தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம்
கவிதைப்பேழை: கலங்கரை விளக்கம்
நுழையும்முன்
கடலும் கடல்சார்ந்த இடமும் தமிழரின் வாழ்நிலங்களுள் ஒன்று. கடலோடு வாழ்ந்த தமிழர், தம் தொழில்நுட்ப அறிவால் கலம் படைத்து, அதனைக் கொண்டு மீன்பிடித்தும், வணிகம் செய்தும் வாழ்ந்து வந்தனர். கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே கலங்கரை விளக்கம். அது குறித்துச் சங்கப் பாடல் விளக்குவதைக் காண்போம்.
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை*……
– கடியலூர் உருத்திரங் கண்ணனார்
சொல்லும் பொருளும்
மதலை – தூண்
ஞெகிழி – தீச்சுடர்
அழுவம் – கடல்
வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்
சென்னி – உச்சி
உரவுநீர் – பெருநீர்ப் பரப்பு
கரையும் – அழைக்கும்
பாடலின் பொருள்
கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது; ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது; வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது. அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறைமுகம் அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறைமுகம் நோக்கி அழைக்கிறது.
நூல் வெளி
கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர். இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.
தெரிந்து தெளிவோம்
பத்துப்பாட்டு நூல்கள்
1. திருமுருகாற்றுப்படை
2. பொருநராற்றுப்படை
3. பெரும்பாணாற்றுப்படை
4. சிறுபாணாற்றுப்படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக்காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப்பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வேயா மாடம் எனப்படுவது ________
அ) வைக்கோலால் வேயப்படுவது
ஆ) சாந்தினால் பூசப்படுவது
இ) ஓலையால் வேயப்படுவது
ஈ) துணியால் மூடப்படுவது
[ விடை : ஆ. சாந்தினால் பூசப்படுவது]
2. உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) காற்று
ஆ) வானம்
இ) கடல்
ஈ) மலை
[விடை : இ. கடல்]
3. கடலில் துறை அறியாமல் கலங்குவன —————–
அ) மீன்கள்
ஆ) மரக்கலங்கள்
இ) தூண்கள்
ஈ) மாடங்கள்
[விடை : ஆ. மரக்கலங்கள்]
4. தூண் என்னும் பொருள் தரும் சொல்
அ) ஞெகிழி
ஆ) சென்னி
இ) ஏணி
ஈ) மதலை
[விடை : ஈ. மதலை]
குறு வினா
1. மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?
மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது : கலங்கரை விளக்கின் ஒளி.
2. கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?
கலங்கரை விளக்கில் இரவுநேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.
சிறு வினா
1. கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகள் யாவை?
❖ கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிக்கொண்டு இருக்கும் தூண் போலத் தோற்றம் அளிக்கின்றது.
❖ அது ஏணி கொண்டு ஏறமுடியாத அளவுக்கு உயரத்தைக் கொண்டு இருக்கின்றது.
❖ வைக்கோல் ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது.
❖ அம் மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை (எல்லை) அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை (எல்லை) நோக்கி அழைக்கின்றது.
சிந்தனை வினா
1. கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
❖ கடல் ஆய்வு செய்பவர்கள்
❖ மீனவர்கள்
❖ கப்பற் படை வீரர்கள்
❖ கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்
கற்பவை கற்றபின்
1. கடற்கரைக்குச் சென்று அங்குள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்க.
கடற்கரை காட்சிகள் (மெரினா)
❖ உலகிலேய இரண்டாவது பெரிய கடற்கரை மெரினாக் கடற்கரை.
❖ சென்னைத் துறைமுகத்தை உள்நாட்டு, வெளிநாட்டுக் கப்பல்கள் அணிவகுத்து வருகின்றன.
❖ அவை நங்கூரம் பாய்ச்சி நிற்கும் அழகு அருமை.
❖ மீன்பிடிக்கச் சென்று மீண்டுவரும் மீனவர்கள் படகுகள் கம்பீரமாய் காட்சியளிக்கின்றன.
❖ காலை நோக்கி வரும் கடல் அலைகள் பிடிக்கமுடியாத மாயமான்கள்.
❖ கடலைக் கண்டு மகிழ மக்கள் கூட்டம் ஏராளம்.
❖ சங்குகளும், சிப்பிகளும் கடற்கரையில் கொட்டிக்கிடக்கின்றது.
2. ‘கலங்கரை விளக்கம்’ – மாதிரி ஒன்று செய்து வருக.
மாணவர் செயல்பாடு
3. கடலும், கலங்கரை விளக்கமும் – ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுக.
விடுகதைகள்
21. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும், ஒரு தூசி கிளம்பாது. அது என்ன? எறும்புகள்
22. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன? வியர்வை
23. வேகாத வெய்யிலில் வெள்ளையப்பன் விளைகின்றான். அது என்ன? உப்பு
24. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன? குளிர்
25. ஒற்றைக் கால் குள்ளனுக்கு எட்டு கை. அது என்ன? குடை