Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 4

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 4

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்

துணைப்பாடம்: திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

நுழையும்முன்

நல்ல பாடல்களைப் படித்துச் சுவைப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும். அதுபோலவே சிறந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் நமக்கு மகிழ்ச்சி தரும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

ஒரு நாட்டில் காவியம் உண்டாகிக் கொண்டே இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது அவ்வளவு சரியல்ல. பொதுவாக, ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவை கவிஞன் பிறக்கிறான் என்று சொல்லுவார்கள். ஒருவகையாக அஃது உண்மைதான். கவி அவ்வளவு அருமை. ஆனால், கவியை அனுபவிக்கிற திறமை அவ்வளவு அபூர்வமான விஷயம் அல்ல; ஆண், பெண் எல்லோருமே அனுபவிக்கிற விஷயந்தான் அது.

வானத்தில் விளைந்த சுடர்கள்போல இயற்கையில் விளைந்த கவிகளைத்தான் கவிகள் என்று சொல்ல வேண்டும். மின்மினிப் பூச்சியையும் ‘காக்காப்’ பொன்னையும் பார்த்து ஏமாந்து போகக் கூடாது. திருநெல்வேலி ஜில்லா நெடுகிலும் உண்மையான கவிஞர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களுடைய பாடல்களையும் மக்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம். எட்டையபுர சமஸ்தானம் நெடுகிலும் ஊர் ஊராய்ப் புலவர்களும் கவிராயர்களும் வாழ்ந்தனர். தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம்  அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான்.

பாரதியாரும் தேசிகவிநாயகனாரும் நம்மோடு ஒட்டியவர்கள். அவர்களை விட்டுவிட்டு, கொஞ்சம் முந்தியுள்ள கவிஞர்களைப் பார்க்கலாம். கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் பாரதியாரின் பிறப்பிடமாகிய எட்டையபுரம் இருக்கிறது. அங்கே சுமார் இருநூறு வருஷங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர். அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

மணியாச்சியிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம்தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல். முக்கூடல் பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியதுதான். சாதாரணமாக மழை பெய்யாத இடத்தில் மழை பெய்கிறது என்றால் குடியானவர்களுக்கு ஒரே கும்மாளி அல்லவா? அந்தக் கும்மாளி,

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறிமலை

யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே

என்ற அடியிலே இருக்கிறது. குடியானவர்களுக்கு இடிமுழக்கம்தான் சங்கீதம்; மின்னல் வீச்சுத்தான் நடனம்.

இனி, திருநெல்வேலிக்குப் போகலாம். சுமார் முந்நூறு வருஷங்களுக்கு முன் மதுரைப் பக்கத்திலிருந்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லைக்கு வந்தார். நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள காந்திமதித் தாயைத் தரிசித்தார். ரொம்ப ரொம்ப உரிமை பாராட்டி, சுவாமியிடம் சிபாரிசு செய்யவேண்டும் என்று முரண்டுகிறார்.

திருநெல்வெலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்திலே பதினெட்டாவது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார். ஆற்றுக்குத் தென்கரையில் நம்மாழ்வார் அவதார ஸ்தலமான ஆழ்வார்திருநகரி இருக்கிறது. பூர்வத்தில் இதற்குத் திருக்குருகூர் என்று பெயர். நம்மாழ்வார் தமது ஈடுபாட்டை ஆயிரம் தமிழ்ப்பாட்டில் (திருவாய்மொழியில்) வெளியிட்டார். இது தமிழுக்குக் கிடைத்த யோகம்.

இனி மோட்டார் வண்டியை ஒரு முக்கியமான ஊருக்கு விட வேண்டும். கொற்கை என்கிற சிறு ஊர்தான் அது. அதன் புகழோ அபாரம். சுமார் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னிருந்த ஒரு பெருங்கவிஞர் முத்தொள்ளாயிர ஆசிரியர். பல தேசங்களிலுமிருந்து வர்த்தகர்கள் வந்து முத்து வியாபாரம் செய்கிறதை அவர் பார்த்தார். மேற்கே ரோமாபுரி, கிரேக்கதேசம் முதல் கிழக்கே சைனா வரையும் கொற்கையிலிருந்தே முத்து போய்க் கொண்டிருந்தது. புலவர் முத்து வளத்தை நன்றாய் அனுபவித்தார்; பாடினார்.

