Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 4

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 4

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்

துணைப்பாடம்: பள்ளி மறுதிறப்பு

நுழையும்முன்

ஒவ்வொரு மனிதனுக்கும் சில கடமைகள் உண்டு. அவை மனிதனின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப மாறுபடும். இளமைப்பருவம் கல்விக்கு உரியது. எனவேதான் “இளமையில் கல்” என்று ஔவையார் கூறினார். இளமையில் கற்கும் கல்வி ஒருவனைச் சான்றோனாக உருவாக்கும். எந்தக் காரணத்திற்காகவும் கல்வி கற்பதைக் தவிர்க்கக் கூடாது என்பதை உணர்த்தும் கதை ஒன்றைப் படிப்போம்.

பள்ளி மறுதிறப்புக்கு இரண்டு நாள்கள் இருந்தன. மதிவாணனுக்குக் கோடை விடுமுறை ஒன்றரை மாதமும் ஓடி விட்டது.

பேருந்து நிறுத்தம் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. “என்ன சிந்தனையடா, மதி?” மதிவாணனின் தோளைத் தொட்டபடி கேட்டான் கவின். சிறுவர்களால் நிரம்பி வழிந்தது பேருந்து நிறுத்தம். “ரெண்டு நாள்லே பள்ளி திறக்கப் போகுது” என்றான் மதிவாணன்.

“பள்ளிக்குப் போகணும்ங்கற கவலையா?”

“கவலையில்லடா, முடிவு பண்ணனும்”

“என்ன முடிவு?”

“பள்ளிக்குப் போறதா, இல்லே பின்னலாடை நிறுவனத்துக்குப் போறதான்னு…”

“நாங்கெளெல்லாம் பின்னலாடை நிறுவனத்துக்குத்தான். நான் முடிவு பண்ணிட்டேன்” என்றான் கவின்.

“எனக்குக் குழப்பம்”

“என்னடா குழப்பம்? வாராவாரம் சம்பளம். திரைப்படம் பாக்கக் காசு கிடைக்குது. சாயங்காலமானா பரோட்டா.. இடையில் போண்டா… வீட்ல யாரும் திட்டறதும் இல்லே. மகிழ்ச்சியாத்தானே இருக்கோம். இந்த மகிழ்ச்சி போதும்”

கோடை விடுமுறை தொடங்கியபோதும் இந்தக் குழப்பம் மதிவாணனுக்கு இருந்தது. நாலைந்து நாள்கள் அக்காவீடு, அத்தை வீடு போய் வந்தான். தொலைக்காட்சி பார்த்துப் பொழுது போக்கினான்.

நண்பன் கவின் ஒரு நாள் அழைத்தான். “சும்மாதானே இருக்கே. வாடா பின்னலாடை நிறுவனத்துக்குப் போகலாம். புதிய உடைகள், எழுதுகோல்கள், குறிப்பேடுகள், வாங்கப் பணம் சம்பாதிச்சுருவே. இந்த விடுமுறையிலே வீட்லேயும் சுமையா இருக்க வேண்டியதில்லே.. பின்னலாடை நிறுவனத்துக்கு ஆளு வேணும். வாடா..” என்றான்.

சரி என்று சேர்ந்துவிட்டான். ஒன்றரை மாதங்கள் ஓடிவிட்டன. பின்னலாடை நிறுவன வேலை புதுசாக இருந்தது. ஆடைகளை அடுக்கிக் கட்டும் வேலைதான்.

சனிக்கிழமை வாரச் சம்பளம். பத்து மணிக்கும் பிற்பகலிலும் வடை, தேநீர். இரவில் பரோட்டா, தோசை என்று சுவையாகச் சாப்பிட முடிந்தது. அம்மா அவனது சம்பளப் பணத்தைப் பத்திரமாக வைத்திருப்பதாய்ச் சொன்னார். செலவழிந்து போயிருந்தாலும் கொடுத்துவிடுவார். பள்ளி திறக்கும்போது நல்லா செலவு செய்யலாம்.

நல்ல சம்பளம் கிடைக்கிறது. பின்னலாடைக்குத் தேவை மிகுதியாக இருக்கிறது. எனவே வேலைக்குக் குறைவில்லை.

அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது வெளியில் அனுப்பி விடுகிறார்கள். ஒரு வேளை கண்டுபிடித்துவிட்டால், வயது பதினைந்து என்று சொல்லச் சொன்னார்கள். பின்னலாடை நிறுவனத்துக்குப் போய்க்கொண்டே இருந்தால் அவனும் குழந்தைத் தொழிலாளிதான். வாழ்க்கை முழுவதும் தொழிலாளிதான் என்பது நினைவுக்கு வந்தது.

தொழிலாளியாக இருப்பது கேவலம் இல்லை. ஆனால், படிக்கிற வயதில் வேலை தேவையா? மருத்துவர், பொறியாளர், வெளிநாட்டு வேலை என்று அவனுக்குள்ளும் கனவுகள் இருந்தன.

படித்தால் வேறு வேலை பார்க்கலாம். அதிகமான சம்பளம் கிடைக்கும். படித்துவிட்டுச் சொந்தமாகத் தொழிலும் செய்யலாம். அப்படி இல்லாமல் இந்த வயதிலிருந்து தொழிலாளியாகவே வாழ்க்கையைக் கடத்துவதா? சிந்தித்தான்.

கல்வியறிவு முதன்மையானது. ஒரு பட்டமாவது வாங்க வேண்டும். எதிரில் இருந்த விளம்பரப்பலகை கண்ணில் பட்டது. அதில் அம்பேத்கரும் அப்துல் கலாமும் தென்பட்டனர். இவர்களைப் போல் உயரவேண்டுமானால் படிப்பு வேண்டும். படிப்பில்லாமல் உயரமுடியுமா? படிப்பு அடிப்படைத் தேவை.

பள்ளிக்குப் போகவில்லை என்று சொன்னாலும் அப்பா “சரி” என்பார். ‘சம்பளம் வருதே’ என்பார். இந்தக் குறைந்த சம்பளத்திற்காகப் படிப்பைத் தொலைப்பதா? போண்டாவும் வடையும் பரோட்டாவும் வீட்டில் கிடைக்காது. அவற்றுக்கு அடிமையாவதா? தலையை உலுக்கிக் கொண்டான் மதிவாணன்.

வரும் பேருந்துகள் நிரம்பி வழிந்தன. ஒவ்வொரு நாளும் இப்படித்தான். மிகுதியான கூட்டம். பேருந்தில் நுழைவது ஒரு விளையாட்டுச் சாதனை. பின்னலாடை நிறுவனத்துக்குப் போனால் உடையெல்லாம் கசங்கி அழுக்காகி இருக்கும். இரவும் இதே நிலைதான். பேருந்து ஒன்று வந்தது. கூட்டம் பிதுங்கி வழிந்தது. கவின் மதிவாணனின் கையை இழுத்தான். “கூட்டந்தான். ஆனா போயிடலாம்.”

மதிவாணன் தன் அருகில் வந்து நின்ற முதியவரைப் பார்த்தான். முகம் இடுங்கி இருந்தது. மழிக்கப்படாத முகம். சோர்வாக இருந்தார். “இது நல்லூர் போகுமா?” என்று கேட்டார்.

மதிவாணன் வந்து நின்ற பேருந்தைப் பார்த்தான். முதியவரின் பார்வை அக்கம் பக்கமிருந்த சிறுவர்களின்மீது இருந்தது. “என்னப்பா, இது நல்லூர் போகுமா?”

அவர்களுள் ஒரு சிறுவன் பேருந்தின் முகப்பைக் கூர்ந்து கவனித்தான். எதுவும் பேசாமல் புன்முறுவல் வந்தது. 

“என்னப்பா போகுமா?” என்று மீண்டும் கேட்டார் அவர். 

“யாருக்குத் தெரியும்? எங்களுக்குப் படிக்கத் தெரியாதே” என்று கூறியபடி ஒரு சிறுவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். 

“சின்னப் பசங்களா இருக்கீங்க. இதுகூட படிச்சுச் சொல்லத் தெரியாதா?”

ஒருவன் வெறுப்புடன் இடைமறித்தான். “பெரியவரே… இதப் படிக்கக்கூட உங்களுக்குத் தெரியாதா…?” ‘ஓ…’வென்று கேலியான ஓசை வந்தது. சிரித்தார்கள்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்தான் மதிவாணன். அவர் அருகே சென்றான். “இந்தப் பேருந்து நல்லூர் போகாதுங்க. நல்லூர் பேருந்து வந்தா சொல்றேன்” என்றான்.

“சரி தம்பி “.

முதியவருக்குப் படிப்பு இல்லை. பேருந்தில் எழுதி இருப்பதைப் படிக்க முடியவில்லை. இந்த வயதிலும் அவமானப்படுகிறார். கல்வியறிவு இல்லாமல் போய்விட்டால் நானும் இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் அவமானப்படவேண்டும். நல்ல கல்வியறிவு தலைநிமிர்ந்து நிற்க வைக்கும். நல்ல படிப்புதான் சிறந்த மனிதனாக்கும் என்ற எண்ணம் வந்தது. 

பேருந்துகளின் ஓசை காதை அடைத்தது. விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினான். 

“டேய்!” குரல் கவினிடமிருந்து வந்தது. 

“எங்கடா போறே?” 

“பள்ளிக்கு” 

“பள்ளி திறக்கறதுக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கே” 

“பள்ளிக்குப் போறேண்டா”

சாலையைக் கடந்தபோது மதிவாணனுக்குப் பெருமூச்சு வந்தது. இறக்கைகளைக் கட்டிக்கொண்டு பறப்பது போல் இருந்தது. இப்படியே பறந்துபோய் யாருமில்லாத பள்ளியை வேடிக்கை பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

நூல் வெளி

இக்கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன். இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்; கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார். பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா 

மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.

(அல்லது) 

‘பள்ளி மறுதிறப்பு’ சிறுகதையினைச் சுருக்கி எழுதுக. 

முன்னுரை

சுப்ரபாரதிமணியன் இயற்றிய ‘பள்ளி மறுதிறப்பு’ சிறுகதையில் மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கமாகக் காண்போம். 

மதிவாணனும் கவினும்

மதிவாணனும் கவினும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். கோடைவிடுமுறையில் ஒன்றரை மாதம் இருவரும் பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றனர். பள்ளி மறுதிறப்புக்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. வேலைக்குச் செல்வதற்காக இருவரும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர். கவின் தான் மீண்டும் பள்ளிக்குப் போவதில்லை. வாராவாரம் சம்பளம், திரைப்படம் பார்க்க காசு, பரோட்டா, போண்டா, வீட்டில் யாரும் திட்டுவதில்லை. இந்த மகிழ்ச்சி போதும் என்றான். மதிவாணனும் சற்றே குழம்பினான். 

மதிவாணனின் சிந்தனை

படிக்கின்ற வயதில் வேலை தேவையா? மருத்துவர், பொறியாளர், வெளிநாட்டு வேலை என்று மதிவாணன் உள்ளும் கனவுகள் இருந்தன. தொழிலாளியாகவே கடைசி வரைக்கும் இருக்க வேண்டுமா என்பதை நன்கு சிந்தித்தான். எதிரில் இருந்த விளம்பரப் பலகையில் அம்பேத்கரும் அப்துல் கலாமும் தென்பட்டனர். இவரைப் போல உயர வேண்டும் என்றால் படிப்பு தேவை என்பதை நன்கு உணர்ந்தான்.

படிக்காதவரின் நிலை

பேருந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவர். அங்கிருந்த சிறுவர்களிடம், இந்தப் பேருந்து நல்லூர் செல்லுமா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் அந்தப் பெரியவர் கேட்டார். சிறுவர்கள் எங்களுக்குப் படிக்கத் தெரியாது என்றனர். இது கூடப் படிக்கத் தெரியாதா என்றார் பெரியவர். அதற்கு ஒருவன் ஏன் உங்களுக்குப் படிக்கத் தெரியாத என்று கேட்டு, அனைவரும் சிரித்தனர். மதிவாணன் அவரிடம் நல்லூர் இது போகாது. போகும் பேருந்து வரும் போது சொல்கின்றேன் என்றான்.இதையெல்லாம் பார்த்து கல்வி தான் தலைநிமிரச் செய்யும் என்பதை உணர்ந்து, பள்ளியை நோக்கி நடந்தான் மதிவாணன்.

முடிவுரை

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதைப் புரிந்து கொண்டு இளமையில் மதிவாணன் கல்வி கற்க விருப்பம் கொண்டான். இன்று கிடைக்கும் பணத்தை விட நாளை கிடைக்கும் மதிப்புக்காக இன்றே கல்வி கற்க வேண்டும்.

கற்பவை கற்றபின்

1. பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.

2. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள் ? வகுப்பில் கலந்துரையாடுக. 

❖ எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுதப்படிக்கச் சொல்லித் தருவேன். 

❖ எழுதப்படிக்கத் தெரியாத ஒரே காரணத்திற்காக, தன்மானம் இழந்த நிலை போக்க அவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுத் தருவேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *