒற்றைக்கொம்பு காண்டா மிருகங்கள்
தாத்தா: ஆம் அனு. காண்டா மிருகங்கள் மிகவும் அரிதான விலங்கு வகையாகும். இவை காசிரங்கா தேசியப் பூங்காவில் பாதுகாக்கப்படுகின்றன
அனு : அது எங்கு உள்ளது?
தாத்தா: அது அசாமில் உள்ளது.
நாம் அறிந்து கொள்வோம்.
காசிரங்கா தேசியப் பூங்காவில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. உலகில் உள்ள காண்ட மிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு அங்கு உள்ளன. தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளால் அவற்றின் எண்ணிக்கை தற்பொழுது உயர்ந்துள்ளது.
செயல்பாடு
நாம் விவாதித்து எழுதுவோம்
விலங்குகள் அல்லது பறவைகள் பெயரை எழுதுக.
விராலிமலை சரணாலயம்
மயில்
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்
இந்திய யானை
இந்திய சிறுத்தை
கருஞ்சிறுத்தை
நீலகிரி வரையாடு
காசிரங்கா தேசியப் பூங்கா
யானைகள்
ஒற்றைக்கொம்பு காண்டா மிருகம்
காட்டு ஆசிய நீர் எருமை
சதுப்பு நில மான்
கார்பெட் தேசியப் பூங்கா
புலி
சிறுத்தை
காட்டுபூனை
நரிகள்
நாம் அறிந்து கொள்வோம்.
தமிழகத்தில் உள்ள மூன்று உயிர்க்கோளக் காப்பகங்கள் :
* நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்.
* மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம்.
* அகத்தியமலை உயிர்க்கோளக் காப்பகம்.
ஆசிய சிங்கங்கள்
அனு: தாத்தா, சிங்கங்கள் பற்றி நீங்கள் கூறவே இல்லையே
தாத்தா: சொல்கிறேன் அனு. குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவில் ஆசிய சிங்கங்கள் உள்ளன.
அனு : ஆச்சரியமாக உள்ளதே!
தாத்தா: பறவைகள், விலங்குகள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்கள் நமது சுற்றுச்சூழலில் (Environment) முக்கியமான பங்கினை வகிக்கின்றன.
அனு : ஆமாம் தாத்தா. நாம் அவற்றைத் துன்புறுத்தக் கூடாது. அவற்றைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.
கலைச் சொற்கள்
Environment : சுற்றுச்சூழல்
Sanctuary : சரணாலயம்
Species : இனம்
மீள்பார்வை
* சரணாலயங்கள் அல்லது தேசியப் பூங்காக்களில் விலங்குகளும் பறவைகளும் வேட்டையாடப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
* உயிர்க்கோளக் காப்பகங்களில் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவைப் பாதுகாக்கப்படுகின்றன.
* வங்காளப் புலிகள், உத்தரகாண்ட்டில் உள்ள கார்பெட் தேசியப் பூங்கா மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனம் தேசியப் பூங்கா, போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
* தமிழ்நாட்டில் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம், அகத்தியமலை உயிர்க்கோளக் காப்பகம் முதலியவை உள்ளன.
* அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
1. கார்பெட் தேசியப் பூங்கா __________ இல் உள்ளது.
அ) உத்தரகாண்ட்
ஆ) பெங்களூரு
இ) சென்னை
விடை : அ) உத்தரகாண்ட்
2. மேற்குவங்காளத்தில் உள்ள தேசியப்பூங்கா __________
அ) சுந்தரவனம் தேசியப் பூங்கா
ஆ) கிர் தேசியப் பூங்கா
இ) அண்ணா தேசியப் பூங்கா
விடை : அ) சுந்தரவனம் தேசியப் பூங்கா
3. __________ சரணாலயம் வேடந்தாங்கலில் உள்ளது.
அ) சிங்கங்கள்
ஆ) பறவைகள்
இ) புலிகள்
விடை : ஆ) பறவைகள்
4. தமிழ்நாட்டில் __________ உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
விடை : அ) மூன்று
5. கிர் தேசியப் பூங்கா __________இல் உள்ளது.
அ) குஜராத்
ஆ) அசாம்
இ) ஹைதராபாத்
விடை : அ) குஜராத்
II. பொருத்துக.
1. புலி – நீலகிரி
2. சிங்கம் – மேற்கு வங்காளம்
3. யானை – அசாம்
4. பறவைகள் – குஜராத்
5. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் – வேடந்தாங்கல்
விடை :
1. புலி – மேற்கு வங்காளம்
2. சிங்கம் – குஜராத்
3. யானை – நீலகிரி
4. பறவைகள் – வேடந்தாங்கல்
5. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் – அசாம்
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
1. சரணாலயம் என்றால் என்ன?
சரணாலயம் என்பது விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடுவதில் இருந்தும் மற்ற மனித செயல்பாடுகளிலிருந்தும் பாதுகாத்து வைக்கும் இடமாகும்.
2. கார்பெட் தேசியப்பூங்காவில் என்னென்ன விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன?
வங்காளப்புலிகள், புலிகள், மான்கள்.
3. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள விலங்குகளின் பெயர்களை எழுதுக.
❖ இந்தியச் சிறுத்தைப்புலி
❖ யானைகள்
❖ கருஞ்சிறுத்தை மற்றும்
❖ வரையாடு
4. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் எங்குப் பாதுகாக்கப்படுகின்றன?
❖ ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் காசிரங்கா தேசியப்பூங்காவில் பாதுகாக்கப்படுகின்றன.
❖ உலகில் உள்ள காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு உள்ளன.
❖ தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளால் அவற்றின் எண்ணிக்கை தற்பொழுது உயர்ந்துள்ளது.
5. விலங்குகளிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
❖ விலங்குகளை நாம் துன்புறுத்தக்கூடாது.
❖ விலங்குகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.
செயல் திட்டம்
பின்வரும் சரணாலயம் / தேசியப் பூங்கா / உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ள மாநிலங்களின் பெயர்களை எழுதுக.
1. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் – தமிழ்நாடு
2. கிர் தேசியப் பூங்கா – குஜராத்
3. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் – தமிழ்நாடு
4. காசிரங்கா தேசியப் பூங்கா – அசாம்
5. கார்பெட் தேசியப் பூங்கா – உத்தரகாண்ட்
செயல்பாடு
1. பின்வருவனவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
சரணாலயம்
காட்டு விலங்குகளைப் பாதுகாக்கக்கூடிய இடம்.
தேசியப் பூங்கா
ஒட்டுமொத்த தாவரம், விலங்குகள் அடங்கிய சூழலைப் பாதுகாத்தல்.
உயிர்க்கோள காப்பகம்
அழிந்துபோகும் உயிர்களைக் காக்கும் நோக்கில் சூழலைப் பாதுகாத்தல்.
2. உனக்கு வங்காளப் புலிகளைப் பார்க்க வேண்டுமெனில் எந்த தேசியப் பூங்காவிற்குச் செல்வாய்? அப்பூங்காவின் பெயரையும் அதன் அமைவிடத்தையும் எழுதுக.
❖ கார்பெட் தேசியப் பூங்காவில் வங்காளப்புலிகளைப் பார்க்கலாம்.
❖ அது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது.
3. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள மூன்று விலங்குகளின் படங்களை ஒட்டி அவற்றின் பெயர்களை எழுதுக.
4. விலங்குகள் அல்லது பறவைகள் பெயரை எழுதுக.
விராலிமலை சரணாலயம்
மயில்
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்
இந்திய யானை
இந்திய சிறுத்தை
கருஞ்சிறுத்தை
நீலகிரி வரையாடு
காசிரங்கா தேசியப் பூங்கா
யானைகள்
ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்
காட்டு ஆசிய நீர் எருமை
சதுப்பு நில மான்
காட்டெருமை
கார்பெட் தேசியப் பூங்கா
புலி
சிறுத்தை
காட்டுபூனை
நரிகள்
சிந்தனை செய்
1. உலகப்புலிகள் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
ஜுலை 29.
2. இடம்பெயரும் பறவைகளுக்கும், இடம்பெயராத பறவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி சிந்தித்துப் பார்.
இடம்பெயரும் பறவை
பருவ காலத்திற்கேற்ப இடம் பெயரும்.
நீண்டதூரம் இடம்பெயர்ந்து செல்லும்.
இடம்பெயராத பறவை (உள்நாட்டுப் பறவை)
குறிப்பிட்ட இடத்தில், எல்லாப் பருவங்களிலும் வாழும்.
நீண்ட தூரம் பறக்காது.