Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Wonders of Nature

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Wonders of Nature

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 5 : வியத்தகு இயற்கை

அலகு 5

வியத்தகு இயற்கை

நீங்கள் கற்க இருப்பவை

* வியத்தகு இயற்கை-தாவரங்கள் மற்றும் விலங்குகள்

* மலர்களின் நிறமும் மணமும்

வியத்தகு இயற்கை – தாவரங்கள்

இயற்கை வியப்பான பல அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. அவற்றுள் சிலவற்றைக் குறித்து தெரிந்து கொள்வோமா!

அல்லி

அல்லி இலைகளின் மேல் நீர் தேங்குவதில்லை / ஒட்டுவதில்லை, ஏனெனில் அல்லி இலைகளின் மேற்பரப்பில் மெழுகுப்படலம் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இலைக்காம்பு பகுதியில் வெட்டுப்பட்ட பள்ளம் போன்ற அமைப்பும் காணப்படும். இந்த அமைப்பும் மெழுகுப்படலமுமே நீரானது இலையின் மேல் தேங்காமல் இருப்பதன் காரணம் ஆகும்.

மண்ணிற்கு / தரைக்கு அடியில் காணப்படும் கொட்டைகள்

பொதுவாக, கொட்டைகள் / காய்கள் தாவரத்தின் தண்டுப்பகுதியில் காணப்படும். ஆனால், வேர்க்கடலைத் தாவரத்தில் கொட்டைகள் மண்ணிற்கு அடியில் காணப்படும்.

கொட்டைகளை விதைகள் என்றும் கூறலாம்.

குறிஞ்சி

குறிஞ்சி அல்லது நீலக்குறிஞ்சி ஒரு புதர் வகைச்செடி. இது தமிழ்நாட்டில் ஊட்டியில் உள்ள நீலகிரி மலையில் காணப்படுகிறது.

நீலக்குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும்.

இம்மலர்கள் ஊதா நீல வண்ணத்தில் காணப்படும். எனவே, இந்த மலைப்பகுதி நீலகிரி எனப் பெயர் பெற்றது.

தொட்டாற் சிணுங்கி 

இந்தத் தாவரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இது பெரும்பாலான இடங்களில் காணப்படும் சிறு செடி வகை. இத்தாவரத்தின் இலைகளை நாம் தொட்டால் அவை உடனடியாக மூடிக்கொள்ளும். எனவேதான் இதனைத் தொட்டாற் சிணுங்கி தாவரம் என அழைக்கிறோம். ஆனாலும் மூடிய இலைகள் சில நிமிடங்களில் விரிந்து விடும்.

எருக்கு

எருக்கு புதர்ச்செடி வகையைச் சார்ந்தது. இத்தாவரம் மெழுகுப்பூச்சு கொண்ட கொத்தான மலர்களைக் கொண்டிருக்கும். இதன் மலர்கள் வெள்ளை அல்லது ஊதா நிறத்தில் கிரீடம் போன்று காணப்படும். எனவே, இது கிரீட மலர் எனப்படுகிறது.

எருக்கு இலையை வரைந்து வண்ணம் தீட்டுக.

மலர்களின் நிறமும் மணமும்

மலர்கள் அழகான வண்ணமும் நறுமணமும் கொண்டவை. இவை பூச்சிகளைத் தம்பால் ஈர்க்கின்றன. பூச்சிகள் மலர்களின் நண்பர்கள். மலர்களில் தேன் சுரப்பிகள் காணப்படுகின்றன. இதிலுள்ள தேனை உறிஞ்சவே பூச்சிகளும் பறவைகளும் மலர்களை நாடி வருகின்றன.

இரவில் மலரும் பெரும்பான்மையான மலர்கள் வெள்ளை நிறத்திலும், அதிக மணத்துடனும் / வாசனையுடனும் காணப்படும்.

பகலில் மலரும் மலர்கள் கண்ணைக் கவரும் பல வண்ணங்களிலும் குறைவான நறுமணத்துடனும் காணப்படும்.

புள்ளிகளை இணைத்து படத்திற்கு வண்ணம் தீட்டுக.

வியத்தகு இயற்கை – விலங்குகள்

பச்சோந்தி

படத்தில் காணும் விலங்கைப் பார்த்திருக்கிறீர்களா? இதுதான் பச்சோந்தி. இது பல்லி இனத்தைச் சார்ந்தது. பச்சோந்தி தான் இருக்கும் சுற்றுப்புறத்திற்கு ஏற்றாற்போல் தன் தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது. இந்த நிறம் மாறும் தன்மையால் இது எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது.

பல்லி

பல்லி மேற்கூரையில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? பல்லிகளின் கால் விரல்களில் காணப்படும் விரல் பட்டைகளின் உதவியால் அவை சுவரில் / கூரையில் இருந்து கீழே விழாமல் ஒட்டிக் கொண்டுள்ளன. பல்லியின் வால் துண்டிக்கப்பட்டால் மீண்டும் ஒன்று அல்லது இரண்டு (ஓரிரு) மாதத்திற்குள் வளரக்கூடிய சிறப்புத்தன்மை உடையது.

சிலந்தி

பூச்சிகளுக்கு ஆறு கால்கள் மட்டும்தான் உண்டு என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சிலந்தி பூச்சி வகையைச் சார்ந்தது அன்று. ஏனெனில் இதற்கு எட்டு கால்கள் உள்ளன. சிலந்தி நூல் போன்ற இழையை ( சிலந்தி பட்டு ) உருவாக்கி, சிலந்தி வலையைப் பின்னுகிறது. இந்த இழைகள் மிகவும் வலிமையானவை. மேலும் ஒட்டும் தன்மை உடையவை. இந்த வலையின் உதவியுடன் பூச்சிகளைப் பிடித்து இரையாக்கிக் கொள்கிறது.

நாய்

நாய் நம்மை விட அதிக மோப்ப சக்தி / நுகரும் திறன் கொண்டது. இவை வெகு தொலைவில் கேட்கும் மிக நுண்ணிய ஒலிகளையும் உணரும் தன்மை கொண்டவை. காவல் துறையில் திருடர்களைக் கண்டுபிடிக்க நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை நாய்கள் “மோப்ப நாய்கள்” எனப்படுகின்றன. இவை நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களில் சிக்கிய மனிதர்களைக் கண்டறியவும் பயன்படுத்தப்படுகின்றன.

எலி

எலி வீடு மற்றும் வயல்களில் வாழும் சிறிய விலங்கு. இது ஒட்டகத்தை விட அதிக நாள் நீர் இல்லாமல் வாழக் கூடியது. கடினத்தன்மை உடைய மரக்கட்டைகளையும் தன்னுடைய பற்களால் கடித்துவிடும். எலியின் சில பற்கள் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். அவை பெரிதாக வளர்ந்து விடாமல் இருக்க எலிகள் எப்பொழுதும் பற்களை கொறித்துக் கொண்டேயிருக்கும்.

நத்தை

நத்தையின் தலைப்பகுதியில் இரண்டு இணை உணர் நீட்சிகள் காணப்படும். அவற்றுள் ஒன்று நீண்டதாகவும், மற்றொன்று குட்டையாகவும் இருக்கும். நீண்ட உணர்நீட்சியில் கண்கள் காணப்படும். நாம் நத்தையைத் தொட்டால் ஆமையைப்போல தன் உடல் பகுதியை ஓட்டிற்குள் இழுத்துக்கொள்ளும்.

பல்வேறு வகையான விலங்குகளைக் கண்டுபிடித்து எண்ணி எழுதுக.

மதிப்பீடு

1. பாகங்களைக் குறிக்க. (வெட்டுப்பட்ட பள்ளம் போன்ற அமைப்பு, உணர் நீட்சி)

2. கோடிட்ட இடங்களை நிரப்பி எந்தத் தாவரம் அல்லது விலங்கு எனக் கண்டுபிடிக்க.

நான் மலையில்  மலர்வேன். (மலையில் / பாலைவனத்தில்)

நான் ஊதா நீல நிறத்தில் இருப்பேன். ( பழுப்பு / ஊதா நீல )

என்னால் தான் நீலகிரி  ( நீலகிரி / ஏலகிரி ) என்ற பெயர் உருவானது.

நான் யார்? குறிஞ்சி

எனக்கு இரண்டு இணை உணர்நீட்சிகள் உள்ளன. ( இரண்டு / நான்கு )

என்னுடைய கண்கள் உணர்நீட்சியில் ( உணர்நீட்சியில் / வாலில் ) காணப்படும்.

நான் என் உடலை என்னுடைய கூட்டினுள் இழுத்துக்கொள்வேன்.

நான் யார்?  நத்தை

3. பொருத்துக.

4. சரியான சொற்களைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. வேர்க்கடலை தாவரத்தில் கொட்டைகள் மண்ணிற்கு அடியில் காணப்படும். (அடியில் / மேல்)

.2. எருக்குத் தாவரத்தின் மலர்கள் கிரீடம் வடிவில் காணப்படும்.

( கிரீடம் / கோள )

3. பூச்சிகள் மலரிலிருந்து தேனை உறிஞ்சுகின்றன. ( தேனை / பாலை )

4. சிலந்தி ஒரு பூச்சி அல்ல. ( தேனீ / சிலந்தி )

5. பல்லியின் வால் துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் வளரும். ( பல்லியின் / நாயின்)

5. மலர்கள் மற்றும் விலங்கின் பெயரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(மல்லிகை / எருக்கு) (சிலந்தி / நத்தை) (வெட்சிப் பூ / சங்கு பூ)

தன் மதிப்பீடு

* என்னைச் சுற்றியுள்ள வியத்தகு தாவர மற்றும் விலங்குலக இயற்கையை உற்றுநோக்கி வியந்தேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *