Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 4

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 4

தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ்

துணைப்பாடம்: சொலவடைகள் (பொம்மலாட்டம்)

நுழையும்முன்

சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை. இவை பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும். பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை நாட்டுப்புற மக்களும் தம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்துவது தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய தனிச்சிறப்பாகும். சொலவடைகளுடன் கூடிய நாட்டுப்புறக் கதை ஒன்றைப் பொம்மலாட்டமாகப் பார்ப்போம்.

கதைசொல்லி : பெரியோர்களே! தாய்மார்களே! குழந்தைகளே! நாம இன்னிக்கு ‘ஆளுக்கு ஒரு வேலை’ என்னும் கதையைப் பொம்மலாட்டமாப் பாக்கப் போறோம்.

இந்தப் பையன்தான் நம்ம கதைநாயகன். இவன் ஒழுங்காப் பள்ளிக்கூடம் போகாம ஊரைச் சுத்திக்கிட்டு வருவான். அவங்க அம்மா எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கல. புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா? அவனோடப் புடிவாதத்தை யாராலும் மாத்த முடியல. ஒருநாள் அப்பா பையனக் கூப்பிடுறாரு.

அப்பா : அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது. இப்ப நீ சரியா படிக்கலன்னா வாழ்க்கையில முன்னேற முடியாது. ஒழுங்காப் பள்ளிக்கூடம் போயி படிக்கிற வேலையைப் பாரு.

பையன் : படிக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

கதைசொல்லி : வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப் பகைங்கிற மாதிரி இந்தப் பயகிட்ட போராடித்தான் படிக்க வைக்கணும். எறும்பு ஊரக் கல்லும் தேயுங்கிற மாதிரி இவனைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தணும்னு நினைக்குறாரு அவங்க அப்பா. பொறுமையா அறிவுரை சொல்றாரு. ஆனா பையன் கேக்கல.

பையன் : போப்பா, பள்ளிக்கூடம் போற வேலையெல்லாம் எனக்கு ஒத்து வராது.

கதைசொல்லி : அப்பாவுக்குக் கோபம் வருது. சத்தம் போடுறாரு. சத்தம் கேட்டு அம்மா வெளியே வராங்க.

அம்மா : ராசா, உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும். நீ படிக்கலன்னா ஊர்ல யாரும் மதிக்கமாட்டாங்க. அதனால நீ பள்ளிக்கூடம் போயி நல்லாப் படிச்சுக்க.

கதைசொல்லி : அடை மழை விட்டாலும் செடி மழை விடாதுங்கிற மாதிரி அப்பா விட்டாலும் அம்மா விடமாட்டாங்க போல இருக்குன்னு நெனச்சுப் பையன் பள்ளிக்கூடத்துக்குப் போறான். அவனுக்குப் படிக்கப் பிடிக்கல. நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டமுங்கிற மாதிரிப் பள்ளிக்கூடத்தை விட்டு ஓட்டம் பிடிக்குறான். விளையாட யாராவது கிடைப்பாங்களான்னு பார்க்குறான். அங்கே எறும்பு ஒண்ணு போய்கிட்டு இருக்கு.

பையன் : எறும்பே! எறும்பே! என் கூட விளையாட வர்றியா?

எறும்பு : போ! போ! உனக்குத் தான் வேலை இல்ல. குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம். எனக்கு நெறைய வேல கிடக்கு. நான் எங்குழந்தைகளுக்குத் தீனி கொடுக்கணும். அரிசி, நொய் எல்லாம் சேகரிக்கணும். சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா? நான் கிளம்புறேன். நீ அதோ பறக்குதே அந்தத் தேனீகூடப் போய் விளையாடு.

பையன் : தேனீ! தேனீ! நீ என் கூட விளையாட வர்றியா?

தேனீ : நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா? உனக்குத்தான் வேலை இல்லை. ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும். உன்னைப் போல ஒரு ஆளு இருந்தா எங்கக் கூட்டமே கெட்டுப் போயிடும். எனக்குத் தேன் எடுக்குற வேலை இருக்கு. போ! போ!

பையன் : உங்க கூட்டத்தில ஆயிரம் தேனீ இருக்கே, நீ ஒரு ஆளு தேன் எடுக்கலன்னா என்ன கொறைஞ்சா போயிடும்?

தேனீ : ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும். பூவெல்லாம் குறுகி மூடுறதுக்குள்ள நான் தேனெடுக்கப் போகணும்.

கதைசொல்லி : தேனீயும் போயிடுது. பையன் கொஞ்சம் தூரம் நடக்குறான். ஒரு வீட்டு வாசலில் பொதிமாடு ஒண்ணு நின்னுக்கிட்டு இருக்கு.

பையன் : மாடே! மாடே! சும்மாதானே இருக்கே. ஏங்கூட விளையாட வாரியா?

மாடு: என்னது! சும்மா இருக்கிறேனா? காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும். இப்போ உனக்குத்தான் வேலை இல்லை. இருப்பவனுக்குப் புளியேப்பம்; இல்லாதவனுக்குப் பசியேப்பம். நான் என் முதலாளிக்கு உப்புமூட்டை, புளிமூட்டை எல்லாம் சுமக்கணும். நான் வரல. நீ அதோ அந்த ஆமைகிட்ட போய் விளையாடு.

பையன் : ஆமையே! ஆமையே! நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம் என்கிற மாதிரி எங்கே வேகமாகப் போயிட்டு இருக்கே? ஏங்கூட விளையாட வாரியா?

ஆமை : என்னைவிட வேகமாக ஓடுற முயலோட போட்டி வச்சிருக்கேன். அவப்பொழுது போக்குவதிலும் (வீணாகப் பொழுதுபோக்குதல்) தவப்பொழுது நல்லதும்பாங்க. நான் கொஞ்ச நேரம் கூட வீணாக்காமல் நடந்தே ஆகணும்.

பையன் : பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா? நீ ஓடி ஓடிப் பார்த்தாலும் முயலை முந்த முடியுமா?

ஆமை : அதிர அடிச்சா உதிர விளையும். அது மாதிரி முயற்சி செஞ்சா எல்லாம் முடியும். நீ வேணும்னா அதோ அங்கே படுத்திருக்கிற முயல் கூடப் போய் விளையாடு.

கதைசொல்லி : பையன் கொஞ்ச தூரத்தில் படுத்திருகிற முயல் கிட்டப் போறான்.

பையன் : முயலே! முயலே! குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலாங்கிற மாதிரி கவலையே இல்லாம படுத்திருக்கியே, வா விளையாடலாம்.

முயல் : அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்னு சொல்லுற மாதிரி, நிழலில் படுத்துத் தூங்கினதால போன தடவை ஆமையிடம் தோத்துப் போய்ட்டேன். இந்தத் தடவையாவது நான் முந்தி ஆகணும். அதனால நான் வேகமா ஓடணும். நீ வேணும்னா அதோ அங்கே இருக்குற குட்டிச்சுவரு கூடப் போய் விளையாடு.

கதைசொல்லி : அந்தப் பையன் கார்த்திகை மாசம் பிறைய கண்ட மாதிரி விளையாட ஆள் கிடைச்சிடுச்சுனு நினைச்சு அந்தக் குட்டிச் சுவரு மேலே ஏறிக் குதிச்சுக் குதிச்சு விளையாடுறான். அது ரொம்பப் பழைய சுவரு. மழையிலவேற நல்லா ஊறி இருக்கு. இவன் ஏறிக் குதிச்சதும் பொல பொலன்னு இடிஞ்சு விழுது. அதுல இருந்த பூச்சி, எறும்பு, வண்டு எல்லாம் வெளியில வருது.

எறும்பு : அடப்பாவி, நாங்களே அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்லனு நினைச்சு தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம இருக்கோம். உனக்குத்தான் வேலை இல்லைன்னா நாங்க பாடுபட்டுச் சேர்த்து வச்ச பொருளை எல்லாம் இப்படிப் போட்டு உடைச்சிட்டியே!

கதைசொல்லி : எறும்பு, பூச்சி எல்லாம் கோபத்தோட அவன் கையில கால்ல ஏறி நறுக்கு நறுக்குன்னு கடிக்குதுக. அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாதுன்னு அந்தப் பையன் வலி பொறுக்க முடியாம கத்திக்கிட்டு ஓடுறான். அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான் என்கிற மாதிரி காட்டுலயும் மேட்டுலயும் ஏறி விழுந்து வீட்டுக்கு ஓடி வந்து சேருறான்.

பையன் : அம்மா! அம்மா! ஊரு உலகத்துல எல்லாரும் அவங்க அவங்க வேலையப் பாக்குறாங்க. ஈ எறும்பு கூடச் சும்மா இல்லாம வேலை செய்யுதுக. எனக்கு இப்பத்தான் புத்தி வந்தது. என்னோட வேல படிக்கிறதுன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு. இனிமே நானும் சும்மா இருக்காம, ஒழுங்காப் பள்ளிக்கூடம் போயிப் படிப்பேன்.

கதைசொல்லி : அதுக்குப்பிறகு அந்தப் பையன் நல்லபடியா படிக்கத் தொடங்கறான். ஆளுக்கு ஒரு வேலைன்னு எல்லாருக்கும் புரிய வைக்கிறான். இத்தோட கதை முடியுது. இதுவரைக்கும் பொறுமையா இருந்து பொம்மலாட்டத்தைப் பார்த்த உங்கள் எல்லாருக்கும் நன்றி… நன்றி… நன்றி!

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

பாடப்பகுதிப் பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.

‘ஆளுக்கு ஒரு வேலை’ 

முன்னுரை:

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் ‘ஆளுக்கு ஒரு வேலை’ என்னும் பொம்மலாட்டக் கதை நிகழ்வைச் சிறுகதை வடிவில் காண்போம்.