திருச்செந்தூருக்குச் சுவாமி தெரிசனம் செய்யப் போக வேண்டியதுதான் இனி. வழியிலே, காயல்பட்டணத்தில் கொஞ்சம் இறங்கி விட்டுப் போகலாம். காயல்பட்டணத்தில் இருநூற்றைம்பது வருஷத்துக்கு முன் சீதக்காதி என்ற பெரிய வாணிகர் இருந்தார். அவருடைய கப்பல்கள் பல தேசங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலமாக மிகுந்த திரவியத்தைச் சம்பாதித்து வந்தன. அவர் தமிழ்ப் புலவர்களுக்குப் பெருங்கொடை கொடுத்து வந்தார். அவர் இறந்தபோது, புலவர்கள் இதயத்தில் இடிதான் விழுந்தது. நமசிவாயப் புலவர் என்பவர் என்ன ஆற்றாமையோடு அலறுகின்றார் பாருங்கள்:

பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில் 

நாமாது இருந்தென்ன நாமும் இருந்தென்ன நாவலர்க்குக் 

கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைக்கரத்துச் 

சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே

உண்மையான உணர்ச்சி.

இனிப் போக வேண்டியது திருச்செந்தூருக்குத்தான். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் வந்து, நந்தவனங்களைப் பார்த்து அனுபவித்தார். ஏரிநீர் நந்தவனங்களில் கட்டிக் கிடப்பதால் சேல்மீன்கள் துள்ளிக் குதிக்கவும் பூஞ்செடி கொடிகளையே அழிக்கவும் தலைப்பட்டன என்று பாடியுள்ளார்.

சமுத்திரத்தை முட்டியாகிவிட்டது. மோட்டார் வண்டியைத் திருப்பி, நேரே கழுகுமலைக்குப் போவோம். இக்காலத்தில் பாடுகிற காவடிப்பாட்டெல்லாம் கழுகுமலை முருகன் மேல்தான். இக்காவடிச்சிந்தைப் பாடியவர் அண்ணாமலையார். காவடிப்பாட்டைக் கேட்க வேண்டுமானால், பம்பை, மேளம், ஆட்டம் எல்லாவற்றோடும் கேட்டால்தான் ரஸமும், சக்தியும் தெரியும்.

இங்கிருந்து சங்கரன்கோயில் பன்னிரண்டு மைல். பெரிய சிவஸ்தலம். அம்பாள் கோமதித் தாய். கோமதித் தாயைப் பற்றி உண்மையான பக்தியும் தமிழ்ப் பண்பும் வாய்ந்த ஒரு பாடல். அதைப் பாடியவர் திருநெல்வேலி அழகிய சொக்கநாதர் 

‘வாடா’ என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் 

கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே

பக்தியானது தமிழுக்குள்ளே வளைந்து வளைந்து ஓடுவது அழகாய் இருக்கிறது!

சங்கரன்கோயிலுக்கு வடக்கே எட்டு மைலில் முக்கியமான ஸ்தலம் கருவைநல்லூர். இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். கோயிலும் சுற்று வீதிகளும் அழகாய் அமைந்திருக்கின்றன. இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார். அவற்றில் அநேக பாடல்கள் பக்தியும் செய்யுள் நயமும் நிறைந்து, பாடப் பாட நாவுக்கு இனிமை தந்து கொண்டிருக்கின்றன.

இனி, குற்றாலத்துக்கு நேராகப் போக வேண்டும். கவி இல்லாமலே மனசைக் கவரக்கூடிய இடம் குற்றாலம். கோயில், அருவி, சோலை பொதிந்த மலை, தென்றல் எல்லாம் சேர்ந்து அமைந்திருப்பதைப் பார்த்தால், உலகத்திலேயே இந்த மாதிரி இடம் இல்லை என்றே சொல்லலாம். சுமார் ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன் திருஞான சம்பந்தர் இங்கு வந்தார். நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடினார்.

மாணிக்கவாசகரும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் : 

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் 

கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும் 

குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே 

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே!

பிற்காலத்திலே எழுந்த தமிழ் இலக்கியங்களில் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி. அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன் குற்றாலத்துக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ள மேலகரத்தில் வாழ்ந்துவந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல். தமிழ்க் கவியின் உல்லாச விளையாட்டு இன்னது என்று தெரிவதற்கு இதிலே ஒரு சிறு பாடலைப் பார்க்கலாம். குறி சொல்லுகிற பெண் குற்றாலமலையின் பெருமையைக் கொழிக்கிறாள்: 

கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே!

கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே

துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும்

துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே

இப்பாட்டு, மலையிலுள்ள அருவிகளைப் போல் கும்மாளி போடுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க திருநெல்வேலிக் கவிகளின் கவிதைகளைப் படித்துச் சுவைப்போம்!

குறிப்பு: இக்கட்டுரை ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டது. எனவே அக்கால நடையில் எழுதப்பட்டுள்ளது. 

திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்.

நூல் வெளி 

டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர்; தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்; இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர். இவர் தமது வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார். இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரை இவரது இதய ஒலி என்னும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா 

டி.கே.சி. குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக. 

முன்னுரை:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

எட்டையபுரம்:

கவிமணி பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம். எட்டையபுர சமஸ்தானம் நெடுகிலும் ஊர் ஊராய்ப் புலவர்களும் கவிராயர்களும் வாழ்ந்தனர். தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் – அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான். பாரதியாரும் தேசிகவிநாயகனாரும் நம்மோடு ஒட்டியவர்கள், அவர்களை விட்டுவிட்டு, கொஞ்சம் முந்தியுள்ள கவிஞர்களைப் பார்க்கலாம். கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் பாரதியாரின் பிறப்பிடமாகிய எட்டையபுரம் இருக்கிறது. அங்தே சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர், அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார். 

சீவைகுண்டம் – கொற்கை:

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்திலே பதினெட்டாவது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்.

கொற்கை என்கிற சிறு ஊர்தான் அது. அதன் புகழோ அபாரம். சுமார் இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னிருந்த ஒரு பெருங்கவிஞர் முத்தொள்ளாயிர ஆசிரியர்.

கருவை நல்லூர்:

சங்கரன்கோயிலுக்கு வடக்கே எட்டு மைலில் முக்கியமான ஸ்தலம் கருவைநல்லூர், இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். கோயிலும் சுற்று வீதிகளும் அழகாய் அமைந்திருக்கின்றன. இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார். 

குற்றாலம்:

கவி இல்லாமலே மனசைக் கவரக்கூடிய இடம் குற்றாலம். கோயில், அருவி, சோலை பொதிந்த மலை, தென்றல் எல்லாம் சேர்த்து அமைந்திருப்பதைப் பார்த்தால், உலகத்திலேயே இந்த மாதிரி இடம் இல்லை என்றே சொல்லலாம். சுமார் ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன் திருஞான சம்பந்தர் இங்கு வந்தார். நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடினார்.

பிற்காலத்திலே எழுந்த தமிழ் இலக்கியங்களில் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி, அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் குற்றாலத்துக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ள மேலகரத்தில் வாழ்ந்துவந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல்.

முடிவுரை

தமிழ்மணம் கமழும் நகர், தமிழ் வளர்த்த நகர் என்று போற்றுதலுக்குரிய நகர் திருநெல்வேலி என்பதை அறியமுடிகின்றது.

கற்பவை கற்றபின்

1. உங்களுக்கு பிடித்த கவிதை ஒன்றைப் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.

வாழ்க்கை

“பெட்டி படுக்கைகளை 

சுமந்தபடி

ஒரு

பிரயாணம்

எப்போது சுமைகளை 

இறக்கி வைக்கிறோமோ 

அப்போது

சுற்றி இருப்பவர்கள் 

நம்மைச் 

சுமக்க தொடங்குகிறார்கள்”.

– மு. மேத்தா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *