சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 1 அலகு 1 : நமது சுற்றுச்சூழல்
அலகு 1
நமது சுற்றுச்சூழல்
நீங்கள் கற்க இருப்பவை
* பல்வேறு சுற்றுச்சூழல்களின் தன்மைகள் – காடுகள், சமவெளிகள், குன்றுகள், குளங்கள், ஆறுகள், கடல்கள், பாலைவனங்கள்
நம் பூமியில் காடுகள், சமவெளிகள், குன்றுகள், பாலைவனங்கள் போன்ற பல்வேறு நில அமைப்புகளும் குளங்கள், ஆறுகள், கடல்கள் போன்ற நீர்நிலைகளும் உள்ளன.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது. எல்லோரும் குதூகலமாக இருந்தனர். இதில் கலந்துகொள்ள இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்கள் சார்ந்த இடங்களைக் குறித்துப் பேசத் தொடங்கினர்.
காடு
டேனியல், “நான் ஒரு காட்டினருகே வாழ்ந்து வருகிறேன்.
காட்டில் அதிக எண்ணிக்கையில் மரங்கள் இருக்கும். தரையில் புதர்களும் புற்களும் காணப்படும். இங்கு நீரோடையும் குளமும் கூட காணப்படும்.
இது யானை, புலி, மான், சிங்கம், கரடி, பாம்பு போன்ற விலங்குகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. இங்கு மயில், புறா, சிட்டுக்குருவி, கிளி, மரங்கொத்தி போன்ற பறவைகளும் வாழ்கின்றன. இங்கு விலங்குகளின் பல்வேறு ஒலிகளைக் கேட்கலாம். எனக்குக் காடு மிகவும் பிடிக்கும். காடு நிழல் நிறைந்த, குளிர்ச்சியான பகுதியாக இருக்கும்”.
உங்களுக்குத் தெரியுமா?
ஒரு மரத்தின் வயதை அதன் மரக்கட்டையில் உள்ள ஆண்டு வளையங்களின் எண்ணிக்கையைக் கொண்டு அறியலாம்.
காடுகள் பல வழிகளில் நமக்குப் பயன்படுகின்றன. நாம் மரக்கட்டை, தேன், பழங்கள், இரப்பர் மற்றும் பலபொருள்களை காடுகளிலிருந்து பெறுகிறோம்.
சொற்பட்டியல்
காடு, நிழல், புதர், ஒலி, தரை, புல், குளிர்ச்சி
காடுகளில் காணப்படும் சில பறவைகளை நம் வீட்டருகிலும் காணலாம். நீங்கள் பார்த்த பறவைகளுக்கு (✓) குறியிடுக.
சமவெளி மற்றும் குன்று
தருண், “நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வருகிறேன். நாங்கள் சமவெளிகளில் வாழ்கிறோம்.சமவெளி என்பது ஒரு தட்டையான நிலப்பகுதி. குன்றுகளைவிட சமவெளிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும். பயிரிடுவதற்குச் சமவெளி மிக ஏற்றது. விவசாயம் இல்லையெனில் நம்மால் உணவைப் பெற முடியுமா?
விளைநிலங்களுக்கு மழை, ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவற்றிலிருந்து நீர் கிடைக்கிறது. அங்கு பசு, ஆடு, எருது, எருமை மற்றும் பல்வகை பறவைகளையும் காணலாம். பறவைகளை உற்றுநோக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும்”.
குன்று
காமாட்சி, “நான் மலைக்குன்றின் மேல் வாழ்ந்து வருகிறேன்.
குன்று மலையைப் போன்றது. ஆனால் மலை அளவிற்கு உயரமானது அல்ல. குன்றுகள் பொதுவாகப் பசுமையாகவும் அழகாகவும் இருக்கும். இது சமவெளியைவிட குளிர்ச்சியாக காணப்படும். குறிப்பாகக் கோடைக்காலங்களில் மக்கள் மலைவாழிடங்களை பார்வையிட வருகின்றனர்”.
சொற்பட்டியல் :
குன்று, மலைவாழிடம், கோடைக்காலம் விவசாயம், பயிர்கள், படிவிவசாயம்
இப்படத்தைப் பாருங்கள். இந்தக் குன்று பார்ப்பதற்குப் படிப்படியாக அமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது அல்லவா! இப்படிகளில் தான் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. இதையே படிவிவசாயம் என்கிறோம். சில குன்றுகளில் தேயிலை, காப்பிக்கொட்டைச் செடிகள் பயிரிடப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
* தமிழக ‘மலைகளின் அரசியாக’ உதகமண்டலத்தையும் (ஊட்டி), ‘இளவரசியாகக்’ கொடைக்கானலையும் அழைக்கிறோம்.
* நமது மாநில விலங்கு வரையாடு. இது நீலகிரி மலையில் காணப்படுகிறது.
கொடுக்கப்பட்ட சொற்களை உரிய சுற்றுச்சுழலுக்கு ஏற்ப எடுத்து எழுதுக.
(குளிர்ச்சி, தேயிலை, தட்டையானது, படிவிவசாயம், வெப்பமானது, கரும்பு, மலைவாழிடம், காபி, உயரமானது, பயிர்கள்)
சமவெளி : தட்டையானது, வெப்பமானது, கரும்பு, உயரமானது, பயிர்கள்
குன்று : குளிர்ச்சி, தேயிலை, படிவிவசாயம், மலைவாழிடம், காபி
குளம்
அல்லி, தாமரை மலர்களைப் பறிக்க குளத்தில் இறங்குவது ஆபத்தானது.
சுலைமான், “நான் என் ஊரில் உள்ள குளத்தைப் பற்றிப் பேச விரும்புகிறேன். குளம் என்பது நீர் சேகரிக்கும் இடம். இது மழைநீரால் நிரம்புகிறது. மீன், பூச்சி, பாம்பு, தவளை, நண்டு, ஆமை போன்றவை குளத்தில் வாழ்கின்றன. அல்லி, தாமரை போன்ற மலர்களும் குளத்தில் காணப்படுகின்றன. குளத்தை விட ஏரி பெரியது”.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மீன் வைரந்து வண்ணம் தீட்டுக.
ஆறு மற்றும் கடல்
சுல்தானா, “நான் ஆற்றினருகே வாழ்ந்து வருகிறேன். பாய்ந்து செல்லும் ஆற்றைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆறு மலையில் தொடங்கி, ஒரு வழித்தடத்தை ஏற்படுத்திக் கொண்டு இறுதியில் கடலில் கலக்கிறது.
சொற்பட்டியல்
ஆறு, கடல், பாதை, படகுப்போட்டி, உவர்ப்பு
ஆற்றுநீர் நமக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. இதன் காரணமாகவே பழங்காலத்தில் மக்கள் ஆற்றின் அருகே வாழ்ந்தனர். பலவகை மீன்கள், நண்டுகள் மற்றும் பறவைகள் ஆற்றிலும் ஆற்றைச் சுற்றிலும் வாழ்கின்றன. சில நேரங்களில் ஆற்றில் படகுப் போட்டிகள் நடத்தப்படுவது உண்டு. என் சகோதரர்கள் இந்தப் படகுப் போட்டியில் விருப்பத்துடன் பங்கேற்பர்”.
ஒரு நதியின் பயணம்
கடல்
கோபால், “நான் கடற்கரையோரத்தில் வசிக்கும் ஒரு மீனவக் குடும்பத்திலிருந்து வருகிறேன். கடல் என்பது மிக அதிகளவு நீரைக் கொண்ட பெரிய நீர்நிலையாகும். கடல்நீர் உவர்ப்பாக இருக்கும். நாம் கடலிலிருந்து உப்பைப் பெறுகிறோம். தாவரங்கள், மீன்கள், ஆமைகள், இறால்கள் மற்றும் நண்டுகள் போன்ற உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. நாங்கள் கட்டுமரம், படகு, மீன் பிடிவலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கிறோம்”.
உங்களுக்குத் தெரியுமா?
நாம் சிப்பியில் இருந்து முத்தைப் பெறுகிறோம்.
பொருத்தமான கட்டத்தில் (✓) குறியிடுக.
பாலைவனம்
சொற்பட்டியல்
பாலைவனம், மணற்பாங்கான, அமைதி, மணற்குன்று, கள்ளிச்செடி
மேவாராம், கமலா, “நாங்கள் பாலைவனப் பகுதியிலிருந்து வருகிறோம். பாலைவனம் ஒரு வெப்பமான மணல் நிறைந்த பகுதி. அங்கு மணல் மேடுகளாகக் காணப்படும். அதனை மணற்குன்றுகள் என அழைக்கிறோம். கள்ளிச்செடிகள் பாலைவனத்தில் காணப்படுகின்றன. இவை குறைந்த அளவு நீர் இருந்தாலே வளரும்.
பாலைவனத்தில் ஒட்டகங்கள் பயணம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இது ‘பாலைவனக் கப்பல்’ என அழைக்கப்படுகிறது. பாலைவனத்தில் மிகக் குறைந்த அளவே நீர் கிடைப்பதால், நாங்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துகிறோம்”.
மாநாட்டின் இறுதியில் அனைத்து மாணவர்களும் பிற மாணவர்களின் வாழிடத்தைப் பற்றித் தெரிந்து கொண்டதால் மகிழ்ச்சியாக இருந்தனர். அவை அனைத்தும் இயற்கையின் ஒரு பகுதியாக இருப்பதைப் புரிந்து கொண்டனர். வருகை புரிந்திருந்த அனைவரும் ‘இயற்கையைப் பாதுகாப்போம்’ என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நாமும் இயற்கையைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொள்வோமா!
உங்களுக்குத் தெரியுமா?
ஒட்டகத்தால் அதிகளவு நீரை ஒரே நேரத்தில் குடிக்க இயலும். நீரும் உணவுமின்றி ஒட்டகத்தால் பல நாள்கள் உயிரோடு வாழமுடியும்.
பாலைவனத்தில் மட்டும் காணப்படுபவை யாவை? அவற்றிற்கு வண்ணம் தீட்டுக.
மதிப்பீடு
1. பொருத்துக.
அ. பாலைவனம் – சிங்கம்
ஆ. சமவெளி – ஒட்டகம்
இ. காடு – மீன்
ஈ. குளம் – பசு
விடை :
அ. பாலைவனம் – ஒட்டகம்
ஆ. சமவெளி – பசு
இ. காடு – சிங்கம்
ஈ. குளம் – மீன்
2. நில அமைப்புகளை அவற்றின் பெயர்களோடு கோடிட்டு இணைக்க.
3. சரியானவற்றை ‘ச’ என்றும் தவறானவற்றை ‘த’ என்றும் குறிக்க.
அ. குன்றுகளில் படிவிவசாயம் நடைபெறுகிறது. (ச)
ஆ. குதிரையைப் பாலைவனக் கப்பல்’ என அழைக்கிறோம். (த)
இ. சிங்கமும் புலியும் காட்டில் காணப்படும். (ச)
ஈ. காட்டில் மணற்குன்றுகள் இருக்கும். (த)
4. வகைப்படுத்துக.
(ஒட்டகம், வாத்து, புலி, கள்ளிச்செடி, மணல், யானை, நீர், தாமரை, மான், மீன், மரம்)
காடு : புலி, யானை, மான், மரம்
குளம் : வாத்து, மீன், நீர், தாமரை
பாலைவனம் : ஒட்டகம், கள்ளிச்செடி, மணல்
5. அடைப்புக் குறிக்குள் உள்ள சொற்றொடர்களைப் பயன்படுத்தி தொடர்களை முழுமையாக்குக.
(அதிக அளவு நீரை ஒரே நேரத்தில் பருகும், மரங்கள் நிறைந்தது, படிவிவசாயம் நடைபெறுகிறது, உப்பு நீரைக் கொண்டது, ஏரியைவிடச் சிறியது)
அ. காடு மரங்கள் நிறைந்தது
ஆ. கடல் உப்பு நீர் உள்ளது
இ. ஒட்டகம் ஒரே நேரத்தில் நிறைய தண்ணீர் குடிக்கும்
ஈ. குளம் ஏரியை விட சிறியது
உ. குன்றில் படி பண்ணைகள் உள்ளன
தன் மதிப்பீடு
* பல்வேறுபட்ட சுற்றுச்சூழலை என்னால் அடையாளம் காண முடியும்
* என் சுற்றுச்சூழலை என்னால் பாதுகாக்க முடியும்