தமிழ் : பருவம் 2 இயல் 4 : வாழ்த்தலாம் வாங்க
வாழ்த்தலாம் வாங்க
பர்வீன் படம் வரைந்துகொண்டு இருந்தாள். அப்போது அஜ்மல் வந்தான்.
“ஐ! மயில். அழகாக உள்ளது, அக்கா” என்றான் அஜ்மல்.
“வா! வா! உனக்குப் பிடிக்குமே…. வண்ணம் தீட்டுகிறாயா?” என்றாள் பர்வீன்.
“ஓ!” ஆர்வத்துடன் அமர்ந்தான் அஜ்மல்.
“இறகின் நடுவில் எழுத இடம் விட்டு வண்ணம் தீட்டு அஜ்மல்” என்றாள் பர்வீன்.
“ஏன் அக்கா?” என்று கேட்டான் அஜ்மல்.
“அந்த இடங்களில் ஆங்கில மாதங்களின் பெயர்களை எழுதப் போகிறேன்” என்றாள் பர்வீன்.
“இது நாள்காட்டியா அக்கா?” என்று கேட்டான் அஜ்மல்.
“இல்லை. இது நினைவூட்டி” என்றாள் பர்வீன்.
“நினைவூட்டியா…. புரியும்படி சொல்லேன் அக்கா” சிணுங்கினான் அஜ்மல்.
“இதை ஆசிரியரிடம் தருவேன். அந்தந்த மாதத்தில் பிறந்தவர்களின் பெயர்களை எழுதுவோம்.” என்றாள் பர்வீன்.
“எதற்காக அக்கா?” என்றான் அஜ்மல்.
“மறக்காமல் வாழ்த்து சொல்லத்தான் இந்தப் பிறந்தநாள் நினைவூட்டி” என்றாள் பர்வீன்.
“நன்றாக இருக்கிறதே. எங்கள் வகுப்புக்கும் ஒன்று செய்யலாமா அக்கா?” என்றான் அஜ்மல்.
“ஓ, செய்யலாமே! இனி எல்லாரின் பிறந்தநாளிலும் மறக்காமல் வாழ்த்தலாம்”.
பொருத்துக
1. வண்ணம் தீட்டியது – பர்வீன்
2. மயில் வரைந்தது – நினைவூட்டி
3. பிறந்தநாள் – பன்னிரண்டு
4. ஆங்கில மாதங்கள் – அஜ்மல்
விடை:
1. வண்ணம் தீட்டியது – அஜ்மல்
2. மயில் வரைந்தது – பர்வீன்
3. பிறந்தநாள் – நினைவூட்டி
4. ஆங்கில மாதங்கள் – பன்னிரண்டு
வாய்மொழியாக விடை தருக
1. அஜ்மலும் பர்வீனும் பிறந்தநாள் நினைவூட்டியை எப்படியெல்லாம் உருவாக்கினார்கள்?
விடை எழுதுக
1. ஆங்கில மாதங்களில் முதல் மாதம் எது?
ஜனவரி
2. நீ பிறந்த ஆங்கில மாதம் எது?
நவம்பர்
3. ஆங்கில மாதங்களில் கடைசி மாதம் எது?
டிசம்பர்
இதோ உங்கள் வகுப்புக்கான பிறந்தநாள் நினைவூட்டி
ஆங்கில மாதங்களையும் அம்மாதங்களில் பிறந்த நண்பர்களின் பெயர்களையும் எழுதுக.