சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி __________
- தமிழ்நாடு
- கேரளா
- பஞ்சாப்
- மத்தியப் பிரதேசம்
விடை ; பஞ்சாப்
2. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ________ காற்றுகள் உதவுகின்றன.
- லூ
- நார்வெஸ்டர்ஸ்
- மாஞ்சாரல்
- ஜெட் காற்றோட்டம்
விடை ; மாஞ்சாரல்
3. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு __________ ஆகும்.
- சமவெப்ப கோடுகள்
- சம மழைக்கோடுகள்
- சம அழுத்தக் கோடுகள்
- அட்சக் கோடுகள
விடை ; சம மழைக்கோடுகள்
4. இந்தியாவின் காலநிலை __________ ஆக பெயரிடப்பட்டுள்ளது
- அயன மண்டல ஈரக் காலநிலை
- நிலநடுக்கோட்டுக் காலநிலை
- அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை
- மித அயனமண்டலக் காலநிலை
விடை ; அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை
5. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
- அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
- இலையுதிர்க் காடுகள்
- மாங்குரோவ் காடுகள்
- மலைக் காடுகள்
விடை ; இலையுதிர்க் காடுகள்
6. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் __________
- தமிழ்நாடு
- ஆந்திரப் பிரதேசம்
- மத்தியப் பிரதேசம்
- கர்நாடகா
விடை ; ஆந்திரப் பிரதேசம்
7. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது ____________.
- நீலகிரி
- அகத்திய மலை
- பெரிய நிக்கோபார்
- கட்ச்
விடை ; கட்ச்
II .பொருத்துக.
1. யானை பாதுகாப்புத் திட்டம் | பாலை மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள் |
2. உயிர்பன்மைச் சிறப்பு பகுதிகள் | அக்டோபர், டிசம்பர் |
3. வடகிழக்குப் பருவக் காற்று | கடற்கரைக் காடுகள் |
4. அயன மண்டல முட்புதர் காடுகள் | யானைகள் பாதுகாப்பு |
5. கடலோரக் காடுகள் | இமயமலைகள் |
விடை :- 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ
III. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில்கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1. கூற்று: (A) இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.
காரணம்: (R) இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது
- A மற்றும் R இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி
- A மற்றும் R இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் தவறு
- கூற்று சரி காரணம் தவறு
- கூற்று தவறு காரணம் சரி.
விடை ; A மற்றும் R இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி
IV பொருந்தாத விடையைத் தேர்வு செய்க
1. ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.
- பாலைவனம்
- கங்கை பிரம்மபுத்ரா டெல்டா
- கோதாவரி டெல்டா
- மகாநதி டெல்டா
விடை ; பாலைவனம்
2. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
- அட்ச பரவல்
- உயரம்
- கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்
- மண்
விடை ; மண்
V. சுருக்கமாக விடையளிக்கவும்
1. காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக.
- அட்சங்கள்
- கடல் மட்டத்திலிருந்து உயரம்
- கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு
- பருவக்காற்று
- நிலத்தோற்றம்
- ஜெட் காற்றுகள்
போன்றவை இந்திய காலநிலையை பாதிக்ம் காரணிகளாகும்.
2. ”வெப்ப குறைவு விகிதம்” எனறால் என்ன?
புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.50C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது. இதற்கு ”வெப்ப குறைவு விகிதம்” என்று பெயர்.
3. ”ஜெட் காற்றோட்டங்கள்”’ எனறால் என்ன?
- வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் ”ஜெட்காற்றுகள்” என்கிறோம்.
- ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின் படி, துணை அயன மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம்பெயர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உருவாகின்றது.
- கீழை ஜெட் காற்றோட்டங்கள் தென்மேற்கு மற்றும் பின்னடையும் பருவக்காற்று காலங்களில் வெப்பமண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.
4. பருவகக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக
பருவங்களுக்கேற்றவாறு தங்களது திசைகளை மாற்றிக்கொண்டு வீசும் கோள் காற்றுகளைப் பருவக்காற்று என்கிறோம்.
5. இந்தியாவின் நான்கு பருவக காலங்களைக் குறிப்பிடுக
இந்திய காலநிலையில் நான்கு பருவங்கள்
குளிர்காலம் | ஜனவரி முதல் பிப்ரவரி வரை |
கோடைக்காலம் | மார்ச் முதல் மே வரை |
தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது மழைக்காலம் | ஜுன் முதல் செப்டம்பர் வரை |
வடகிழக்கு பருவக்காற்று காலம் | அக்டோபர் முதல் டிசம்பர் வரை |
6. ’பருவமழை வெடிப்பு’ எனறால் என்ன?
- தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46oC வரை உயருகிறது.
- இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) பருவமழை வெடிப்பு’ எனப்படுகிறது.
7. அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக
- மேற்கு கடற்கரை
- அசாம்
- மேகாலயாவின் தென்பகுதி
- திரிபுரா
- நாகலாந்து
- அருணாச்சலப்பிரதேசம்
போன்ற பகுதிகள் 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவையும் பெறுகின்றன.
8. இந்தியாவில் சதுப்புநிலக்காடுகள் காணப்படும் இடங்களைக் குறிப்பிடுக.
- கங்கை-பிரம்மப்புத்திரா டெல்டா பகுதிகள்
- மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் இவ்வகை ஓதக்காடுகள் காணப்படுகின்றன.
9. இந்தியாவில் உள்ள உயிர்ககோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
- மன்னார் வளைகுடா
- நந்தா தேவி
- நீலகிரி
- நோக்ரேக்
- பச்மாரி
- சிம்லிபால்
- சுந்தரவனம்
VI. வேறுபடுத்துக
1. வானிலை மற்றும் காலநிலை.
வானிலை
- வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளி மண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும்.
- வெப்பம், அழுத்தம், காற்று, ஈரப்பதம் மற்றும் மழை ஆகியன வானிலையின் முக்கிய கூறுகள் ஆகும்.
- மாறக்கூடியது
காலநிலை
- காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
- அட்சப்பரவல், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, கடல் மட்டத்திலிருந்து உயரம், பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை காலநிலையை பாதிக்கும் காரணிகள்
- மாறாதது
2. அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர்க் காடுகள்
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
- ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளில் இவ்வகைக்காடுகள் காணப்படுகிறன.
- இக்காடுகளிலுள்ள மரங்கள் பசுமையாகக் காணப்படுகின்றன.
- ஆண்டு வெப்பநிலை 22oC க்கு அதிகமாக அதிகமாக இருக்கும்
- மேற்கு தொடர்ச்சி மலை, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகிறன.
- இரப்பர், எபனி, ரோஸ் மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
இலையுதிர்க் காடுகள்
- ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
- இக்காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைக் காலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன.
- ஆண்டு வெப்பநிலை 27oC ஆக இருக்கும்
- பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், மத்திய இந்தியா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தென் இந்தியா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
- தேக்கு, சால், சந்தன மரம், ரோஸ் மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம் மற்றும் படாக் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன மேலும் நறுமண திரவியங்கள், வார்னீஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை கிடைக்கின்றன.
3. வடகிழக்கு பருவக்காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று
வடகிழக்கு பருவக்காற்று
- வடகிழக்குப் பருவக்காற்றின் காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை
- இக்காற்று நிலப்பகுதியிலிருந்து வங்காள விரிகுடா கடலை நோக்கி வீசுகிறது
- இப்பருவக்காற்றின் மூலம் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடாகவின் உட்பகுதிகள் நல்ல மழையைப் பெறுகின்றன.
தென்மேற்கு பருவக்காற்று
- தென்மேற்கு பருவக்காற்றின் காலம் ஜுன் முதல் செப்டம்பர் வரை
- இக்காற்று இந்தியப் பெருங்கடலில் இருந்து நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது
- இப்பருவக்காற்றின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலகளின் மேற்கு சரிவுகள், வடகிழக்கு இந்திய பகுதிகள் குறிப்பாக மேகாலயா நல்ல மழையைப் பெறுகின்றன.
VII. காரணம் கண்டறிக
1. மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.
அரபிக்கடலுக்கும், மேற்குத்தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட இடைவெளி குறைவாக உள்ளதால் மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.
2. இந்தியா அயன மண்டலப் பருவகாற்றுக் காலநிலையைப் பெற்றுள்ளது.
- இந்தியாவின் அமைவிடம் அயனமண்டல பகுதியாகும்.
- இந்தியா ஒரு பருவக்காற்று நாடாகும். ஆதலால் இந்தியா அயனமண்டலப் பருவக்காற்று காலநிலைப் பெற்றுள்ளது
3. மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை
- மலைப்பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து உயரமானது.
- சமவெளிகள் கடல் மட்டத்திலிருந்து உயரம் குறைவானது.
- புவி பரப்பிலிருந்து மேலே செல்ல செல்ல வெப்பநிலை குறைகிறது.
VIII. விரிவான விடையளிக்கவும்
1. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக
காலம்
- பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் செப்டம்பர் வரையாகும்.
பருவக்காற்று துவக்கம்
- பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கணக் கடற்கரை பகுதிக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும் ஜூலை 15இல்அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.
- தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46oC வரை உயருகிறது. இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்)’பருவமழை வெடிப்பு’ எனப்படுகிறது.
- இக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும்பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிக்கிறது.
- அவை
- அரபிக்கடல் கிளை
- வங்காள விரிகுடா கிளை
அரபிக்கடல் கிளை
- தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவை தருகிறது.
- இக்கிளையானது வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது.
- ஆரவல்லி மலைத்தொடர் இக்காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் இராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவின் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவை தருவதில்லை.
வங்காள விரிகுடா கிளை
- வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது.
- இது காசி, காரோ, ஜெயந்தியா குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் (mawsynram) மிக கனமழையைத் தருகிறது.
- பிறகு இக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும்போது மழைப் பொழிவின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
- இந்தியாவின் ஒட்டு மொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப் பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது
2. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
அயனமண்டல பசுமை மாறாக் காடுகள்
- ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கு மேலும் ஆண்டு வெப்பநிலை 22oCக்கு அதிகமாகவும், சராசரி ஆண்டு ஈரப்பதம் 70 சதவீதத்திற்கு மேலும் உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகிறன.
- மேற்கு தொடர்ச்சி மலை, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகிறன.
- இரப்பர், எபனி, ரோஸ் மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
அயன மண்டல இலையுதிர்க் காடுகள்
- இவ்வகை காடுகள் ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
- இக்காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைக்காலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன.
- இமயமலைக்கு அருகில் அமைந்துள்ள பஞ்சாப் முதல் அசாம் வரையிலான பகுதிகள், வடசமவெளிகள், மத்திய இந்தியா, தென் இந்தியா, போன்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
- தேக்கு, சால், சந்தனமரம், ரோஸ்மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம் மற்றும் படாக் ஆகியவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களாகும்.
- இக்காடுகள் நறுமண திரவியங்கள், வார்னீஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை அளிக்கின்றன.
அயனமண்டல வறண்டக் காடுகள்
- ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் அயனமண்டல வறண்ட காடுகள் காணப்படுகின்றன. அயனமண்டல வறண்ட காடுகள் ஒரு இடைநிலை வகைக் காடாகும்.
- கிழக்கு இராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்திரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதி, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ராவின் கிழக்குப்பகுதி, தெலங்கானா, மேற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் கிழக்கு பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
- இலுப்பை (mahua), ஆலமரம், ஆவாராம் பூ மரம் (Amaldas), பலா, மஞ்சக் கடம்பு (Haldu), கருவேலம் (Babool) மற்றும் மூங்கில் ஆகிய முக்கிய மரவகைகளாகும்.
முட்புதர் காடுகள்
- பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள்: இக்காடுகளை ”முட்புதர் காடுகள்” என்றும் அழைப்பர். இவை ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50 செ.மீட்டருக்கு குறைவாகவும், அதிக வெப்பமும் மற்றும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
- கருவேலம் (Babool), சீமை கருவேல மரம் (Kikar), ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
அல்பைன்/இமயமலைக் காடுகள்
- சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
- இவ்வகைக்காடுகள் ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன. ஓக், சில்வர் பிர், பைன் மற்றும் ஜுனிபர் மரங்கள் இக்காட்டின் முக்கிய மரவகைகளாகும்.
- கிழக்கு இமயமலைப் பகுதியில் இவ்வகையான காடுகள் பரந்த அளவில் உள்ளன.
அலையாத்திக் காடுகள்
- இக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
- இவை ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்புநிலக்காடுகள் மற்றும் டெல்டா காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- இவை ’’மாங்குரோவ் காடுகள்’’ என்றும் அழைக்கப்படுகின்றன.
கடற்கரையோரக் காடுகள்
- இவை கடற்கரைக் காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- இங்கு சவுக்கு, பனை, தென்னை ஆகியவை முதன்மையாகும்
- இவை இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியின் கரைப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. குறிப்பாக கேரளா மற்றும் கோா பகுதிகளில் இவ்வகைக் காடுகள் அதிகமாக உள்ளன.
நந்தவனப் பகுதி (ஆற்றாங்கரைக் காடுகள்)
- இக்காடுகள் கங்கை, யமுனை, நதி பாயும் பகுதிகளில் குறிப்பாக காதர் பகுதிகளில் காணப்படுகின்றன
- இவை பசுமையான புதர் தாவரங்கள் மற்றும் புளியமரம் போன்றவற்றிற்கு பெயர் பெற்றவை
- வடபெரும் சமவெளி பகுதிகளிலுள்ள ஆற்றுப்பகுதிகளில் இவ்வகைத் தாவரங்கள் அதிகம் காணப்படுகின்றன.