தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம்
கவிதைப்பேழை: ஒரு வேண்டுகோள்
நுழையும்முன்
கலைகள் மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன. ஒரு கலைஞன் தான் படைக்கும் ஒவ்வொன்றையும் அழகியலோடு படைப்பான். கலைப்படைப்பு அழகியலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. அது மானுடத்தைப் பேச வேண்டும். இதனைக் கலைஞர்களிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கிறார் இப்பாடலின் ஆசிரியர். அதனை அறிவோம்.
கலையுலகப் பிரும்மாக்களே
மண்ணின் வனப்புக்குப்
புதிய அழகுகள் சேர்ப்பவர்களே
ஒரு மானுடத்தின் வேண்டுகோள்
நீங்கள் சிற்பிகளாகப்
பாறை உடைப்பவனின்
சிலை வடித்தால்
வியர்வை நெடி வீசட்டும் அதில்
வயல்வெளி உழவனின்
உருவ வார்ப்பெனில்
ஈரமண் வாசம்
இருக்க வேண்டும் அதில்
ஓவியர்களாகத்
தாய்மையின் பூரிப்பைச் சித்திரமாக்கினால்
அவள் முகப்பொலிவில்
வழித்தெடுக்குமாறு இருக்கட்டும்
கரிசன பாச உணர்வுகள்
ஒரு சின்ன மழலைச் சித்திரமா
பால் மணம் கமழ வேண்டும்
அதன் பளிங்கு மேனியில்
ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களா
அட்லாண்டிக் சமுத்திர அலைகளா
அமேசான் காடுகளா
பனிபடர் பள்ளத்தாக்குகளா
தொங்கும் அதிசயத் தோட்டங்களா
இயற்கையின் பிரமிப்பு எதுவும்
கலைவடிவு கொள்ளலாம்
ஏதாயினும் இதை நினைவில் கொள்ளுங்கள்
மானுட அடையாளம் ஒன்று
இருக்கவேண்டும் அதில் கட்டாயம்
மனிதன் இல்லாத – இணையாத
எந்த வனப்பும் வனப்பில்லை
அவன் கலவாத எதிலும்ஜீவ உயிர்ப்பில்லை ….
–தேனரசன்
சொல்லும் பொருளும்
பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
நெடி – நாற்றம்
மழலை – குழந்தை
வனப்பு – அழகு
பூரிப்பு – மகிழ்ச்சி
மேனி – உடல்
பாடலின் பொருள்
கலையுலகப் படைப்பாளர்களே! மண்ணின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்களே! உங்களுக்கு ஒரு மனிதச் சமுதாயத்தின் வேண்டுகோள்!
நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீசவேண்டும். உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.
தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும். சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.
ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.
நூல் வெளி
தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும். மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
பாடப்பகுதியிலுள்ள கவிதை பெய்து பழகிய மேகம் என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மயிலும் மானும் வனத்திற்கு ________ தருகின்றன.
அ) களைப்பு
ஆ) வனப்பு
இ) மலைப்பு
ஈ) உழைப்பு
[விடை : ஆ. வனப்பு]
2. மிளகாய் வற்றலின் ________ தும்மலை வரவழைக்கும்.
அ) நெடி
ஆ) காட்சி
இ) மணம்
ஈ) ஓசை
[விடை : அ. நெடி]
3. அன்னை தான் பெற்ற ________ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
அ) தங்கையின்
ஆ) தம்பியின்
இ) மழலையின்
ஈ) கணவனின்
[விடை : இ. மழலையின்]
4. ‘வனப்பில்லை’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ________
அ) வனம் + இல்லை
ஆ) வனப்பு + இல்லை
இ) வனப்பு + யில்லை
ஈ) வனப் + பில்லை
[விடை : ஆ. வனப்பு + இல்லை]
5. ‘வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________
அ) வார்ப்எனில்
ஆ) வார்ப்பினில்
இ) வார்ப்பெனில்
ஈ) வார்பு எனில்
[விடை : இ. வார்ப்பெனில்]
நயம் அறிக.
ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச்சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.
1. பிரும்மாக்களே – சேர்ப்பவர்களே
2. உடைப்பவனின் – உழவனின்
3. சிகரங்களா – அலைகளா – காடுகளா – பள்ளத்தாக்குகளா -தோட்டங்களா
4. வனப்பில்லை – உயிர்ப்பில்லை
குறு வினா
1. தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை?
அன்பும் பாசமும் தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை ஆகும்.
2. ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?
இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப்பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.
சிறு வினா
1. சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
❖ நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.
❖ உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.
❖ தாயின் மகிழ்ச்சியான ஓவியத்தை வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்து இருக்க வேண்டும்.
❖ சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் பால் மணம் கமழ வேண்டும்.
❖ ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள் உள்ளிட்ட இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப்பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.
சிந்தனை வினா
1. நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?
நான் ஒரு ஓவியக்கலைஞராக இருந்தால் உயிரோட்டமுள்ள ஓவியங்களையும் மனித நேயச் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையிலும் மக்கள் விழிப்படைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்கான ஓவியங்களையும் உருவாக்குவேன்.
கற்பவை கற்றபின்
1. உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவல்களைத் திரட்டுக.
எனக்குப் பிடித்த கலை சிலம்பாட்டக் கலை. இது தமிழரின் தற்காப்புக் கலை. இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்பர். இது தடியைக் கையாளும் முறை. கால அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் எனப் பல கூறுகளைக்கொண்டது. சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக் கம்பியினால் தொடுதல் போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.
2. உழைப்பாளர்களின் பெருமையைக் கூறும் கவிதைகளைத் தொகுத்து எழுதுக.
“நீங்கள் சேற்றில் கால் வைத்தால் தான்
நாங்கள் சோற்றில் கைவைக்கமுடியும்”
“உழைப்பாளியின் வியர்வையே அமுதம்”
”உழைப்பாளிகளே பூமியின் கதிரவன்கள்”