பையனின் பிடிவாதமும் பெற்றோர் அறிவுரையும்:

அம்மா, அப்பா, பையன் என சிறுகுடும்பம் ஒன்றுள்ளது. அக்குடும்பத்தில் உள்ள பையன் ஒழுங்காகப் பள்ளிக் கூடம் செல்லாமல் ஊர்சுற்றிக் கொண்டே இருப்பான். யார் அறிவுரை கூறினாலும் கேட்காத பிடிவாத குணம் கொண்டவன். அவனது பிடிவாதத்தை யாராலும் மாற்ற முடியாது. ஒரு நாள் அப்பா அந்தப் பையனிடம், ‘இப்பொழுது நீ படிக்கவில்லை என்றால் வாழ்க்கையில் முன்னேற முடியாது, பள்ளிக்கூடம் போய் படி’ என்றார். அம்மாவும்,’ படிக்கவில்லையென்றால் யாரும் மதிக்கமாட்டார்கள்’ என்றார். அவன் வேண்டா வெறுப்பாகப் பள்ளிக்கூடம் சென்றான். 

விளையாட அழைத்தல்

வழக்கம் போலவே பள்ளிக் கூடத்தை விட்டு ஓட்டம் பிடிக்கின்றான். விளையாட யாராவது வருவார்களா? என்று பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது எறும்பு ஒன்று வந்தது. அதனை விளையாடக் கூப்பிட்டான். ஆனால் அது தன் குழந்தைகளுக்குத் தீனி கொடுக்க வேண்டும். அரிசி, தவிடு சேகரிக்க வேண்டும். உனக்குத் தான் வேலை இல்லை என்றது. பிறகு தேனீ, பொதிமாடு, ஆமை, முயல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக விளையாடக் கூப்பிட்டான். அவனுக்குப் புத்தி புகட்டும் வண்ணம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவை விளையாட மறுத்து விட்டன. 

மனமாற்றம்

ஈரமான குட்டிச் சுவர் மீது அவன் அமர்ந்தான். சுவர் இடிந்து, அதிலிருந்த பூச்சி, எறும்பு, வண்டு ஆகியன ‘உனக்குத் தான் வேலை இல்லை, நாங்கள் சேர்த்த பொருளை எல்லாம் உடைத்து விட்டாயே!’ என்றுச் சொல்லி அவனைக் கடித்தன. மனம் மாறிய பையன் தன் அம்மாவிடம், ‘உலகத்தில் ஈ, எறும்பு கூட சும்மா இல்லாமல் வேலை செய்கின்றன. படிப்பது தான் என் வேலை என்பதைப் புரிந்து கொண்டேன். இனி ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்கின்றேன்’ என்றான். 

முடிவுரை

‘ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை உண்டு. மாணக்கர்களுக்குப் படிப்பது மட்டும் தான் நம் வேலை’ என்பதை இக்கதையின் மூலம் நாம் அறிய முடிகின்றது.

கதை உணர்த்தும் நீதி : படி ! முதற்படி! அதுவே வாழ்க்கைப் படி! |

கற்பவை  கற்றபின்

1. உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக. 

1. வீட்டுக்கு வீடு வாசற் படி. 

2. வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார். 

3. அடிச்சு வளக்காத புள்ளயும் ஒடிச்சு வளக்காத முருங்கையும் உருப்படாது. 

4. எறச்ச கிணறு ஊறும். 

5. நாய் வித்த காசு கொலக்கவா செய்யும். 

6. ஊராரு புள்ளய ஊட்டி வளத்தா தன்புள்ள தன்னால வளரும். 

7. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. 

8. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். 

9. காணி சோம்பல், கோடி கேடு. 

10. மானேண்ணா புள்ளி கொறயுமா? மயிலேண்ணா எறகு உதிறுமா?

2. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் எவையேனும் ஐந்தனைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.

(எ.கா) குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா என்பது போல் என் நண்பன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தான். 

1. எறும்பு ஊரக் கல்லும் தேயும் : 

மாணவர்களிடம் ஆசிரியர் எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல தீய பழக்கங்களின் கொடுமையினைக் கூறி மனமாற்றம் அடையச் செய்வார். 

2. சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா? 

கற்பனையில் மிதந்து இருப்பவர்கள் சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா? என்பதை உணர வேண்டும். 

3. அதிர அடிச்சா உதிர விளையும் :

அதிர அடிச்சா உதிர விளையும் என்பது போல வாழ்வில் முன்னேற தொடர் முயற்சி செய்தால் போதும். 

4. காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தான் தெரியும் : 

காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தான் தெரியும் என்பது போல உழைப்பவருக்குத் தான் பணத்தின் அருமை தெரியும். 

5. பாடிப்பாடி குத்தினாலும் பதறு அரிசி ஆகுமா? 

தீயவன் கோடி ரூபாயைக் கோவில் உண்டியலில் போடுவது பாடிப்பாடி குத்தினாலும் பதறு அரிசி ஆகுமா? என்பது போலப் புண்ணியம் கிடைக்குமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *