சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 4 : பகலும் இரவும்
அலகு 4
பகலும் இரவும்
நீங்கள் கற்க இருப்பவை
* பகல் மற்றும் இரவு நேர வானம்
* பகல், இரவு கால ஒழுங்குமுறை
* திசைகள்
படத்தை உற்றுநோக்குங்கள். அதில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?
பகல் வானம்
சூரியன்
சூரியன் நமக்கு ஒளியையும், வெப்பத்தையும் கொடுக்கிறது. இது தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சூரியன் நாம் வாழும் பூமியைவிட மிகப் பெரியது. ஆனால், அது பூமியில் இருந்து மிகத் தொலைவில் இருப்பதால் சிறியதாகத் தெரிகிறது. சூரியன் இல்லையெனில், பூமியில் உயிர்கள் வாழ முடியாது.
உங்களுக்குத் தெரியுமா?
சூரிய ஒளி பூமியை வந்தடைய எட்டு நிமிடங்கள் ஆகிறது.
நிழல்
ஒரு பொருள் தன் வழியே ஒளியைக் கடக்க அனுமதிக்காதபோது, அங்கு ஓர் இருட்டான பகுதி உருவாகிறது. இது ‘நிழல்’ என்று அழைக்கப்படுகிறது.
சூரிய ஒளி உனது பின் பகுதியில் விழுமாறு நின்றுகொள். இப்போது உனக்கு முன்னால் தரையைப் பார். நீ பார்ப்பது தான் உனது நிழல். உனது நிழல் உன்னுடன் நகர்கிறதா என்பதைக் கவனி.
* உன்னைச் சுற்றி உள்ள பொருள்களில் எந்தெந்தப் பொருள்களின் நிழல்களை நீ பார்க்கிறாய் என்பதைப் பற்றி கலந்துரையாடுக.
உனது நிழலின் அளவு மாறுபடுவதைக் கவனித்திருக்கிறாயா? காலை, நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் உனது நிழலை உற்றுநோக்கி அதனை அட்டவணைப்படுத்துக.
இரவு வானம்
கலந்துரையாடுவோமா!
நாம் இருளில் பொருள்களைப் பார்க்க முடியுமா? அவற்றைப் பார்ப்பதற்கு நமக்கு ஒளி (வெளிச்சம்) தேவைப்படுகிறது. கீழ்க்காணும் படங்களை உற்றுநோக்கு. இரவு வானம் எவ்வாறு பகல் வானத்திலிருந்து வேறுபடுகிறது?
நிலா
நாம் இரவு வானத்தில் நிலா, நட்சத்திரங்கள் மற்றும் மேகங்களை பார்க்கலாம். நிலா தானாக ஒளிர்வதில்லை. அது சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று ஒளிர்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
நிலவின் பல்வேறு நிலைகள்
கலந்துரையாடுவோமா!
தொடர்ந்து 15 நாள்கள் நிலவை உற்றுநோக்கி, நிலா எல்லா இரவிலும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறதா என்பதைக் குறித்துக் கலந்துரையாடுக.
நிலாவின் வடிவம் ஒவ்வொரு இரவும் வேறுபடுவதுபோல காணப்படும். நிலா தனது முழுமையான வடிவத்துடன் காணப்படுவதை முழு நிலவு (பௌர்ணமி) என்றோம். இரவில் நிலவை காணமுடியாத (வானம் தெளிவாக காணப்படும் பொழுதும்) நாளை அமாவாசை என்கிறோம்.
நிலவின் நிலையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. (எ.கா.) ஈகைத் திருநாள், மகாளய அமாவாசை.
உங்களுக்குத் தெரியுமா?
நிலவில் முதன் முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்.
நட்சத்திரங்கள்
வானத்தில் எண்ணமுடியாத அளவுக்கு நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. சூரியன், நமக்கு அருகில் உள்ள நட்சத்திரம் ஆகும். நட்சத்திரங்கள் பகலிலும் மின்னுகின்றன. ஆனால், சூரிய ஒளி நட்சத்திரங்களின் ஒளியைவிட மிகவும் பிரகாசமாக இருப்பதால் பகலில் நம்மால் நட்சத்திரங்களைப் பார்க்க முடியவில்லை. இரவு வானில் நட்சத்திரக் குழுக்கள் சில குறிப்பிட்ட அமைப்பில் இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அவற்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
உங்களுக்குத் தெரியுமா?
நட்சத்திரக் குழுக்களின் இருப்பிடத்தை வைத்தே நம் முன்னோர்கள் பயிரிடும் காலம், அறுவடைக் காலத்தைக் கண்டறிவர். மேலும், பயணத்தின் போதும் திசைக்காட்டியாகவும் இவற்றைப் பயன்படுத்தினர்.
பொருத்துக.
அ) சூரியன் – என்னுடன் பயணம் செய்யும் இருட்டான பகுதி
ஆ) நட்சத்திரங்கள் – தானாக ஒளிர்வதில்லை
இ) நிலா – குறிப்பிட்ட அமைப்பை உருவாக்கும்
ஈ) நிழல் – தாவர வளர்ச்சிக்கு உதவும்
விடை :
அ) சூரியன் – தாவர வளர்ச்சிக்கு உதவும்
ஆ) நட்சத்திரங்கள் – குறிப்பிட்ட அமைப்பை உருவாக்கும்
இ) நிலா – தானாக ஒளிர்வதில்லை
ஈ) நிழல் – என்னுடன் பயணம் செய்யும் இருட்டான பகுதி
பகல், இரவு கால ஒழுங்குமுறை
பகலும், இரவும் மாறி மாறி வருகின்றன. பெரும்பாலான விலங்குகளும், தாவரங்களும் பகலில் செயல்பட்டும் இரவில் தூங்கவும் செய்கின்றன. சில தாவரங்கள், மாலை நேரங்களில் இலைகளை மூடிக் கொள்கின்றன. எ.கா. தூங்குமூஞ்சி மரம். இருப்பினும் சில விலங்குகள் இரவில் விழிப்புடன் செயல்படுகின்றன. வௌவால், ஆந்தை, காட்டுப்பூனை, எலி, ஓநாய், கரப்பான்பூச்சி மற்றும் மின்மினிப் பூச்சி போன்றவை இரவில் செயல்படும் சில விலங்குகளாகும்.
சில விலங்குகள் இரவில் செயல்படுவதற்கு காரணங்கள்:
* இரையைத் தேடுதல்
* பகலில் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளல்
* பகல் நேர வெப்பத்தைத் தவிர்த்தல்
இவை பெற்றிருக்கும் சிறப்புத் தகவமைப்புகள்:
* பெரிய கண்கள் – ஆந்தை, பூனை
* மோப்ப சக்தி – எலி, நாய்
* கூர்மையான கேட்டல் திறன் – வௌவால்
உங்களுக்குத் தெரியுமா?
* வௌவால் ஒலி அலைகளைப் பயன்படுத்தி பறக்கவும் வேட்டையாடவும் செய்கிறது.
* ஆந்தை தனது தலையை கிட்டத்தட்ட முக்கால் பங்கு அளவிற்கு சுற்றி தனக்குப் பின்னால் இருப்பவற்றைக் காண்கிறது.
பெரும்பாலான பூக்கள் காலையில் மலர்கின்றன. இருப்பினும், சில மலர்கள் இரவில் மலர்கின்றன. எ.கா. மல்லிகை, அல்லி, சம்பங்கி, சப்பாத்திக்கள்ளி, ஊமத்தம்பூ. மலர்களில் பெரும்பாலானவை நறுமணமிக்கதாகவே உள்ளன. இவற்றுள் சில கண்களைக் கவரும் வண்ணங்களில் காணப்பட்டாலும், பெரும்பாலானவை வெண்மையாகவே காணப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
நிஷகாந்தி மலரானது இரவில் மலரும் மலர்களின் ராணி என அழைக்கப்படுகிறது.
இரவில் செயல்படும் விலங்குகளைக் கண்டறிந்து (✓) குறியிடுக.
திசைகள்
பொருள்களின் அமைவிடத்தை விளக்கக் குறிப்பிட்ட ஒன்றை அடிப்படையாகக் கொண்டு முன், பின், வலது மற்றும் இடது பக்கம் என பயன்படுத்துகிறோம். இடங்களும் பொருள்களும் உள்ள இடத்தை விளக்க சூரியனின் அமைவு நிலையின் அடிப்படையில் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு எனக்குறிப்பிடுகிறோம். இவையே திசைகள் எனப்படும். திசைகள் நம்மைச் செல்ல வேண்டிய இடத்திற்கு மாறாமல் சென்றடைய உதவுகின்றன.
சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதாக நமக்குத் தோன்றுகிறது. காலை வேளையில் சூரியனை நோக்கி நின்று கொள் (கிழக்கு). உனக்குப் பின்னால் இருப்பது மேற்கு, உனக்கு வலப்பக்கம் இருப்பது தெற்கு, உனக்கு இடப்பக்கம் இருப்பது வடக்கு திசையாகும்.
கீழ்க்காணும் படத்தை உற்றுநோக்குங்கள். நடுவில் இருப்பது மீரா. அவளுக்கு தெற்கில் இருப்பது பூந்தொட்டிகள், வடக்கில் இருப்பது பாறைகள், கிழக்கில் இருப்பது மலர் வண்டி, மேற்கில் இருப்பது மரக்கட்டை.
உனது பள்ளியில் சூரியன் தோன்றும் கிழக்கு திசையை அடையாளம் காண ஆசிரியரின் உதவியைக் கேள். பிறகு பின்வருபவை எந்தெந்த திசைகளில் உள்ளன எனக் காண்க. நீர்த்தேக்கத் தொட்டி, கொடிமரம், விளையாட்டுத் திடல், கழிப்பறை, சமையலறை, வாயிற் கதவு மற்றும் குடிநீர்க் குழாய். உனது விடையை அட்டவணைப்படுத்துக.
மதிப்பீடு
1. படங்களின் பெயரை எழுதுக. (நிலா, பூமி, நட்சத்திரங்கள், சூரியன்)
2. இரவில் உலவும் விலங்குகளின் பெயரை எழுதுக.
(பசு, ஓநாய், மான், கரப்பான்பூச்சி, குரங்கு, மின்மினிப் பூச்சி, முயல், அணில், எலி)
3. பின்வரும் கூற்று சரி எனில் ‘ச’ எனவும் தவறு எனில் ‘த’ எனவும் குறிப்பிடுக.
1. சூரியன் நமக்கு ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது. (ச)
2. நிலவின் வடிவம் ஒவ்வொரு இரவும் மாறுபடுகிறது. (த)
3. நட்சத்திரக் குழுக்கள் பல்வேறு அமைப்புகளில் காணப்படுகின்றன. (ச)
4. மல்லிகை பகல் நேரத்தில் மலரும். (த)
5. நீங்கள் கிழக்கு நோக்கி நிற்கும் போது உங்களுக்கு வலப்பக்கம் இருப்பது மேற்கு. (த)
4. பின்வரும் படத்தை உற்றுநோக்கி கோடிட்ட இடங்களை நிரப்புக.
(மரம், பூக்கள், குளம், நாய்)
அ. தோட்டத்தின் தெற்குத் திசையில் காணப்படுவது. குளம்.
ஆ. தோட்டத்தின் வடக்குத் திசையில் காணப்படுவது மரம்.
இ. தோட்டத்தின் கிழக்குத் திசையில் காணப்படுவது பூக்கள்.
ஈ. தோட்டத்தின் மேற்குத் திசையில் காணப்படுவது. நாய்.
5. இரவில் பூக்கும் மலர்களை அடையாளம் கண்டு (✓) குறியிடுக.
தன் மதிப்பீடு
* பகல், இரவு நேரங்களில் என்னால் வானத்தை உற்றுநோக்கி அறிய முடியும்.
* என்னால் இரவில் செயலாற்றும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை அடையாளம் காண முடியும்.
* என்னால் திசைகளை அடையாளம் காண முடியும்.